பாவம் செய்யாதே!
தியானம்: 2026 மார்ச் 28 சனி | வேத வாசிப்பு: யோவான் 8:1-11

இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார் (யோவான் 8:11).
ஞாயிறுதோறும் நாம் பாவ அறிக்கை செய்வது வழக்கம். சிலர் அனுதினமும் தமது ஜெபங்களில் பாவ அறிக்கை செய்வதுண்டு. இதன் கருத்து என்ன? அப்படியானால் நாம் எப்பவும் பாவம் செய்துகொண்டே இருக்கிறோமா? எப்போதும் அறிக்கையிட சந்தர்ப்பம் அமைவதால் எப்போதும் பாவத்தையே செய்துகொண்டும் இருக்கலாமா?
“நான் பரிசுத்தர்; ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக” (லேவி.11:45) என்று கர்த்தர் கட்டளையிட்டுள்ளார். “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலே யும் பரிசுத்தராயிருங்கள்” (1பேது.1:15) என்று பேதுரு எழுதுகிறார். எனவே, நாம் பாவம் செய்கின்ற, அல்லது பாவத்திலே விழுந்துகொண்டு இருக்கின்ற ஒரு வாழ்வு வாழ அழைக்கப்படவில்லை, பரிசுத்தமாய் வாழும் ஒரு வாழ்வுக்கே அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெளிவு.
விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கொண்டுவந்து இயேசுவின் முன்பாக நிறுத்தி, மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி அவள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்றனர். ஆனால், அவளோடு விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆணையோ காணவில்லை. இயேசுவும், “உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை வீசட்டும்” என்று சொல்லி தரையிலே குனிந்து எழுதியபோது யாவரும் அவ்விடம் விட்டுக் கலைந்து சென்றனர். இயேசுவும் அவளை நோக்கி: “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ இனிப் பாவஞ் செய்யாதே” என்றார். “திரும்பவும் அந்தப் பாவமான வாழ்வுக்குள்ளே செல்லாதே” என்பதுதான் ஆண்டவர் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த கட்டளையின் அர்த்தமாகும்.
நாம் பாவ அறிக்கையை உணர்ந்து செய்கிறோமோ, இல்லையோ, இன்று நமக்கும் ஆண்டவர் கொடுக்கும் கட்டளை இதுதான். “இனிப் பாவஞ்செய்யாதே.” கிழமை முழுவதும் பாவத்தைச் செய்துவிட்டு, ஞாயிறு தோறும் அறிக்கை செய்ய வரும்படிக்கு ஆண்டவர் சொல்லவில்லை. தேவன் நம்மை மன்னிக்கும்படிக்கு கிருபை பெருத்தவராய் இருக்கிறார். அதற்காக கிருபை பெருகும்படிக்கு பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா, கூடாதே என்று பவுல் ரோமருக்கு எழுதுகிறார். பிரியமானவர்களே, பாவம் செய்யும் சுபாவம் நமக்குள் இருந்தாலும், பாவத்தை ஜெயிக்க பெலன் தருகின்ற இயேசு நமக்குள் இருக்கிறாரே! பாவத்தை எதிர்த்து ஜெயங்கொள்ள அவர் நமக்கு கிருபை செய்வார். ஆகவே, பாவத்தைக் கண்டு பயந்து ஒதுங்காமல், எதிர்த்து நின்று ஜெயம் பெற்று தேவனை மகிமைப்படுத்துவோமாக.
ஜெபம்: கிருபையுள்ள ஆண்டவரே, பாவம் எங்களை மேற்கொள்ளாதிருக்கவும், அவற்றை எதிர்த்து ஜெயமுள்ள வாழ்க்கை வாழவும் தூயஆவியால் எங்களை நிரப்பும். ஆமென்.