ஐங்காயங்கள்
தியானம்: 2026 ஏப்ரல் 4 சனி | வேத வாசிப்பு: ஏசாயா 53:1-12

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார் (ஏசாயா 53:5).
“ஆம், அவர் என்னுடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார்” என்று இந்நாளிலே நாம் ஒவ்வொருவருமே சொல்லக்கூடுமோ? “அவர் எனக்காக, எனக்காக” என்று சொல்லிப்பாருங்கள். திரும்பத்திரும்பச் சொல்லிப் பாருங்கள். இவர் ஏன் எனக்காகக் காயப்பட்டார்? “நாம் அறிவிக்கிற இயேசு அனுபவித்த உபத்திரவ மரணத்தைப் பார்க்கிலும், இன்று அநியாயமாக மக்கள் அவமாகச் செத்து மடிகிறார்களே” என்ற ஒருவர் அலுத்துக் கொண்டார். அவர் பேச்சிலே பரிகாசமும் கலந்திருந்தது. இன்று மாத்திரமல்ல. இயேசுவின் காலத்திலும் அதன் முன்னும் உபத்திரவங்கள் கசையடிகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் இதனால் மனிதன் பெற்ற நன்மைதான் என்ன? அழிந்துபோகிற உலகுக்காகவும், அதன் கிரியைகளுக்காகவும் விலையேறப் பெற்ற தமது ஆத்துமாக்களை அழித்துப்போடுவதனால் உண்டாகும் லாபம் என்ன? தீக்குளிப்புகள், தற்கொலைகள் என்று எத்தனை சம்பவங்களைக் கேள்விப்படுகிறோம். இவற்றாலே ஒரு ஆத்துமா மீட்கப்பட்டதா? இவ்வுலக வாழ்விலே நாம் எத்தகைய உபத்திரவங்களை அனுபவித்தாலும், சாவைச் சந்தித்தாலும், நமக்கு பூரண மீட்பு கிட்டாது. அடுத்ததாக, நமது ஒவ்வொரு மீறுதல்களுக்காகவும் நாம் கசையடிபடுவோமானால், நமது நிலைமைதான் என்ன? நாம் நமது வெளியரங்க வாழ்க்கையைக் கட்டுப்படுத்தினாலும், மாசுபடிந்த நமது அந்தரங்க வாழ்வில் நமக்கு மீட்பளிப்பவர் யார்?
அந்த ஆத்தும மீட்புக்காகவே, இரட்சிப்பின் அதிபதியை தேவன் உபத்திரவத்தினாலே பூரணப்படுத்தினார். நமக்கு வரவேண்டிய தீர்ப்பை இயேசு ஏற்றுக்கொண்டதனாலே நாம் விடுவிக்கப்பட்டோம். அவருடைய காயங்களைப் பாருங்கள். நமது கால்கள் சென்ற தீயவழிக்காக அவரது கால்கள் துளைக்கப்பட்டன. நமது கரங்களின் பொல்லாங்குகளுக்காக அவரது கரங்கள் கடாவப்பட்டன. நமது இருதய பொல்லாத சிந்தனைகளுக்காக அவர் விலாவிலே குத்தப்பட்டார். கர்த்தர் தந்த அறிவை நாம் தீமைக்குப் பயன்படுத்தியதால் அவர் முள்முடி சூட்டப்பட்டார். பாவத்தைச் சுமக்கும் நமது முதுகைக் காப்பாற்ற அவர் முதுகு உழப்பட்ட நிலம் போலானது.
தேவபிள்ளையே! கரம், கால், விலா மட்டுமல்லாமல், உச்சி முதல் உள்ளங்கால்வரை காயப்பட்டாரே. இது யாருக்காக? அவர் பட்டுவிட்ட காயங்களை உணர்ந்தும், நாம் இன்னும் பாவவழி செல்லலாமோ? உனக்கு வரும் எந்தச் சோதனையிலும் அவர் “எனக்காகக் காயப்பட்டார்” என்று தைரியமாகக் கூறு. பெரிய மாற்றத்தைக் காண்பாய். கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார் (ஏசாயா 53:10)
ஜெபம்: “என் நேச மீட்பரே, எனக்காக, எனக்காக நீர் காயப்பட்டீரே, ஐயா நான் என்ன செய்வேன். இதோ என்னையே அர்ப்பணிக்கிறேன்” ஆமென்.