சிதைந்த நம்பிக்கை!

தியானம்: 2026 ஏப்ரல் 9 வியாழன் | வேத வாசிப்பு: லூக்கா 24:13-24

YouTube video

அவரே இஸ்ரவேலை மீட்டி ரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம் (லூக்கா 24:21).

“நாங்கள் நம்பியிருந்தோம்” எத்தனை தடவை இப்படியாக நாம் வேதனைப் பட்டிருப்போம். ஒன்றை நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்து, அது சிதைந்து விட்டதுபோல உணரும்போது நாம் துவண்டு விடுகிறோம். நாம் எதிர்பார்த்திருப்பது அப்படியே நடந்தேற வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான், நமக்கு முன்னே இருக்கிற வெற்றியை மறைத்துப்போடுகிறது; தவிர, நமது நம்பிக்கை ஒருபோதும் சிதைந்து போகாது. இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார்!

இயேசு உயிர்த்தெழுந்த அன்றைய தினமே இரு சீஷர்கள், சோர்ந்த இருதயத்துடன் எருசலேமிலிருந்து ஏழு மைல்கள் அப்பாலுள்ள எம்மாவு ஊருக்கு போகிறார்கள். அவர்கள் நம்பியதற்கு முற்றிலும் மாறாக நடந்துவிட்டதாக எண்ணியதால், நம்பிக்கை இழந்து எருசலேமைவிட்டுப் போகிறார்கள். தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த மேசியா ஒரு அரசியல்வாதி, அல்லது ஒரு இராணுவ புரட்சியாளராக வந்து, யூதரை எதிரிகளிடமிருந்து மீட்டெடுப்பார்கள் என்பதே எதிர்பார்ப்பாய் இருந்தது. அந்த நம்பிக்கையை இந்த சீஷர்களும் இயேசுவில் கொண்டிருந்தார்கள். வரவிருக்கும் மேசியா பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இரட்சிக்கிறவர் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இயேசுவின் கொடூர மரணம் இவர்களது நம்பிக்கையைச் சிதைத்துவிட்டது. கல்லறை வெறுமையானதையும், பெண்கள் சொன்ன தகவல்களையும், மற்ற சீஷரும் கல்லறைக்குப்போய் பார்த்து வந்ததையும், இந்த நிகழ்வைக்குறித்து தீர்க்கர்கள் முன்உரைத்ததையும், இயேசு தாமே தமது உயிர்த்தெழுதலைக் குறித்து சொல்லியிருந்ததை இவர்கள் அறிந்திருந்தும், இவர்களால் எதையும் சிந்திக்க முடியவில்லை. உயிர்த்த இயேசு முன்னே நின்றபோதும், அவரிடமே, “அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பார் என்று நாங்கள் நம்பியிருந்தோம். ஆனால் அவரைச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்” என்கிறார்கள். அவர்களது கண்கள் மறைக்கப்பட்டிருந்தது ஏன்?

அன்று எம்மாவு சென்ற சீஷரால் தம்முடன் நடந்துவந்த இயேசுவைப் புரிந்துகொள்ள முடியாதிருந்தாலும், இன்று நாம் அவருடைய உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறோம்; அதுவே வாழ்வின் மூச்சாகவும் இருக்கிறது. அப்படியிருந்தும், நமது விருப்பங்கள் நாம் விரும்பியபடி நடக்காதபட்சத்தில் “நாம் நம்பியிருந்தோமே” என்று புலம்புவதும் ஏன்? சகலத்தையும் வென்று உயிர்த்த இயேசு நம்பிக்கையின் ஒளியாக நம்முன்னே அல்ல, நமக்குள்ளேயே வாசம் பண்ணும்போது, நமக்கு ஏன் வீண் சிந்தனைகளும், புலம்பல்களும்? “இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்” (1கொரிந்தியர் 15:19).

ஜெபம்: நல்ல தேவனே, நாங்கள் எதிர்பார்த்த காரியங்கள் கைகூடாமற்போகும்போது நம்பிக்கையை இழக்காமல் விசுவாசத்தில் உறுதிப்பட எங்களுக்குதவும். ஆமென்.