கர்த்தருக்குப் பயந்து நடந்தான்
தியானம்: 2026 ஏப்ரல் 21 செவ்வாய் | வேத வாசிப்பு: 2இராஜாக்கள் 4:1-7

… உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர் (2இராஜா. 4:1).
நாம் ஒரு உதவியைக் கேட்டு யாரிடத்திலாவது போகும்போது, நேரடியாகச் செல்லாமல், அவருக்குத் தெரிந்தவர்கள் யாரிடமாவது ஒரு சிபாரிசுக் கடிதத்தை எடுத்துக்கொண்டு போனால் நல்லது என்று நினைப்போம். இல்லாவிட்டால், “என்னை உங்களுக்குத் தெரியாது, ஆனால், என்னுடைய நண்பர் உங்களது உறவினர்தான்” என்று நண்பனை இழுத்துப் பேசுவோம். இவையெல்லாமே நமது வாழ்விலே சகஜமாக நடப்பவைகளாகிவிட்டன.
இங்கே இந்தப் பெண் எலிசாவிடம் ஒரு உதவி கோரி வந்தபோது, அவள் இரண்டு காரியங்களைக் குறிப்பிடுகிறாள். ஒன்று தான் புருஷனை இழந்த ஒரு கைம்பெண் என்கிறாள். அடுத்தது, தனது புருஷன் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை நீர் அறிவீர் என்கிறாள். இப்போது கடன் கொடுத்தவன் தனது இரண்டு குமாரரையும் அடிமையாக்கிக்கொள்ள வந்தான் என்றும், தனக்கு எலிசா உதவவேண்டும் என்றும் கூறுகிறாள். எலிசா ஒரு தீர்க்கதரிசி என்பதை அறிந்த அவள், அவன் மூலமாக கர்த்தரிடத்தில் தனக்கு ஒரு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனேயே தேவமனிதனை நாடி அவள் வந்திருந்தாள்.
தேவனுடைய உதவியினால், எலிசாவும் அவளது குறைவைத் தீர்த்து வைப்பதைக் காண்கிறோம். தேவன் அவளிடம் உள்ளதைப் பெருகும்படிக்குச் செய்தார். அதற்காக எண்ணெய் பெருகி, ஒரு எண்ணெய் தொழிற்சாலையையே உருவாக்கும் அளவுக்கு அல்ல. அவளிடம் எவ்வளவு வெற்றுப் பாத்திரங்கள் இருந்ததோ அவ்வளவுக்கும் எண்ணெய் பெருகும்படிக்குச் செய்தார். அவள் அதை விற்று தன் கடனையெல்லாம் தீர்த்துக்கொண்டாள். தேவனுக்குப் பயந்து நடந்த ஒரு மனிதனது குடும்பத்திலிருந்த கடன் பிரச்சனை இவ்வாறு தீர்க்கப்பட்டது.
“கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்” (சங்.128:1). கர்த்தருக்குப் பயந்து வாழ்ந்த அந்த மனிதனுடைய குடும்பம் இவ்வண்ணமாக ஆசீர்வதிக்கப்பட்டது என்று காண்கிறோம். நாமும் நமது குடும்ப வாழ்வுகளை எண்ணிப் பார்ப்போம். கர்த்தருக்குப் பயப்படும் பயம் நமது குடும்பத்தில் உண்டா? நமது தேவைகளுக்காக நாம் பணம் சம்பாதிக்கும்போது அதை நேர்த்தியாகச் செய்கிறோமா? நமது உழைப்பை நாம் எடுக்கும்போதும், அதைச் செலவு செய்யும்போதும், அதிலிருந்து கர்த்தருக்குக் காணிக்கை கொடுக்கும்போதும், கர்த்தருக்குப் பயப்படுதல் அதில் காணப்படுகிறதா?
ஜெபம்: அன்பின் தேவனே, நாங்கள் எங்கள் வருமானத்தை ஈட்டுவதிலும், அதை செலவழிப்பதிலும் உமக்குப் பயப்படும் பயத்தோடு வாழ எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். ஆமென்.