பாவத்தைச் சமாளித்தல்
தியானம்: 2026 ஏப்ரல் 26 ஞாயிறு | வேத வாசிப்பு: 2சாமுவேல் 11:1-13

நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம் (1யோவான் 1:8).
தாவீதின் உன்னதமான குணங்களை நாம் ஆராய்ந்து வரும்போது அவர் விசேஷமான ஒருவர் என நாம் எண்ணலாம். ஆனால், அவரும் சாதாரண சராசரி மனிதன்தான். அவரும் பாவத்தில் விழுந்தார். அந்த விழுகைக்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது. அதுதான் சோம்பல். யுத்தத்துக்கு அனைவரையும் அனுப்பிவிட்டு சாயங்கால வேளையிலே படுக்கையில் இருந்து எழுகிறார் ராஜா. அந்த வேளையிலேதான் பாவ எண்ணம் அவர் மனதில் எழுந்தது. பத்சேபாளுடன் பாவம் செய்துவிட்ட தாவீது அதை எப்படியாவது சாமாளித்துவிட பல முயற்சிகளையும் எடுத்தார். தாவீது அவள் புருஷனாகிய உரியாவை வலுக்கட்டாயமாக போர்க்களத்திலிருந்து வரவழைத்து, வீட்டிற்கு அனுப்ப எத்தனிக்கிறார். ராஜ விசுவாசமுள்ள உரியாவோ வீட்டிற்குப் போக மறுத்தபோது, அவனை வெறிக்கப்பண்ணினான். ஆனால், இந்த முயற்சிகள் எதுவுமே பலனளிக்கவில்லை. கடைசிவரைக்கும் உரியா வீட்டிற்குப் போகவேயில்லை.
அருமையானவர்களே, நாமும் பல தடவைகளிலும் பாவத்தைச் செய்துவிட்டு அதை எப்படிச் சமாளித்துத் தப்பிக்கொள்ளுவது என்று வழி தேடுவது உண்டல்லவா? பாவத்தைச் சமாளிக்காதீர்கள். பெரிய பாவமோ, சிறிய பாவமோ, பாவம் பாவமே. அதை தேவனின் சமுகத்தில் அறிக்கையிட்டு அவர் தரும் மன்னிப்பைப் பெற்று மனசமாதானமடையுங்கள். “பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவற்றை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என வேதம் கூறுகிறது (நீதி.28:13). முதலில் பாவத்தைப் பாவம் என்று ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கும். அதை அறிக்கையிடுவது இன்னும் கடினமாக இருக்கும். ஆனால், உண்மையாகவே உணர்ந்து தேவபாதம் விழும்போது அவர் நம்மை நிச்சயம் தூக்கி நிறுத்துவார். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவா.1:9).
அன்பானவர்களே, நம்மைக் குறித்து ஒருகணம் சிந்தித்துப் பார்ப்போம். நாம் தவறிப்போன நேரங்களை இனங்கண்டு சீர்ப்படுத்துவோம். தேவனுக்கு விரோதமாக செய்த காரியங்களை அவரிடம் அறிக்கையிட்டு அவரது மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம். அதைவிட்டுவிட்டு, பாவத்தை ஒருவாறு சமாளித்து வாழ்ந்துவிடலாம் என்று எண்ணுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும். அதனை தேவன் வெறுக்கிறார். அவருக்கு நாம் உண்மையுள்ளவர்களாய் வாழ்வோமாக. ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்; போல ஊற்றிவிடு (புலம்பல் 2:19).
ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, எனது பாவங்களை மன்னியும்; என்னை உமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டருளும். ஆமென்.”