பாவத்தை மறைத்தல்!
தியானம்: 2026 ஏப்ரல் 27 திங்கள் | வேத வாசிப்பு: 2 சாமுவேல் 11:14-27

துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக் காரும் (சங்கீதம் 19:13).
பூனை பால் குடிக்கும்போது தன்னை யாரும் காணக்கூடாது என்று எண்ணி தனது கண்களை இறுகமூடிக்கொள்ளுமாம். இது மூடத்தனம் அல்லவா. இதைத்தான் அன்று தாவீதும் செய்தார். செய்வதெல்லாம் செய்துவிட்டு தன்னை யாரும் காணவில்லை என்று எண்ணியவராக கண்களை மூடிக்கொண்டு பாவத்தை சமாளிக்கப் பார்த்தார். முடியவில்லை என்று கண்டதும் அதை முற்றிலுமாய் மறைத்துவிடலாம் என்று எண்ணி, பத்சேபாளின் புருஷன் உரியாவைத் தந்திரமாய் போர் முனையில் முன்னால் அனுப்பி அவனைக் கொலை செய்வித்தார். ஆனால், தேவன் இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஏனோ மறந்துபோனார். இவர் செய்த காரியம் தேவனுடைய பார்வைக்கு பொல்லாப்பாய்க் கண்டது. எல்லாவற்றுக்கும் தேவ ஆலோசனை பெற்று, தேவனோடு நெருங்கியிருந்த தாவீது, இந்தத் துணிகரமான பாவத்தை, தேவன் காணமாட்டார் என்று எண்ணியவர்போல செய்துமுடித்துவிட்டார். அதனால்தானோ துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும் என்று 19ஆம் சங்கீதத்தில் வேண்டிக் கொள்ளுகிறார்.
நான் தேவனோடுதான் இருக்கிறேன். நான் பாவத்தில் விழமாட்டேன் என்று யாரும் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. நாம் பாவ சுபாவமுள்ள மனிதர். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். ஆகையால், மிகவும் எச்சரிப்போடும் விழிப்போடும் இருக்கவேண்டும். ஒரு நிமிடம், ஒரு சிறிய சிந்தனை, ஒரு செயல், ஒரு சிறிய பேச்சு போதும் நாம் பாவத்தில் விழ. நாம் எவ்வளவு விழிப்புள்ளவர்களாய் இருக்கவேண்டும் பார்த்தீர்களா? நேரம் போக்குவதற்காக பேசப்போய் எத்தனைபேர் பாவத்தினால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறார்கள்! பிசாசானவன் யாரை விழுங்கலாம் என்று சுற்றித்திரியும் காலமிது. நமது வாழ்வை ஜாக்கிரதையுடன் காத்துக்கொள்ளப் பிரயாசப்படுவோம்.
சாயங்கால வேளையிலே படுக்கையில் சோம்பலாய்க் கிடந்த தாவீது பாவத்தில் விழுந்தார். சோம்பல் முறிக்கத்தான் உப்பரிக்கைக்கு ஏறினாரோ நாமறியோம். ஆனால், அங்கேதான் தன் கண்களின் இச்சைக்கு இடம் கொடுத்து பாவத்தில் விழுந்தார். ஆகவே, பாவத்தின் காரணமான சோம்பேறித்தனத்தை முதலாவது நம்மைவிட்டு அகற்றுவோம். எப்போதும் ஏதோ ஒரு காரியத்தில் நம்மை ஈடுபடுத்தி நாம் சுறுசுறுப்பாக இருக்க முயற்சிப்போம். சோம்பல்தனமே பாவத்தின் உறைவிடம். தாவீதின் வாழ்வு நமக்கு ஒரு பாடமாய் அமையவே அனைத்தையும் ஆவியானவர் ஒளிவுமறைவின்றி எழுதி வைத்திருக்கிறார். ஆகவே, நாம் மிகுந்த எச்சரிப்போடு; இருப்போமாக. புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான் (நீதி.10:17).
ஜெபம்: “ஆண்டவரே, பாவ சூழ்நிலைகளுக்குள்ளே அகப்பட்டுவிடாதபடிக்கு என்னை சகல தீமைகளுக்கும் விலக்கிக் காத்தருளும். ஆமென்.”.