மற்றவரை நியாயந்தீர்த்தல்

தியானம்: 2026 ஏப்ரல் 28 செவ்வாய் | வேத வாசிப்பு: 2சாமுவேல் 12:1-14

YouTube video

மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு (மத்தேயு 7:5).

பலவேளைகளில் மற்றவர்கள் தவறு செய்யும்போது அது நமது கண்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால், அதே தவறை நாம் செய்யும்போது அது நமக்குத் தெரிவதில்லை; உணர்வே இருப்பதில்லை. பாவத்தில் விழுந்துபோய் எவ்வித உணர்வுமின்றி இருந்த தாவீதை எச்சரிப்பதற்காக தேவன் நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்புகிறார். அவரும் நேரடியாக தாவீதின் குற்றத்தை உணர்த்தாமல், ஞானமாக தாவீதுக்குப் பேச்சுக் கொடுத்தார். தாவீது செய்த குற்றத்துக்கு ஒப்பான ஒரு தவறை இன்னுமொருவர் செய்ததாகக் கதை சொல்லுகிறார். இதைக் கேட்ட தாவீது பொங்கி எழுந்தார். யார் அந்த மனிதன் என வினா எழுப்பினார். அவன் கொலை செய்யப்பட வேண்டும் என்று கோபம் கொண்டார். ஆனால் தீர்க்கதரிசி, அந்த ஆள் வேறு யாருமல்ல நீர்தான் என்று சொன்னபோது, தாவீது தன் பிழையை ஒத்துக்கொள்ள மறுக்கவில்லை. தன் பாவத்தை சாமாளித்து, பாவத்தின் அகோரத்தை மறைத்துவைக்க எண்ணியதை தேவன் கண்டுகொண்டார் என்பதை தாவீது உணர்ந்தபோது, மனமொடிந்து தேவபாதத்திலே விழுந்தார்.

அந்தரங்கத்திலே நாம் செய்யும் யாவுமே தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாய் இருக்கிறது. அவருக்கு நாம் எதையுமே ஒளிக்கமுடியாது. நமது வாழ்விலே குறைவுகளையும், குற்றங்களையும் வைத்துக்கொண்டு மற்றவர்களை நியாயந்தீர்க்க நாம் முனைகிறோமா?

மாயக்காரனே, முன்பு உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார் என்று ஆண்டவர் சொன்னாரல்லவா! எப்போதுமே மற்றவர்கள் விடும் பிழைகளையும், குற்றங்களையும் எண்ணிக் கொண்டிராமல், நமது வாழ்வை தேவனுக்கு முன்பாக சீர்படுத்த நாம் முன்வர வேண்டும். தாவீது பெரியதொரு குற்றத்தைச் செய்துவிட்டு, அதை மறைத்தும் வைத்திருந்தார். நாத்தான் தீர்க்கதரிசி கூறும்வரையிலும் தான் குற்றத்தை செய்திருக்கிறேன் என்பதை அவர் உணர்ந்துகொள்ளவில்லை.

நமது வாழ்வில் நாம் மறைத்து வைத்திருக்கும் பாவங்கள் எத்தனை? ஒவ்வொரு முறையும் பிறருடைய குற்றத்தைப் பெரிதாகக் காணும்போது, எப்பொழுதாவது இதே பாவத்தை நானும் செய்திருக்கிறேனா என்று ஆராய்ந்து, முதலில் நம்மைச் சரிப்படுத்துவது நல்லது. பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனுக்கு கிருபை உண்டு. என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் (சங்.51:7).

ஜெபம்: “மறைவான பாவங்களுக்கும், துணிகரமான பாவங்களுக்கும் என்னை விலக்கிக் காத்தருளும், என் அன்பின் ஆண்டவரே. ஆமென்.”