தேவ ஆலோசனை
தியானம்: 2026 ஏப்ரல் 30 வியாழன் | வேத வாசிப்பு: 2சாமுவேல் 5:17-25

… கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் (2சாமுவேல் 5:24).
நாம் புதிதாக ஒரு இடத்துக்குப் போகவேண்டி இருக்கும்போதோ அல்லது ஒரு பெரிய காரியத்தைச் செய்யவேண்டி இருக்கும்போதோ, யாராவது ஒருவர், நான் முன்னமே போய் எல்லாவற்றையும் ஆயத்தம் பண்ணுகிறேன். நீங்கள் மெதுவாக வாருங்கள் என்று நமக்குச் சொல்வாரேயாகில் அதைப் போன்ற ஒரு ஆறுதலான வார்த்தை எதுவுமே இருக்கமுடியாது. அப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டிருக்கிறதா?
பெலிஸ்தரை முறியடிக்கப் போகுமுன்னர் தேவ ஆலோசனையைப் பெற்றான் தாவீது. அவனுக்குச் சரியான வழிநடத்துதலைக் கொடுத்த தேவன், அத்தோடு இன்னுமொரு காரியத்தையும் கூறுகிறார். முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்கிற இரைச்சல்களின் ஒசையை நீ கேட்கிறபோது புறப்பட்டுச் செல். அப்பொழுது பெலிஸ்தரை முறியடிக்க கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார். எவ்வளவு ஆச்சரியம் பார்த்தீர்களா? தாவீதுக்கு முன்பாக அவனுக்காய் போர் செய்ய கர்த்தர் புறப்பட்டுவிட்டார். ஆனால், அதற்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்பட்டது. அந்த ஓசையைக் கேட்கும்போதுதான் தாவீது புறப்படவேண்டும்.
நாம் எப்போதாவது தேவ ஆலோசனையைப்பெற அவர் பாதத்தண்டைக்குப் போனதுண்டா? நமக்காகக் காரியம் செய்ய தேவன் முன்னே செல்வார் என்று நாம் விசுவாசித்ததுண்டா? நாம் தேவனோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தால் இவ்விதமான அனுபவங்கள் நமது வாழ்விலும் நிகழவேண்டும். நாம் ஆராதிக்கும் தேவன் எங்கோ இருந்துகொண்டு நம்மை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பவர் அல்ல. அவர் நம்மோடு நம் மத்தியில் நம் உள்ளத்தில் வாழுபவர். அவரோடு நாம் பேசவேண்டும். அவர் நம்மோடு பேசுவதையும், நம்மை வழிநடத்துவதையும் நாம் நமது அன்றாட வாழ்வில் உணரவேண்டும். இவ்விதமான உறவு நமக்கும் தேவனுக்கும் இடையில் கட்டப்பட்டு எழுப்பப்படாவிட்டால் பயனில்லை.
அன்பானவர்களே, ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன் என்று கூறிய ஆண்டவர் நமக்கு இருக்கிறார். மனுஷரின் ஆலோசனைகளை மாத்திரம் சார்ந்திராமல், தேவ ஆலோசனையைப் பெற்று, அவர் சொற்படி வாழ்ந்திட பிரயாசப்படுங்கள். அவர் நமக்குத் தரும் நல்ஆலோசனைகள் அவருடைய வார்த்தையாகிய வேதப் புத்தகத்திலே உண்டு. அதனை அனுதினமும் வாசியுங்கள், தியானியுங்கள், வாழ்விலே கடைப்பிடித்து அவர் ஆலோசனையின்படி வாழ்ந்திடுங்கள். நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் (சங்.32:8).
ஜெபம்: ஆலோசனையில ஆச்சரியமான தேவனே, என்மேல் உம் கண்ணை வைத்து எனக்கு எப்போதும் ஆலோசனை தந்து உமது வழியில் என்னை நடத்தும். ஆமென்.