மாராவின் தண்ணீர்

தியானம்: 2026 மே 2 சனி | வேத வாசிப்பு: யாத்திராகமம் 3:10-12

YouTube video

அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது (யாத்;. 15:23).

கடந்த சில வருடங்களுக்கு முன்னர், செய்தித்தாள்களில் அமிலமழை பெய்ததைப்பற்றிய செய்திகள் அதிகமாக வெளிவந்தவண்ணம் இருந்தன. பல நாடுகளில் இது மாபெரும் பிரச்சனையாக தலைதூக்க ஆரம்பித்தது. காற்றில் இருக்கும் கந்தகம் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் மழைநீரில் கரைவதால் இது உண்டாகிறது. இந்த அமிலமழையினால் காடுகளில் மரங்களும், குளம் மற்றும் நீரோடைகளில் மீன்களும் நீர்வாழ் உயிரினங்களும் இறந்துவிடுகின்றன.

கசப்பு என்ற பொருள்படும் ‘மாரா’ என்ற பாலைவனச் சோலைக்கு இஸ்ரவேல்மக்கள் வந்தபோது, இதைப்போன்ற ஓர் இக்கட்டான சூழலைச் சந்திக்க நேரிட்டது. அங்கிருந்த நீர் மாசுபட்டு இருந்ததினால் அதனை அவர்களால் அருந்த முடியவில்லை. தாகத்தினால் தேவ ஜனங்கள் மரிக்கும் நிலைக்கு வந்தனர். இதுபோன்ற நேரத்திலெல்லாம் நம்முடைய தேவன் அருகிலேயே இருக்கிறார் என்பதை அடிக்கடி நாம் மறந்துவிடுவதுண்டு. அவர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; கர்த்தர் சொன்னபடியே மோசே அந்த மரத்தைத் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று.

கசப்பான தண்ணீர் நம்முடைய ஆவிக்குரிய வாழ்வையும் அழித்துவிட முடியும். “ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?” (யாக்.3:11) என்று யாக்கோபு கேட்கிறார். கசப்பினால் மாசுபடிந்த இருதயத்தில் தேவன் விரும்பும் இனிய ஆவி இருக்கமுடியாது. அகத்தில் இருக்கும் கசப்பு பின்னர் புறத்திலும் வெளிப்பட ஆரம்பிக்கும். நாம் எவ்வளவு தான் திறமையாக அதை மறைக்க முயன்றாலும் நம்முடைய சொல், செயல், பண்பு யாவற்றையும் அந்தக் கசப்பு கெடுத்துப் போடும். கசப்பு நமது மனதில் நிலைகொண்டிருக்குமானால் அது நம்மை மாத்திரமல்லாமல் நம்மைச் சுற்றிலும் இருக்கிறவர்களையும்கூட பாதிக்கும். இக் கசப்பை நீக்குவதற்குரிய ஒரே தீர்வு, சிலுவையில் நாம் அறையப்படுவதுதான். அப்போது தேவனுடைய ஆவியானவரின் சுக தைலம் நம்மை நிச்சயம் குணப்படுத்தும். நாம் இதயக் கசப்பினால் மாசுபட்டு இருக்கின்றோமா? அப்படியெனில் நாம் தேவனால் புத்துணர்வு பெறவேண்டும். நம்மைத் தேவனை விட்டுத் தூரமாக்கிவிட்ட கசப்பான பாவத்தை அவரிடம் அறிக்கையிடுவோம். அவரிடம் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளுவோம். அப்பொழுது புதுப்பிக்கப்பட்ட புத்துணர்ச்சியும் இனிமையும் நிறைந்த ஜீவதண்ணீரைப் பெற்றுக்கொள்வோம். உண்மையில் நமது வாழ்வில் கசப்பின் ஆவி இருக்குமானால், நாம் இனிமையான ஒரு நபராயிருப்பதை அது தடுக்கிறது என்பதை உணர்ந்து தேவனிடம் திரும்புவோமாக.

ஜெபம்: மாராவின் தண்ணீரை மதுரமாக மாற்றிய ஆண்டவரே, என் வாழ்வின் கசப்புகளை நீக்கி, நான் இனியகனிகளைத் தர எனக்கு உதவிச்செய்யும். ஆமென்.