நன்றி மறவாதே!
தியானம்: 2026 மே 3 ஞாயிறு | வேத வாசிப்பு: யாத்திராகமம் 15:22-24

அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள் (யாத். 15:24).
இலங்கையில் கிண்ணியா என்ற பகுதியில், வெப்ப நீரூற்றுகளும் குளிர்ந்த நீரூற்றுகளும் அருகருகே காணப்படுகின்றன. இந்த இயற்கை விநோதத்தின் வசதியினால் பெண்கள் தங்கள் துணிகளைக் கொண்டுவந்து சுடுநீரில் துவைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலசிக்கொள்வதுண்டு. இந்த இடத்தைக் காணவந்த சுற்றுலாப் பயணி ஒருவர், “சுத்தமான சுடுநீரையும் குளிர்ந்த நீரையும் அளவில்லாமல் அருகருகே தருகின்ற இந்த இயற்கையை மிகவும் கருணையுள்ளவளாகக் காண்கின்றேன்” என்றார். அதற்கு இன்னொருவர், “இந்த இயற்கைத் தண்ணீர் சவர்க்காரக் கட்டிகளைத் தருவதில்லையே” (துவைப்பதற்கும் சுத்தம் செய்வதற்கும் பயன்படும் பொருள்) என்று முணுமுணுத்தார்.
நன்றியற்ற மனப்பாங்கை வெளிக்காட்டுபவர்கள் அநேகர். அன்றைய இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் அநேக அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். தம்முடைய மக்களை பார்வோன் விடுதலை செய்வதற்காக எகிப்தியரின் தலைமகன்களை தேவன் சங்கரித்தார். பகலில் மேகஸ்தம்பமாகவும், இரவில் அக்கினி ஸ்தம்பமாகவும் நின்று, இஸ்ரவேலரின் பிரயாணத்தில் வழிகாட்டியாய் இருந்தார். சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து அவர்களை வெறுந்தரையில் நடக்கப்பண்ணி சமுத்திரத்தை கடக்கச் செய்தார். பின்தொடர்ந்து வந்த எகிப்திய சேனைகளின்மீது அந்த தண்ணீரை புரண்டுவரச்செய்து மூழ்கடித்தார். இவ்விதமாய் கர்த்தருடைய பலத்த கரத்தை இஸ்ரவேலர் நேரில் கண்டும் அனுபவித்தும் வந்தார்கள். இருந்தும், தங்கள் பிரயாணத்தில் முதன்முதலாக தடையொன்று வந்தபோது இம்மட்டும் நடத்திய கர்த்தரை நம்பாமல் குறை சொல்ல ஆரம்பித்தனர்.
நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி குன்றி, தேவனை குறைசொல்லும் எண்ணம் நமக்குள் தோன்றுகிறதா? ஒன்று செய்யலாமே! ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து, இதுவரை தேவன் நமக்குச் செய்த சகல நன்மைகளையும் பட்டியலிடுவோம். நமக்கு அவர் அருளிய இரட்சிப்பு, நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியான குடும்பம், ஜீவனுள்ள தேவவார்த்தை நிறைந்த பரிசுத்த வேதாகமம் இவைகளும் அந்த நன்மைகள் பட்டியலில் அடங்கட்டும். அப்பொழுது, கர்த்தர் நமக்குச் செய்த நன்மைகள் யாவும் நிச்சயம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதன்பின்னர், இன்றைய சூழ்நிலைகளைச் சந்திப்பதற்கான மனவலிமையை தேவன் தருவார் என்ற நம்பிக்கை உருவாகும். அப்போது துதியுடன் நம்மால் முன்னேறிச் செல்லமுடியும். நமக்கு தேவைகள் நிறைந்த நேரமே, முறுமுறுக்காமல் நாம் ஜெபிக்கவேண்டிய நேரம். குறை சொல்லாமல், “இப்பொழுது நடப்பது என்ன என்று தெரியவில்லை. ஆனாலும் நீர் என்னை நடத்த நான் உம்மை நம்புகிறேன்” என்று தேவனிடம் சொல்லப் பழகுவோமாக.
ஜெபம்: “துதிக்குப் பாத்திரராகிய கர்த்தாவே, எந்த பாதகமான சூழ்நிலையிலும் முறு முறுத்திடாமல் ஜெபத்திலே தரித்திருந்து நீர்நடத்தும் பாதையில் பொறுமையோடிருக்க எங்களை பெலப்படுத்தும். ஆமென்.”