நல்வாழ்வுக்கு நல்வழி

தியானம்: 2026 மே 5 செவ்வாய் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 15:26-27

YouTube video

…. வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்; (யாத்;. 15:26).

இன்று அநேகர், பாரம்பரியமான மேலைநாட்டு மருந்துகளுக்குப் பதிலாக மாற்றுமருந்துகளைப் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறார்கள். இவற்றில் உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, மன அழுத்தங்களை மேற்கொள்ளுதல், ஆயுர்வேதமுறை, நாட்டுவைத்தியம், இயற்கை வைத்தியம், மூலிகை மருந்து, சித்தவைத்தியம் என்பன சில. ஆனால் தேவன் நமது ஆரோக்கியத்துக்கு ஒரு வழியைத் தருகிறார். அது அவருக்குக் கீழ்ப்படிவதாகும்.

இஸ்ரவேலர்கள் தேவனுடைய கட்டளைகளுக்குச் செவிகொடுத்து அவரது நியமங்களைக் கைக்கொண்டால் எகிப்திய மக்களுக்கு வந்த வியாதிகள் வராமல் தடுத்துக் கொள்ளலாம் என்று கர்த்தர் அவர்களுக்குச் சொன்னார். கீழ்ப்படிதலை வாங்கிக்கொள்ள முடியாது. அது இயற்கையாக அவர்களுக்குள்ளிருந்து வரவேண்டும். அவர்கள் பாவத்தைத் தவிர்ப்பதால் அப்பாவத்தின் விளைவாக வரும் அநேக நோய்களையும் தவிர்த்துவிடலாம். இக்கொள்கை இக் காலத்துக்கும் பொருந்துவதாகவே உள்ளது. நாம் கர்த்தருடைய கட்டளைகளை மீறுவதைப்பற்றி அதிகமாகப் பேசுகிறோம். ஆனால் உண்மையில் அவருடைய கட்டளைகளுக்கு எதிராக நாம்தான் விலகி ஓடுகிறோம். தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாய் வாழ்ந்து சிலர் பால்வினை நோய்களுக்குள்ளாகிறார்கள். சிலர் போதிய உடற்பயிற்சியின்மையால் தங்கள் சரீரத்தைப் பெலவீனப்படுத்திக் கொள்கிறார்கள். வேறு சிலரோ புகைப்பதினாலும் குடிப்பதினாலும் தங்கள் உயிருக்கே உலை வைத்துக் கொள்கிறார்கள். நாம் இப்படியிருக்கலாகாது.

உங்கள் சரீரத்தை, பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாகப் பேணவேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1கொரி.6:19). தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாய் உங்கள் சரீரத்தை பாவம் நிறைந்த இடங்களுக்குக் கொண்டு செல்லவோ, பாவமான மற்ற காரியங்களுக்கு ஒப்புக்கொடுக்கவோ துணியக்கூடாது. தேவையான ஓய்வு, ஊட்டசத்துள்ள உணவு இவைகளுடன் மன அழுத்தமில்லாமலும் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். கர்த்தருக்குக் கீழ்ப்படிதலே சரியான மருந்து. அவரது கற்பனைகளுக்கும் கட்டளைகளுக்கும் இசைந்து நடப்போமானால் அநேக வியாதிகளை நாம் இயல்பாகவே தவிர்த்துவிட முடியும். ஆரோக்கியத்துக்கு நேராக நம்மைச் சூழ்ந்திருக்கிறவர்களையும் நம்மால் வழிநடத்த முடியும். நாம் எவ்வளவு பணிகளைச் செய்தாலும், கொடைகளைக் கொடுத்தாலும், “பலியை அல்ல கீழ்ப்படிதலையே கர்த்தர் விரும்புகிறார்” என்பதை மறவாதிருப்போமாக.

ஜெபம்: “நல்ல ஆண்டவரே, நீர் வாசம்செய்யும் ஆலயமாகிய எங்கள் சரீரத்தை நாங்களே கெடுத்துப் போடாதவாறு உமது கற்பனைகளுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து ஆரோக்கியமாய் சரீரநலனை நாங்கள் பேணிக்காக்க எங்களுக்கு உதவும். ஆமென்.”