முதியோரை மதித்தல்
தியானம்: 2026 மே 19 செவ்வாய் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 18:7-8

மோசே தன் மாமனுக்கு எதிர்கொண்டுபோய், அவனை வணங்கி, முத்தஞ்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக் கொண்டு கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள் (யாத் 18:7).
தன்னை யாரும் மதிப்பதில்லை என்று ரொட்னி என்ற நகைச்சுவைக் கலைஞர் வருத்தப்பட்டார். “நான் எவ்வளவுதான் முயற்சித்தாலும் எனக்கு யாரும் மரியாதை தருவதில்லை” என்று அவர் கூறினார். நம்மிடையே உள்ள சில முதியோர்களும் இவ்விதமாய் புலம்புவதுண்டு. தற்காலத்தில் மனிதனின் வாழ்நாள் அதிகரித்துள்ளதால் அநேக முதியோர்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர். அவர்கள் சரீரபிரகாரமாகவும் மனதளவிலும் இளையோரால் பரிகசிக்கப்படுகின்றனர். ஆனால் மோசே மாமனாரிடம் நடந்துகொண்டவிதம் முற்றிலும் வித்தியாசமானது. மோசே ஒரு பெரிய மக்கள் கூட்டத்துக்குத் தலைவனாக இருந்தாலும், மாமன் எத்திரோ வந்தபொழுது அவரை வணங்கி தன் தாழ்மையையும், அவரை முத்தமிட்டு தன் அன்பையும் வெளிப்படுத்தினார். தேவைகள் நிறைந்த மக்கள் தனக்காகக் காத்திருந்தாலும், எகிப்தில் தேவன் பார்வோனுக்குச் செய்தவைகளையும் தங்களது விடுதலைப் பயணத்தையும் விளக்கமாக எத்திரோவிடம் எடுத்துக்கூற நேரம் செலவழித்தார் மோசே.
நாம் முதியவர்களை பொறுமையுடனும் அன்புடனும் நடத்தவேண்டும். அவர்கள் கடந்த காலங்களில், தமது நாட்டுப் பணியிலும், குடும்பத்தைப் பராமரிப்பதிலும், நேர்மையுடன் வாழுவதிலும் அநேக தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் செய்திருக்கின்றனர். எனவே அவர்களது நிறைவு காலத்தில் மரியாதையுடன் நடத்தப்படுவதற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நம்முடைய வயதான பெற்றோர்களை அன்புடன் நடத்துவோமாக. அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுவோம். அவர்கள் கூறும் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் காதுகொடுத்துக் கேட்போம். அவைகளை ஏற்கனவே பலமுறை கேட்டிருந்தாலும் சலிப்படையாது மீண்டும் கேட்க நேரம் கொடுப்போம். அவர்களது துன்பத்திலும் நோயிலும் பரிவு காட்டுவதோடு, அவர்களது பணிகளையும் சற்று எளிதாக்க முயற்சி செய்வோம். ஒருவேளை நமது பெற்றோர்கள் இன்று உயிரோடு இல்லையேல், நமது வீட்டின் அருகாமையிலுள்ள முதியவரோ, சபையின் அங்கத்தினரோ எவரேனும் ஒருவருக்கு நமது உதவி தேவைப்படலாம்.
நாம் வலியவரையும் அதிகாரம் உடையவர்களையும் எப்படி நடத்தினோம் என்பதைக்கொண்டல்ல, நாம் பலவீனர்களையும் எளியோரையும் எப்படி நடத்தினோம் என்பதைக் கொண்டே நாம் நியாயம் தீர்க்கப்படுவோம். நாம் முதியவர்களிடம் செலவிடும் நேரமும் பணமும் பின்நாளில் நமக்கு பன்மடங்கு பலனைத் தரும். அது செலவு அல்ல; நல்ல முதலீடாகும். புதுப்பிக்க முடியாத செல்வம் என்று எண்ணி முதியவர்களைக் கனிவாய் நடத்துவோமாக.
ஜெபம்: “எங்கள் தேவனே, எங்களது வீட்டில் இருக்கும் முதியோர் கனப்படுத்தப்படவும் அவர்களுக்கு கர்த்தர் செய்த அற்புத அனுபவங்களை கேட்டறிந்து நாங்களும் விசுவாசவாழ்வில் பெலப்பட எங்களுக்கு கிருபை செய்யும். ஆமென்.”