இணைந்த குடும்பம்
தியானம்: 2026 மே 20 புதன் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 18:2-5

மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமார ரோடும் அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளைய மிறங்கியிருந்த …வனாந்தரத்துக்கு வந்து.. (யாத்.18:5).
பியூ ஆர்செனியுக்ஸ் 15 மாதக்குழந்தையாய் இருந்தபொழுது, தன் தந்தையால் லூசியானாவிலிருந்து டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஆஸ்டின் என்ற நகரத்துக்குக் கடத்தப்பட்டான். ஆண்டுகள் பல கழிந்தன. ஒருநாள் ஒரு தம்பதியர் அச் சிறுவனோடு இடைபட்டனர். அவன் தன் தாயாருடன் பல ஆண்டுகளாக தொடர்புகொண்டிராததை அறிந்து அவன்மேல் அக்கறை கொண்டு, அச்சிறுவனைப்பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். 1995ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் தீர விசாரித்த உளவுத்துறையினர் அவனது தாயார் கடந்த 12 வருடங்களாக அவனைத் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறி அவர்களை ஒன்றுசேர்க்க முயற்சிகளை எடுத்தனர். அவ்வருடம் டிசம்பர் 20ஆம் தேதி தாயும் மகனும் மகிழ்ச்சியுடன் இணைந்தனர்.
நீங்கள் எப்பொழுதாவது உங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கிறீர்களா? சில நாட்கள் பிரிந்திருந்தாலும் அந்த நாட்கள் மிகக் கடினமான நாட்களாகவே இருந்திருக்கும். நான் என் குடும்பத்தினரைப் பிரிந்து பிரான்ஸ் தேசத்துக்கு வேதப்படிப்புக்காகச் சென்றிருந்தேன். பல மாதங்கள் அவர்களைப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தோடு, ஆயிரம் மைல்கள் கடந்து ஒரு புதிய தேசத்தில் வாழ்வது எளிதான காரியம் அல்ல என்பதை உணர்ந்தேன்.
மோசேயும் சிறிது காலம் தன் குடும்பத்தினரை விட்டுப் பிரிந்திருக்க வேண்டியதாக இருந்தது. இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து விடுதலை செய்து நடத்திச் செல்லும் மாபெரும் பணியில் ஈடுபட்டிருந்ததால் மோசே, தன் மனைவியான சிப்போராளையும் தனது இரு மகன்களையும் மீதியான் தேசத்துக்கு அனுப்பிவிட்டார். தனது முயற்சியில் வெற்றியடைந்த பின்னர் தனது அன்பு குடும்பத்தினருடன் இணைய ஆவலாயிருந்தார். அவருடைய மாமன் எத்திரோ அக்குடும்பத்தினர் இணைய உதவினார். கிறிஸ்தவர்களாகிய நாமும் ஒன்றுசேரும் ஒருநாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். “அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1தெச.4:16-17). இது ஒரு குடும்பத்தின் இணைவு. ஒருநாள் நாமும் இதுபோன்ற நித்திய இணைதலை அனுபவிப்போம். எனக்காய் தமது ஜீவனைக்கொடுத்து என்னை மீட்ட இயேசுவை நான் முகமுகமாய் தரிசித்து அவரோடு என்றென்றும் வாழ ஆவலோடு காத்திருப்பேனா!
ஜெபம்: கர்த்தாவே, இவ்வுலகில் தங்கள் உறவுகளை இழந்து தவிக்கும் மக்களை திடப்படுத்தும். மீண்டும் ஒருநாள் கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சந்திப்போம் என்ற நிச்சயத்தை தந்திருக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.