பாரம் சுமப்பவர்கள்!
தியானம்: 2026 மே 24 ஞாயிறு | வேத வாசிப்பு: யாத்திராகமம் 18:22-27

இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும் (யாத். 18:22).
அது ஒரு மதியவேளை. சூரியன் நடுவானில் சுட்டெரிக்கும் அந்த வேளையில், ஒரு குழுவினர் ஆல்பர்ட் ஸ்விட்சருடன் மலையின்மீது ஏறிக் கொண்டிருந்தனர். திடீரென்று ஆல்பர்ட் குழுவிலிருந்து விலகியோடினார். ஒகோவா நதியோரத்தில் தன் தலையில் விறகுகளுடன் தள்ளாடி ஏறிக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்ணை நோக்கிச் சென்றார். அவளது விறகுச்சுமையை வாங்கிக் கொண்ட 85 வயது ஆல்பர்ட் மலையுச்சி வரை சுமந்துவந்து அவளுக்கு உதவினார். அப்பொழுது ஒருவர் ஆல்பர்ட் ஸ்விட்சரிடம், “இந்தக் கடுமையான வெயிலில் வயதில் முதியவரான நீர் அக்காரியத்தைச் செய்திருக்கக்கூடாது” என்று கடிந்துகொண்டார். ஆல்பர்ட் ஸ்விட்சரோ அமைதியாக, அச்சுமையை அப்பெண் மாத்திரமல்ல, யாருமே தனியாக சுமக்கக்கூடாது என்று பதிலளித்தார். மோசேயும் இதுபோலவே தனியாளாய் பாரத்தைச் சுமக்க முயன்றார். ஆனால், மற்றவர்களும் பாரத்தைச் சுமக்கவேண்டும் என்று மோசேயின் மாமன் எத்திரோ அவரிடம் ஞானமாய் எடுத்துக் கூறினார்.
தேவனுடைய மக்களும் தங்களுடைய பாரத்தைத் தனியே சுமக்கத் தேவையில்லை. நமக்கு உதவிக்கரமாக ஜெபம் உரிமையாக்கப்பட்டுள்ளது. “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1பேது.5:7) என்று பேதுரு நமக்கு ஆலோசனை கூறுகிறார். திருச்சபையாக, தேவனுடைய பிள்ளைகளாக நாம் இன்னொருவருடைய பாரத்தைச் சுமப்பது அவசியம். “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்” (கலா.6:2) என்று பவுல் விசுவாசிகளுக்கு அறிவுரை கூறுகிறார்.
மற்றவர்களுடைய பாரத்தைச் சுமப்பதற்கு நீங்கள் ஆயத்தமா? ஒருவேளை இன்னுமொரு நபருடன் சேர்ந்து ஜெபிக்கவோ, உணவு சமைத்துக் கொடுக்கவோ, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அழைத்துச் செல்லவோ உங்கள் உதவி அவருக்குத் தேவைப்படலாம். நீங்கள் சுமக்கவேண்டிய பாரத்தைத் தேடுங்கள், அப்பொழுது அதை மிக எளிதாகக் கண்டுகொள்ளலாம். மற்றவர்களுடைய சுமையை இலகுவாக்குவதே நமது கடமை. தேவன் அதையே எதிர்பார்க்கின்றார். அது எந்தப் பணியாக இருந்தாலும் சரி, அந்தப் பொறுப்புணர்வு தற்காலத்தில் மிகுந்த மனநிறைவையும் எதிர்காலத்தில் நித்திய வெகுமதியையும் அளிக்கும். சுமையைப் பகிர்ந்துகொள்ளும் போது துன்பம் மெய்யாகவே பாதியாகக் குறையும். இன்று நமக்கும் பல்வேறு சுமைகள் இருக்கலாம்; என்றாலும் பிறர் பாரத்தைச் சுமப்பதில் உள்ள இன்பமும் மனநிறைவும் வேறெதிலும் காணமுடியாது.
ஜெபம்: எங்கள் நல்ல கர்த்தாவே, பாரச்சுமையோடு உள்ளவர்களது சுமைகளை இலகுவாக்க உதவும்படி எங்களுக்கு தேவபெலத்தையும் ஞானத்தையும் தந்தருளும். ஆமென்.