தடைகள் இல்லை

தியானம்: 2026 மே 25 திங்கள் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 19:1-6

YouTube video

நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள் (யாத்.19:4).

எனது நண்பன் சிறுவனாக இருந்தபோது, ஒரு சிறு கிராமத்தில் வசித்து வந்தான். அவனது பாடசாலையோ நகரத்தின் அடுத்த எல்லையில் இருந்தது. நகருக்கு வெளியே இருந்த மாணவர்களுக்கு மட்டுமே பாடசாலை பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனவே எனது நண்பன் பாடசாலைக்குச் சென்று வர அதிகமான தூரம் நடக்கவேண்டியிருந்தது. பாடசாலை முடிந்து களைப்புடன் திரும்பும்போது, “எனக்கு மட்டும் பறவைபோல் செட்டைகளிருந்தால் இந்த மரங்கள், வீடுகள் இவைகளின் மீது பறந்து வீட்டிற்குச் சென்றிடுவேனே” என்று கற்பனை செய்தது உண்டு என்று அவன் என்னிடம் கூறினான்.

இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தாம் இவ்விதமான செட்டையாக இருப்பதாக தேவன் தம்மை கழுகுக்கு உருவகப்படுத்திக் கூறுகிறார். அவர் தாம் உருவகப்படுத்திய கழுகின் செட்டை அதிக பெலம் வாய்ந்தது. அப்படியானால் அந்தக் கழுகைப் படைத்தவருடைய பெலம் எவ்வளவாயிருக்கும் என்பதை நம்மால் கற்பனைசெய்து பார்க்க இயலுமோ! “தேவ மக்களாகிய இஸ்ரவேலருக்கு பார்வோன் ஏற்படுத்திய தடைகளிலும், கடந்துசெல்லக் கடினமான செங்கடல் நடுவிலும், வறண்டதும் விடாய்த்ததுமான பாலைவனத்திலும் தூக்கியெடுத்து, சுமந்து, அவர்கள் சேர வேண்டிய இடத்துக்குப் பத்திரமாய் தேவன் கொண்டுவந்து சேர்த்தார்” இதைப் பற்றி மோசேயிடம் கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டு சொன்னார்.

தேவனுக்கும் அவர் நேசித்த மக்களுக்குமிடையில் எந்தத் தடையும் அனுமதிக்கப்படவில்லை. இன்று ஒரு கிறிஸ்தவனாக வாழ்வதினால் நமது மகிழ்ச்சிக்கு தடை ஏற்படுகின்றன என சிலர் உணர்வதுண்டு. உடல்நலக்குறைவு, பொருளாதார சிக்கல், குடும்ப உறவுகள் இவைகள் தடைகளாக அமையலாம். நமது கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலைகளால் நாம் சோர்ந்துபோயிருக்கலாம். எனது நண்பனைப்போல கற்பனை உலகில் சஞ்சரிக்கவேண்டாம். யதார்த்தத்தில், நாம் இருக்கவேண்டிய இடத்துக்கு நம்மைத் தூக்கிச் சுமந்து செல்லும் ஆண்டவருடைய வல்லமையான செட்டைகளை நோக்கிப் பார்ப்போமாக. “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசா.40:31) என்ற வாக்குத்தத்தத்தை நினைத்து அதை நமக்குச் சொந்தமாக்கிக் கொள்வோமாக. நம்மால் நடக்கமுடியாத நிலையிலும், நம்மைத் தூக்கி சுமக்கும் ஆண்டவர் நிச்சயம் நமக்கு உதவி செய்வார்.

ஜெபம்: உன்னதமான தேவனே, உமது செட்டைகளின் நிழலில் அடைக்கலமாய் வந்த எங்களை கைவிடாமல் அழகாய் நடத்தினீர்;. எங்களால் நடக்க இயலாத சூழ்நிலையில் எங்களை சுமந்துகொண்டீர். என் ஜீவகாலமெல்லாம் உம்மையேத் துதிப்பேன். ஆமென்.