சந்தேகத்திற்கு இடமில்லை!
தியானம்: 2026 மே 26 செவ்வாய் | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 1:1-3

நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி நான் கார் மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார் (யாத்.19:9).
ஒரு கருத்துக்கு ஆதாரத்தைத் தேடாமல், அதை அப்படியே விசுவாசிப்பது நம்பிக்கை என்று ஒருவர் கூறினார். உண்மையற்றதென்று நமக்குத் தெரிந்தாலும் அதை நம்புவதே நம்பிக்கை என்றும் இன்னொருவர் கூறினார். ஆனால் பரிசுத்த வேதாகமம் கூறும் “நம்பிக்கை” இவ்விரண்டையும் சார்ந்தது அல்ல.
தேவன் மோசேயிடம் பேசும் முன்னதாக, ஒரு கார்மேகத்தில் வருவேன் என்றார். இந்த மேகத்தை ஜனங்கள் எல்லோரும் கண்டார்கள். தேவன் இவ்வாறு வெளிப்பட்டது தமக்காக அல்ல, தாம் மோசேயுடன் பேசியதை ஒருவரும் மறுக்கமுடியாத ஆதாரமாக அவர் தம்மை இவ்வாறு வெளிப்படுத்தினார். இம் முறையினால் மற்றவர்களும் தம்மை விசுவாசிக்க தேவன் இடமளித்தார். வரலாற்றை நாம் திரும்பிப் பார்ப்போமானால், தேவன் இவ்விதமாக மறுக்கமுடியாத பல ஆதாரங்களை பதித்துவைத்துள்ளார். யாரோ சொன்னார்கள் என்பதற்காக ஒருவரும் கிறிஸ்தவ நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. மாறாக, வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், பிழையற்ற தேவ வசனங்கள், மற்றும் வெறுமையான கிறிஸ்துவின் கல்லறை போன்ற முக்கிய தடயங்கள் தேவன் தந்த நல்ல ஆதாரங்களாகும்.
அப்போஸ்தலராகிய யோவான், தனது நற்செய்தி நூலின் நிறைவில் “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும் படியாகவும், இவைகள் எழுதப்பட்டுள்ளது” (யோவா.20:31) என்று எழுதியுள்ளார். லூக்கா தனது நடபடிகள் புத்தகத்தின் ஆரம்பத்தில், “அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்” என்று அப்போஸ்தலர் 1:3ல் காண்கிறோம். சந்தேகத்திற்கு இடமின்றி, தேவன் தேவையான ஆதாரங்களை வைத்துள்ளார். உங்களுக்கு சந்தேகம் எழும்பும் நேரங்களில் அவைகளைத் தக்க ஆதாரங்களுடன் நிவிர்த்தி செய்துகொள்ளுங்கள். பரிசுத்த வேத வசனத்தை வாசியுங்கள்; அப்போது உங்கள் விசுவாசம் வளரும்; நம்பிக்கை பெருகும். தேவன் நாம் அறியாத காரியங்களை தவிர்த்துவிடச் சொல்லவில்லை. மாறாக, “வழக்காடுவோம் வாருங்கள்” (ஏசா.1:18) என்றே அவர் அழைக்கிறார். தேவன் தரும் வாய்ப்பை இழக்காதீர்கள். தேவன் சந்தேகத்துக்கு இடம் வைப்பவர் அல்ல. நமது கிறிஸ்தவ நம்பிக்கை, ஒரு கட்டுக்கதை அல்ல; அது ஜீவனுள்ள ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது.
ஜெபம்: அன்பின் பரமபிதாவே, ஜீவனுள்ள தேவனின் மகத்துவத்தையும் இரட்சிப்பையும் குறித்த ஆதாரங்களை முழுமையாக எங்களுக்குத் தந்திருக்கும் பரிசுத்த வேதாகமத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். ஆமென்.