நாமும் தூக்கி நிறுத்துவோமா!
தியானம்: 2026 மே 27 புதன் | வேத வாசிப்பு: யோவான் 3:1-11

அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார் (மத்.12:20).
ஒரு குட்டி யானை தவறுதலாக ஒரு பள்ளத்தினுள் விழுந்துவிட்டது. அதற்கு எழுந்து மேலே ஏறிவர முடியவில்லை. அதைக் கண்ட தாய் யானையோ தன்னால் முடிந்தளவு தன் குட்டிக்கு உதவி செய்ய எத்தனித்தது. ஆனால் குட்டியை மீட்கமுடியவில்லை. அப்போது அக்கூட்டத்திலிருந்த ஏனைய யானைகள் ஒன்று சேர்ந்தன. எல்லாமே சேர்ந்து குட்டியை வெளியே எடுத்த காட்சி ஒரு அற்புத காட்சிதான். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிலே இதை ஒளிபரப்பினார்கள். விழுந்தது ஒரு குட்டிதானே என்று விட்டுவிடாமல் மிருகங்களே இத்தனை உணர்வோடு செயற்பட்டால், ஆவியிலே உற்சாக மிழந்து, வாழ்வின் பள்ளங்களுக்குள் விழுந்துபோன நமது சகோதர சகோதரிகளின் விஷயத்தில் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? எப்படி நடந்துகொள்கிறோம்? விழுந்தவர்களை விழுந்த இடத்திலேயே விட்டாலும் பரவாயில்லை. அவர்களை இன்னும் வேதனைப்படுத்தி சிலசமயம் நம்மையும் அறியாமல் அவர்களைக் கொன்றுபோடுகிறோமே.
ஆனால் ஆண்டவருடைய காரியம் அதுவல்ல. சமுதாயத்திலே கேவலமானவள் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணின் விஷயத்திலும் சரி, நான் உம்மோடு மரிக்க வேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று மார்தட்டிய பேதுருவின் விஷயத்திலும் சரி, ஆண்டவர் நெரிந்த நாணலை முறிக்கவுமில்லை, மங்கியெரிந்த திரியை அணைக்கவும் இல்லை. நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்று அந்தப் பெண்ணுக்கு ஒரு புதுவாழ்வைக் கொடுத்தவர், தம்மைக் காட்டிக் கொடுத்த பேதுரு மனஸ்தாபத்தோடு திரும்பிப் பார்த்தபோது, அவன் மூலமாக தன் சபையையே கட்டியெழுப்ப சித்தம் கொண்டார் என்று காண்கிறோம்.
ஆவிக்குரிய வாழ்வில் சோர்வுற்று, உடைபட்டு, எரிந்து சாம்பலாகும் நிலைக்குள் தள்ளப்படலாம். ஆனால் ஆண்டவர் நம்மை ஒருபோதும் தள்ளி உதைத்து எறிந்துபோடுகிறவர் அல்ல. அவர் நம்மைக் கவனமாகத் தூக்கி நிறுத்துவார். புதுவாழ்வு தருவார். இந்த அன்பு இன்று உலகுக்குத் தேவை. நம் வாழ்வில் ஆண்டவர் நம்மை நிறுத்தி வைத்ததை உணர்ந்து, விழுந்துபோன மற்றவர்களையும் தூக்கி நிறுத்துகிறோமா? எல்லோரது விஷயத்திலும் தேவன் உண்மையும் நல்லவருமாயிருக்கிறார் என்பதை ஆவியானவர் துணையோடு வெளிப்படுத்துவோமானால், அங்கே நாம் ஆண்டவரை வெளிப்படுத்துகிறோம். பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களை கன்மலையின்மேல் நிறுத்தி… நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார் (சங்.40:3,4)
ஜெபம்: ஆண்டவரே, என்னிடத்தில் உள்ள குறைகளை கண்டு நீர் என்னைத் தள்ளியிருந்தால் இன்று நான் எங்கே இருந்திருப்பேன். நீர் என்னைத் தள்ளாமல் என்னை உயர்த்தியதை நான் மற்றவர்கள் விஷயத்திலும் காட்ட எனக்கு உமது பெலனைத் தாரும். ஆமென்.