கிரியையில் தெரியும் மனதுருக்கம்!

தியானம்: 2026 மே 28 வியாழன் | வேத வாசிப்பு: மத்தேயு 14:13-22

YouTube video

கர்த்தர் அவளைப்பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்ட வந்து, பாடையைத் தொட்டார் (லூக்கா 7:13,14).

ஆப்பிரிக்கா தேசத்தின் பசிக்கொடுமையை தொலைக்காட்சியில் பார்த்து உள்ளம் உருகிக்கொண்டிருந்தார் ஒருவர். வீட்டுக் கதவு தட்டும் சத்தம் கேட்டது. இந்த நேரம் யார் என்று ஆத்திரப்பட்டவராகக் கதவைத் திறந்தார். அங்கே ஒரு ஏழைத்தாய் பிச்சை கேட்டுக்கொண்டு நின்றார். இவருக்கு வந்தது கோபம்; உங்களுக்கு நேரகாலமே இல்லையா என்று கடினமாகப் பேசி கதவை அடைத்துவிட்டார். இப்படித்தான், எங்கேயோ பட்டினியாயிருப்பவர்களுக்காக மனதுருகிப் பரிதாபப்படுவோம். நம் கண் எதிரே கஷ்டப்படுகிறவர்களையோ காணாதவர்கள்போல இருக்கிறோம்;. இது மனதுருக்கம் அல்ல!

விதவையாகிவிட்ட அவளுக்கு இருந்த ஒரேயொரு நம்பிக்கை அவளுடைய மகன்தான். அந்த நம்பிக்கையும் இப்போது செத்துவிட்டது. அவளுடைய வேதனையில் பங்குபெற்று, அவளுக்காகப் பரிதாபப்பட்டவர்கள் அநேகர். ஆனால், உடலை அடக்கம் செய்த பின்னர் அந்த அநேகரில் ஒருவராவது அவளுக்கு ஏதாவது செய்யமுடியுமா? ஆனால் அப்படிப்பட்டவளை இயேசு சந்தித்தார். அவளுக்காக மனதுருகினார். வெறுமனே அவளுக்காகப் பரிதாபப்பட்டு கடந்துபோகவில்லை. பாடையைத் தொட்டார். மரித்தவனை உயிரோடு எழுப்பினார். அவள் வேதனையை நீக்கினார்.

திரள்கூட்டம் பின்பற்றியதை இயேசு கண்டார். மேய்ப்பனில்லாமல் தொய்ந்து சிதறுண்டுபோன ஆடுகள்போல இருந்த அவர்களைப் பார்த்து மனதுருகினார் (மத்.9:36). அவர்களுடைய உள்ளத்தின் வெறுமையைக் கண்டார். தாகத்தைக் கண்டார். யாராலும் அவர்களுக்கு உதவமுடியாத நிலையில் இயேசு அவர்களுடன் பேசினார். அவர்கள் தேவைகளைச் சந்தித்தார். வியாதியஸ்தரைக் குணமாக்கினார். மாத்திரமல்ல; அவர்களுக்குப் போஜனமும் கொடுத்தபின்னரே அனுப்பிவைத்தார் (மத்.14:14).

அருமையான தேவபிள்ளையே, மனதுருக்கம் என்பது மனதளவில் அல்ல; செயலிலே வெளிப்படுகிற ஒரு தெய்வீக பண்பு. ஒருநாளைக்கு எத்தனைதடவை “ஐயோ, பாவம்“ சொல்லியிருப்போம்! ஐந்தோ பத்தோ வீசி எறிந்துவிட்டால் போதாது. சூழ்நிலைகளின் கட்டுப்பாட்டையும் மீறி தனித்தவர்களாக சமுதாயமாக சிதைந்துபோயிருக்கிறார்கள். பரிதாபம் பார்க்க அநேகர் உண்டு. ஆனால் மனதுருக்கத்தை வெளிப்படுத்துவது யார்? உண்மையான மனதுருக்கம் வாயளவில் அல்ல, செயலிலே வெளிப்படும். கிறிஸ்துவில் காணப்பட்ட அந்த குணநலன் நம்மிடம் உண்டா? உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார் (யோவேல் 2:13).

ஜெபம்: கிருபையுள்ள ஆண்டவரே, நல்ல சமாரியன் காட்டிய அந்த மனதுருக்கம் எங்களுக்குள்ளும் உருவாக எங்களை ஒப்புவிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.