• சகோதரி சாந்தி பொன்னு •
(மார்ச் – ஏப்ரல் 2026)

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பிரதான நகரத்தின் பிரதான வீதியில் ஒரு கோர விபத்து; ஒரு பிள்ளைக்குத் தந்தையான ஒருவர் வீதியைக் கடக்க முற்பட்டபோது, ஒரு கனரக வாகனம் பந்தாடிவிட்டது. அடிபட்ட வேகத்தில் அவர் மேலே வீசப்பட்டு அதே வேகத்தில் கீழே விழுந்தார். ‘நான் கண் விழித்தபோது நான் அனுபவித்த வலியை விபரிக்க வார்த்தைகள் இல்லை’ என்றார் அவர். ‘தலைப் பகுதியும். ழுழங்கால்களுக்குக் கீழுள்ள எலும்புப் பகுதியும் தவிர, உடம்பிலுள்ள அத்தனை எலும்புகளும் நொருங்கிவிட்டது’ என்றார் அவர். சகல எலும்புகளும் தாறுமாறாக நொறுங்கிவிட்டது. பலம் குறைந்த விலா எலும்புகள் ஒன்றின்மேல் ஒன்று ஏறியிருந்ததாம். மிகவும் பலமான இடுப்பு எலும்பு மூன்று பகுதிகளாக வெடித்துப் பிளந்துவிட்டிருந்ததாம். இவருக்கு இன்னும் சில மணிநேரம்தான் என்று கணக்கிட்ட வைத்தியர்கள், இவரைக் கவனிக்காமல் அப்படியே விட்டிருந்தார்களாம். வலியால் துடி துடித்த இவரைப் பார்க்கச் சகிக்காத சில அன்பானவர்கள் வைத்தியர்களைப் பலவந்தப்படுத்தியதால் வைத்தியம் ஆரம்பிக்கப்பட்டதாம். அவர் சொன்னதைக் கேட்ட எனக்கு இரத்தமே உறைந்துவிட்டது போல இருந்தது. பல வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்தப் பயங்கர அனுபவத்தை அவர் இப்போ பகிர்ந்துகொண்டபோது, ‘நான் இப்போது நல்ல (இதனை அழுத்திச் சொன்னார்) சுகமாக இருக்கிறேன். உள் உறுப்புகள் உருக்குலைந்து விட்டது என்று சொன்னார்கள். ஆனால் நான் இன்று எந்தவித ஆரோக்கிய குறைபாடுகளும் இன்றி சுகமாக வாழுவது கர்த்தருடைய முழுமையான கிருபையேயன்றி வேறேதுமில்லை’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

நொறுங்கிப்போன சரீரம்; ஏராளமான அறுவை சிகிச்சைகள், மயக்கமருந்து கொடுப்பது ஆபத்து என்பதால், உணர்வுடன் இருந்தபோதே நடந்தேறிய சிகிச்சைகள், மருந்துகள், வைத்தியர்களின் அன்பின் பராமரிப்புகள், இதையும் மிஞ்சி ஏராளமானவர்களின் ஜெபங்கள், இவை யாவற்றுக்கும் மேலாக இவர்மேல் வைக்கப் பட்டிருக்கிற அநாதி திட்டங்கள் இன்னமும் முடியா ததாலே இவர்மீது இறங்கிய தேவ ஆவியானவரின் பலம், இவை யாவும் ஒன்றிணைந்து இவர் இன்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வைத்திருக்கிறது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

ஆவி, ஆத்துமா சரீரம்:

சரீரத்தை நேராக உறுதியாக வைத்திருக்கிற எலும்புகள் நொருங்கிப்போக, உள்ளுறுப்புகள் சிதைந்துவிட்டனவோ என்ற சந்தேகம் எழுப்ப, சகல நம்பிக்கைகளும் நொருங்கிவிட்ட நிலையில் தனது பிள்ளையைக் கண்ட கர்த்தர், அவனுடைய நொறுங்கிய சரீரத்துக்கே மறுவாழ்வு கொடுத்து எழுப்பிவிட்டிருப்பாரானால், கர்த்தரோடு நெருங்கி உறவாடுகின்ற நமது ஆவியையும், அவரையே கர்த்தராகக் கொண்டு அவரையே தொழுது கொள்ளுகின்ற நமது ஆத்துமாவையும் அவர் பாராமுகமாக விட்டுவிடுவாரா? இந்த சகோதரரின் ஆவியும் ஆத்துமாவும் ஏற்கனவே ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு, அவர் கிருபையாக அருளிய இரட்சிப்பில் மகிழ்ந்திருந்தது. அந்த இரட்சிப்பின் மகிழ்ச்சி அவருக்குள் இருந்ததால், சரீர வேதனையால் துடிதுடித்துக் கதறிய வேளையிலும், ‘கர்த்தாவே, சுகம் தந்தாலும் நான் உம்மோடு, தராவிட்டாலும் நான் உம்மோடு’ என்று தன்னை ஒப்புக்கொடுத்ததாகவும், தன் ஆத்துமா திடமாக இருந்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டபோது, கர்த்தரைத் துதிக்காமல் இருக்கமுடியவில்லை.

‘உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், …நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?’ (1கொரி.6:19) என்று பவுல் எழுதுகிறார். நமது சரீரம் கர்த்தருடைய ஆவியானவர் தங்கி வாழும் ஆலயமாக இருக்கவேண்டுமானால், நமது உள்ளான ஆவியும், கர்த்தரை நமது இரட்சகராக ஏற்றுக்கொண்ட நமது ஆத்துமாவும் என்றென்றும் கர்த்தருக்குள் நிலைகொண்டிருக்க வேண்டுமல்லவா! வெளிப்புற ஆலயம் இடிந்தால் அதை மீளமைக்க கர்த்தரால் முடியும்; ஆனால் அதற்கு முன்னர் நமது ஆவியும் ஆத்துமாவும் கர்த்தரில் நிலைகொண்டிருக்க வேண்டுமே! அவை கறைப்பட்டால், தன்னை உண்டாக்கி உருவாக்கிய கர்த்தரைவிட்டு விலகினால், கர்த்தருடைய வழிகளைவிட்டு, சுய வழிகளையும் சுயஇச்சைகளையும் நாடி, இந்த உலகத்தின் ஈர்ப்புக்கெல்லாம் இழுவுண்டு போனால், அதாவது சத்துருவின் வஞ்சகத்துள் அகப்பட்டு நிலைதடுமாறுமானால், அது நம்மை அழிவுக்கு இட்டுச் செல்லுவதை யாராலும் தடுக்க முடியாது.

நாம் நம்மை உணரும்வரை:

ஆனாலும் நமக்கு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை செயற்படவேண்டும் என்றால், கர்த்தருடனான முறிந்துபோன உறவு மீளமைக்கப்படவேண்டுமானால், விழுந்த இடத்தில் நின்று, நமது அவலநிலையினின்று நாமேதான் உணர்வடையவேண்டும். அந்த அவசியத்தை நாம் உணரும்வரைக்கும் கர்த்தரால் எதுவும் செய்ய முடியாது. செவிகள் கேட்பதிலும், வாய் பேசுவதிலும், கண்கள் பார்ப்பதிலுமே பாவம் ஆரம்பிக்கிறது என்று சொல்வார்கள்; ஏனெனில் ஏவாள் கேட்டாள், பேசினாள், கண்டாள், புசித்தாள். ஆனால் காதுகள் கேட்கும், வாய் பேசும், அதிலும் கண்கள் இருந்தால் அது பார்க்கத்தான் செய்யும். ஆனால் பார்த்ததை மனதில் உள்வாங்கி இச்சையை வளர்ப்பது நமது மனதுதான். இதன் பலனாக நமது சிந்தனை சிதையும்; அப்போது, கர்த்தருடனான நமது உறவு மாசடைய, சரீரம் துணிந்து பாவத்தை அரவணைக்க ஆரம்பிக்கிறது.

இன்னுமொரு விஷயத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சரீரம் காயப்படவேண்டுமானால், நொருங்கவேண்டுமானால் அதற்கு வெளிப்புறக் காரணிகள் அவசியம். நாமே நம்மைக் காயப்படுத்துவோமா? இல்லை! ஆனால் ஆவியையும் ஆத்துமாவையும் விபத்தோ, இயற்கை அனர்த்தமோ எதுவுமே நேரடியாக நொருக்கிப்போட முடியாது. அது நம்மில்தான் இருக்கிறது. எவரொவர் தன் பாவத்தை உணர்ந்து, கர்த்தருடைய பிரசன்னத்தில் தான் இழக்கப்பட்டதை உணர்ந்து, தன் அவல நிலையை உணர்ந்து உள்ளம் உடைந்து தனக்கு விடுதலை வேண்டும் என்று கதறுகிறாரோ, அங்கேதான் அவருடைய இருதயம் நொருங்குகிறது; அவருடைய ஆவி வேதனைப்படுகிறது. அந்த இடத்தில்தானே அவருடைய விடுதலை ஆரம்பிக்கிறது.

உண்மையான பாவஅறிக்கை எது?

நாம் பாவஅறிக்கை பண்ணுகிறோம்; ஆராதனையில் கூட்டாக பாவ அறிக்கை ஜெபத்தை ஏறெடுக்கிறோம்; அது நல்லது. ஆனால் மெய்யாகவே நமது பாவத்தை உணர்ந்து, இருதயம் நொருங்கித்தான் அந்த விண்ணப்பத்தை ஏறெடுக்கிறோமா என்பது கேள்விக்குறிதான். ஏறத்தாழ 37 வருடங்களாக ஆலயம் சென்று, ஆராதனை திருவிருந்து யாவற்றிலும் பங்கு பெற்று, பாவஅறிக்கை செய்துவந்த ஒருவர் சொன்னதை அப்படியே தருகிறேன்: “உண்மைதான். ஒரு கிறிஸ்தவ வாழ்வைத்தான் நான் வாழ்ந்து வருவதாக எண்ணியிருந்தேன். ஆனால் என்னைவிட்டு எல்லாம் அகன்றுபோய், இதுதான் வாழ்வு என்று நான் அனுபவித்து வந்ததெல்லாம் உடைந்துபோய், எல்லாமும் எல்லாரும் இருந்தும் ஒன்றுமில்லாத தனிமையில் தவித்துப்போய், அடுத்தது என்ன செய்வது, அடுத்த அடி எங்கே வைப்பது என்பது தெரியாமற்போய், அந்த குறிப்பிட்ட ஆண்டில் வந்த பெரிய வெள்ளி தினத்தன்று ஆலயத்தில் வழமையாக நான் உட்காரும் அந்த ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து, வெளியே வெறித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் முதன் முறையாக, ‘எனக்காக இயேசு மரித்தாரா? எனக்காக அந்தப் பாடுகள் பட்டாரா? எனக்காகவா? ஏன் எனக்காக? நான் நேசிக்கவோ என்னை நேசிக்கவோ எவரும் இல்லாத இந்தப் பாவியின் பாவங்களை இயேசு சுமந்தாரா?’ வாழ்வில் முதன்முறையாக இருதயத்தில் ஆழத்திலிருந்து கேள்விகள் எழுந்ததை என் உள்ளான செவிகள் கேட்டன. அதுவரை நான் என் வாழ்வைத்தான் வாழ்ந்திருக்கிறேன் என்று மாயையான திருப்திக்குள் இருந்த நான் முதன்முறையாக நொருங்கிப்போய், மனம் திறந்து ‘நான் பாவி ஐயா என்று கதறி அழுதேன்’ என்றார் அவர். அதுமுதல் அவர் வாழ்க்கை மாற்றம்பெற ஆரம்பித்தது.

நொருங்குண்ட இருதயம், மனதை உடைத்துப்போடும், அந்த மனவருத்தம், ‘ஐயோ, நான் பாவி’ என்ற உணர்வைத் தரும். அப்போது, தேவனுடைய அக்கினி தன்னைப் பட்சித்து ஏற்றுக்கொள்ளும்படி அவன் தன்னை பலி மேடையில் அர்ப்பணிக்கிறான்; தன் அவலத்தை உணர்ந்து உடைகின்ற இந்த இருதயத்தை கர்த்தர் ஒருபோதும் புறக்கணிக்கவே மாட்டார்.

ஆவியில் நொருங்குண்டு, இருதயத்தில் நொருங்கி மனம்வருந்தி எவனொருவன் தன்னை தேவபாதத்தில் தாழ்த்தி, தன்னைத் தானே ஜீவபலியாக ஒப்புவிக்கிறானோ, அங்கேதான் அவனுக்கு விடுதலை, மறுபடியும் பிறக்கின்ற மேன்மையான வாழ்வு, சத்துருவின் சங்கிலி அறுக்கப்படுவதால் உண்டாகும் மகிழ்ச்சி, ஒரு புதிய உத்வேகம், ஒரு புதிய அர்ப்பணிப்பு, மொத்தத்தில் கிறிஸ்துவுக்குள் புதிதாக்கப்பட்ட ஒரு புதிய வாழ்வுக்குள் அவன் கொண்டுவரப்படுகிறான். இதெல்லாம் நமக்குத் தெரியுமே என்று அறிவு ரீதியாக நாம் மார்தட்டலாம், நல்லது. ஆனால் அந்த புதிதாக்கப்பட்ட மகிழ்ச்சியை நாம் அனுபவமாகப் பெற்றிருக்கிறோமா? பலிமேடையின் அக்கினியால் சுத்திகரிக்கப்பட்டு ஒரு புதிய மனிதனாக வெளிவந்த அந்த அனுபவம், அந்த உறுதி நமக்குண்டா?

தாவீது என்ற ராஜா:

சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாக கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டு, சாமுவேலினால் அபிஷேகம் பெற்று, கோலியாத்தை வீழ்த்தி, சவுலினால் துரத்தப்பட்டபோதும் இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாகப் பாடி, சவுலின் மரணம் வரைக்கும் பொறுத்திருந்து, ஏற்ற காலத்தில் இஸ்ரவேலின் ராஜ்யபாரத்தை ஏற்றுக்கொண்டு, ராஜாவாக கெம்பீரமாக வாழ்ந்திருந்த தாவீதின் வாழ்விலும் ஒரு பெரிய விழுகை ஏற்பட்டது. அடுத்தவன் மனைவியை இச்சித்து, அவனைத் தந்திரமாகக் கொலை செய்வித்து, அவன் மனைவியைத் தன் மனைவியாக்கிக் கொண்டு அமைதியாக இருந்துவிட்டார் தாவீது. கர்த்தரால் அனுப்பப்பட்ட நாத்தான் அவரைச் சந்தித்து, ‘நீயே அந்த மனுஷன்’ என்று தாவீது சுட்டிக்காட்டப்பட்டு, அவருடைய பாவம் உணர்த்தப்படும்வரைக்கும், தாவீது தன் தவறை உணராதவராக மிடுக்காகவே இருந்தார்.

ஆனால் அவருடைய பாவம், துர்நடத்தை, அக்கிரமம் உணர்த்தப்பட்ட அந்தக் கணமே, எந்த நீதிநியாயமும் பேசாமல், ‘நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்’ (2சாமு.12:13) என்று மனங்கசந்து அறிக்கையிட்டார் தாவீது. அதற்காக அதனால் உண்டான விளைவுக்குத் தப்பிக்கமுடியவில்லை. இந்த சமயத்தில், தான் செய்த கொடிய பாவத்தினிமித்தம் சந்தோஷம் மகிழ்ச்சி, சுத்த இருதயம், தேவ சமுகம், பரிசுத்த ஆவி, இரட்சிப்பு, உற்சாகமான ஆவி, என்று சகலத்தையும் இழந்து தவித்து நிற்பதை மனந் திறந்து தன் சங்கீதத்தில் கதறலாக வெளிப்படுத்துகிறார். மாத்திரமல்ல, அந்நாட்களில் பாவம் செய்தால் அததற்கேற்ற பலி செலுத்துவது வழக்கம். ஆனால் தாவீதோ, ‘பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும், நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்’ என்று அறிக்கை பண்ணுகிறார் (சங்.51:17). ஆங்கில மொழிபெயர்ப்பில், ‘The sacrifices of God are a broken spirit; a broken and contrite heart’ என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அதாவது ‘நொருங்குண்ட ஆவியும், நொருங்குண்டு, வருத்தத்துடன் மனந்திரும்பும் இருதயமும்’ இதுதான் கர்த்தருக்கேற்ற பலி.

சிந்தனைக்கு:

பிரியமானவர்களே, சமீபத்திலே நான் வாசித்து உணர்ந்த ஒரு விஷயத்தை உங்கள் சிந்தனைக்கு உங்கள் முன்பாக வைக்க விரும்புகிறேன். இந்தக் கட்டுரையை வாசிக்கும் நாம், ஒரு கணம் நமது உள்ளான மனிதனின் உள்ளான மனதிலே ஒரு காட்சியைக் கொண்டு வருவோமாக. “நமது வாழ்வு என்ற ஆலயத்தில் எரிகின்ற பலிபீடத்தில் என் பலி எரிந்து கொண்டிருக்கிறது. ஆலயம் முழுவதும் அதாவது நமது வாழ்வு முழுவதும் புகை மண்டலமாக இருக்கிறது. ஜன்னல்களினுடாக வெளிச்சம் வரவில்லை, வாசல் நிலைகளும் தெரியவில்லை. ஆனால் நாம் எங்கே நிற்கிறோம் என்று நமக்குத் தெரியும். நாம் எவ்வளவுக்கு உபத்திரவப்படுகிறோமா, அவ்வளவுக்கு நாம் பலி மேடைக்கு அருகே நிற்கிறோம். இந்த சிந்தனை நம்மை இறுகப்பிடித்திருக்க, அமைதியாக நிற்கிறோம், பயம் இல்லை, பலி முடிந்ததும், முடிவில்லாத நம்பிக்கையும் விசுவாசமும் ஒன்றன் பின் ஒன்றாகத் திறக்கின்ற ஜன்னல்கள் வழியாகக் காணப்பட, எல்லாம் தெளிவாக, அந்த இருண்டு தெளிவற்ற கணங்களுக்காக நிச்சயம் நமது இருதயம் கர்த்தரைத் துதிக்கும்” என்பதே. இந்த நாளிலே அந்த தெய்வீக பலிமேடையிலே நம்மை ஒப்புக்கொடுக்க முடியுமா? நொருங்குண்ட நருங்குண்ட பலியாக நம்மைப் பலிமேடையில் எரிக்கும்போது, அது ஒருவித தனி சுகத்தைத் தரும்; ஏனெனில் பலி ஏறெடுக்கப்பட்ட பின்னர் நமக்காகக் காத்திருக்கும் ஒரு புதிய வாழ்வு, அது ஈடு இணையற்றதல்லவா! தேவனுடைய பாதபடி யண்டையில் நம்மைத் தருவோமாக.

“நொருங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” (சங்.34:18). இதுவும் நொருக்கப்பட்ட தாவீதின் சங்கீத வார்த்தைகள். இதிலும் மேலாக கர்த்தருடைய வார்த்தை இது:

“நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாம முள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன்” (ஏசா.57:15). இதைத் தொடர்ந்து: ‘நான் எப்போதும் வழக்காடமாட்டேன், நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும் என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்து போகுமே’ என்கிறார் கர்த்தர்.

“நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரண மடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்” (எரே.31:25) என்று சொன்னவர் பொய்யுரையாதவர். நொருங்கிப் போன இருதயத்தை அவர் புறக்கணிக்காமல், அதைத் தமது கரத்தில் எடுத்து, தமக்கேற்ற பாத்திரமாக உருவாக்கி, தமது முகப்பிரசன்னம் அந்த முகத்தில் பிரதிபலிக்கச் செய்கிறவர். ஆகவே, நாம் தைரியமாகவே அவருடைய கிருபாசனத்தண்டைக்குச் செல்லலாம்.

இறுதியாக…

நமது வெளிப்படையான எந்தவொரு கிரியைகளாலும் ஒருபோதும் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. உள்ளான இருதயத்தின் நோக்கமும் நினைவும் சரியாக இருக்குமட்டும் நமது வெளிப்புற செயல்கள், உதாரணமாக ஆராதனைகள், பாவ அறிக்கைகள், ஊழியங்கள், சமூகப் பணிகள், தானதருமங்கள், உபவாசங்கள் எதுவும் உதவாது.

ஆனால் இன்று மனுக்குலம் சத்துருவின் வஞ்சக சோதனைக்குள் தான் அகப்பட்டிருப்பது தெரியாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் நம்மால் மறுக்கமுடியாது. ‘நான் திடமாகவேதான் நிற்கிறேன்’ என்ற மாயைக்குள் மனுக்குலம் அகப்பட்டுள்ளது. மனந்திரும்ப வேண்டிய அவசியத்தை உணரமுடியாதபடி சத்துரு தேவபிள்ளைகளின் மனக்கண்களைக் குருடாக்கி ஒரு மாயைவலைக்குள் வைத்திருக்கிறதையும் உணரமுடியாமல், அவசர வாழ்வுக்குள் மனிதன் தள்ளப்பட்டுள்ளான்.

எவனொருவன் தன் அவலநிலையை பாவநிலையை உணர்ந்து, தன்னால் தன்னை எதுவும் செய்யமுடியாது என்ற தாழ்நிலைக்குள் வந்து, ‘ஐயோ நான் அதமானேன்’ என்று பாவஉணர்வு பெற்று, நொருங்குண்ட நருங்குண்ட ஆவியில் ஆத்துமாவில் விடுதலைக்காகக் கதறுகிறானோ, நிச்சயம் கர்த்தர் அவன் வாழ்வில் பெரிய காரியம் செய்வார். இன்று நமது நிலை என்ன? சிந்திப்போம்.