• Dr.வாரன் வியர்ஸ்பி •
(மார்ச் – ஏப்ரல் 2026)

தனிமை உணர்வினால் எப்போதாவது வாடியதுண்டா? அல்லது தனிமையில் வாடிய எவருக்காவது உதவிட முயற்சி செய்ததுண்டா? தனிமை உணர்வு புதியதொரு பிரச்சனையல்ல. மிக நீண்ட காலமாகவே மனிதனை வாட்டும் பிரச்சனை இதுவாகும்.

சங்கீதக்காரன் 102ம் சங்கீதத்தில் “கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்; என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக. என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும். என் நாட்கள் புகையைப் போல ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப் போல் எரியுண்டது. என் இருதயம் புல்லைப் போல வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன். என் பெருமூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்கிறது. வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன். நான் நித்திரையில்லாமல் வீட்டின் மேல் தனித்திருக்கும் குருவியைப் போல் இருக்கிறேன்” (சங்.102:1-7) என எழுதுகிறான்.

உண்மையில் சங்கீதக்காரனுடன் சேர்ந்து அவனுடைய தனிமையை உங்களாலும் உணரக்கூடியதாய் இருக்கும். ஜனத்தொகையானது தீவிரமாக அதிகரித்து வருகையில் தனிமை உணர்வு மனிதனின் மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது ஆச்சரியப்படக்கூடியதே. தனிமை உணர்வு இலகுவானதொரு பிரச்சனையல்ல. எனவே அதனை சாதாரணமாக விட்டுவிடக்கூடாது.

தனிமை உணர்வின் விளைவுகள்

சரீரரீதியாக தனிமை உணர்வு பல விளைவுகளை உருவாக்குகிறது. ஆய்வு அறிக்கை ஒன்று 50 வீதத்திற்கும் மேலதிகமான இருதய நோயாளிகள் தமக்கு இவ்வியாதி வருவதற்கு முன் தனிமை உணர்வினாலும் சோர்வினாலும் துயருற்றனர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளதை அறியக்கூடியதாய் உள்ளது. தனிமை உணர்வுக்கும் சில வகையான புற்று நோய்க்கும் சம்பந்தம் இருப்பதாக ஒரு சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மனோ நிலையிலும் கூட தனிமை உணர்வு சில விளைவுகளை ஏற்படுத்துகிறது. மன நோயாளிகளைப் பேட்டி கண்டதில் 80 வீதத்தினர் தாம் தனிமை உணர்வினால் வாடியபோது உதவியற்ற பரிதாபமான நிலையில் இருந்தமையினாலேயே மனோநிலை பாதிக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர். தனிமை உணர்வானது நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தி பெருந்தீனி, குடிப்பழக்கம் என்பவற்றோடும் நித்திரையின்மையையும் தோற்றுவிக்கிறது. ஐக்கிய அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் தனிமை உணர்வின் நிமித்தம் ஐம்பதினாயிரம் பேர் வரை தற்கொலை புரிகின்றனர். தனிமையில் வாடும்போது மக்கள் தம்மை அழித்துக்கொள்ள வேண்டும் என எண்ணுகின்றனர். கலிபோர்னியாவில் உள்ள “தற்கொலை தடுக்கும் நிலையம்” இளைஞர்களைப் பேட்டி கண்டபோது தனிமை உணர்வே தம்மைத் தற்கொலை செய்யத் தூண்டுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

தனிமை உணர்வு சரீர ரீதியாகவும், மனோ நிலை ரீதியாகவும் மாத்திரமல்ல; ஆவிக்குரிய ரீதியாகவும் சில விளைவுகளை ஏற்படுத்துகின்றது. தேவன். நம்மை தனித்திருப்பதற்காக அல்ல, அவருடைய பிள்ளைகளாக அவருடன் ஐக்கியப்பட்டிருப்பதற்காகவே படைத்தார். நமது வாழ்வு செயற்பாடுடையதாகவும், வளர்ச்சியடைவதற்காகவும், வளமான செல்வங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவுமே நாம் படைக்கப்பட்டுள்ளோம். தேவன் நாம் அடைய வேண்டுமென வைத்துள்ளவற்றை தனிமை உணர்வினால் அடைய முடியாமற் போவது கவலைக்குரிய விஷயமே.

தனிமை உணர்வின் அர்த்தத்தைப் பார்க்கையில் நாம் மூன்று முக்கிய வினாக்களுக்கு விடையளிக்க முயற்சிப்போம்.

தனிமை உணர்வின் வரைவிலக்கணம்.

நமது வாழ்வின் மற்றைய உணர்வுகளைப் போலவே தனிமை உணர்வை நாம் அனுபவித்தாலும்கூட அதை வார்த்தைகளினால் விளக்குவது இலகுவானதல்ல. தனிமை உணர்வானது நீங்கள் மக்களால் சூழப்பட்டிருக்கையில் ஏற்படுவதொன்றாகும். கூட்டத்தின் மத்தியிலும் வேறு பிரிக்கப்பட்டிருப்பதைப் போல உணர்வதே தனிமை. நீங்கள் தேவையற்றவர். அவசியமற்றவர் என உணர்வீர்கள். உண்மையிலேயே ஒருவரும் உங்கள் மீது அக்கறையோ கரிசனையோ கொள்ளவில்லை என்பதாக உணர்வீர்கள். அதுதான் தனிமை உணர்வு. தனிமை உணர்வு உள்ளான மனிதனை அழித்துவிடும். உமது சக்தியைக் குறைக்கும். உமது நம்பிக்கையை அகற்றிவிடும். நீங்கள் எவ்வளவு சுதந்திரமான மனிதராக இருந்தபோதிலும் கூட தனிமை உணர்வானது உங்களைச் சுற்றி ஒரு சுவரைக் கட்டி விடும்.

எது தனிமை உணர்வு அல்ல?

தனிமை உணர்வுக்கும் தனித்து விடப்படுவதற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தனித்து விடப்படுவது சரீரப்பிரகாரமான தனிமை. தனித்திருப்பது நமக்கு நன்மையையே தரும். தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபத்திலும் தியானத்திலும் காலத்தைக் கழிப்பது இயேசுகிறிஸ்துவின் வழக்கமாயிருந்தது. கப்பலில் பிரயாணம் செய்கையில் அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு முறை தனது நண்பர்களையெல்லாம் விட்டு தனித்த இடத்திற்குச் சென்றார். அவர் தனித்திருக்க விரும்பினார்.

என்னுடைய தனிப்பட்ட வாழ்விலும் கூட அனுதினமும் சிந்திப்பதற்கும் தியானிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் தனிமையான இடத்தை நாடுவேன். எனது உள்ளான மனிதனுக்கு நல்ல திருப்தியும் சுகமும் அவசியம். தனித்திருப்பது, நமக்கு மிகவும் நல்லது. தியானிப்பதற்கும். சிந்திப்பதற்கும் ஜெபிப்பதற்கும் தேவனுடன் தனித்து தரித்திருப்பது நல்லது என தேவனுடைய வார்த்தை கூறுகிறது.

தனிமை உணர்வு என்பது இவ்வாறு தனித்திருப்பது அல்ல என்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டும். தனித்திருக்கும் அனுபவம் பொதுவாக நம் எல்லோருக்குமே இருக்கும். என் குடும்பத்தைவிட்டு நான் பிரயாணம் செய்கையில் தற்காலிகமாகத் தனித்திருக்கும் தன்மையை உணர்ந்ததுண்டு. ஆனால் நீங்கள் தனித்திருக்கும்போது இந்நிலைக்கு முடிவு வரும் என உங்களுக்கு நன்றாய்த் தெரியும். நீங்கள் கடமை முடிந்ததும் வீடு போய் சேர்ந்து விடலாம் அல்லது அன்புக்குரியவர்கள், நண்பர்கள் உங்களிடம் வரலாம் என்பதை அறிவீர்கள். தனித்திருப்பது தனிமை உணர்வைப் போல மிகவும் ஆழமானதல்ல. அது உங்களை அவ்வளவாகப் பாதிக்காது. சிலசமயம் தனித்திருக்கும் போது துயரமும் கவலையும் கூட வரும். அநேகமாக இத்தகு நிலை நம் அன்புக்குரியவர்களில் எவராவது இறந்தால் நாம் பரலோகம் செல்லும் வரை அந்நபரைக் காண முடியாது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அந்நபர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து மறுபடியும் பிறந்தவராயின் இந்நம்பிக்கை நமக்கு இருக்கும்.

தனிமை உணர்வு என்றால் என்ன?

தனிமை உணர்வு என்பது, தனித்திருப்பது அல்லது யாராவது மரித்ததினால் ஏற்படும் தனிமை அல்ல. தனிமை உணர்வு என்பது உள்ளுணர்வில் தனித்திருப்பது போலவும், அவசியப்படாதவனாகவும், அக்கறை செலுத்த யாரும் அற்றவனாகவும் உணர்வதேயாகும். அத்தோடு, தனிமை உணர்வினால், வாடுபவர்கள் மனம் புண்பட்டவர்களாவர்.

நான் போதகனாகப் பணிபுரிந்த மூன்று ஆலயங்களிலும் அவைகள் குடித்தொகை அடர்த்தியான இடத்தில் அமைந்திருந்த போதிலும் கூட ஜனத்திரள் தனிமை உணர்வுக்கு எதிராக எவ்வித பாதுகாப்பையும் கொடுப்பதில்லை என்பதைக் கண்டுள்ளேன். உண்மையில் ஜனக் கூட்டம் இத்தனிமை உணர்வை மேலும் மோசமாக்கிவிடும். தனிமை உணர்வினால் வாடும் மக்கள், வீதியில் செல்லும் போதும், விடுதிகளுக்கோ பூங்காக்களுக்கோ செல்லும் போதும் மற்றவர்கள் வாழ்வைச் சந்தோஷமாக அனுபவிப்பதைக் காண்கையில் அவர்களது வேதனை அதிகரிக்கும்.

விடுமுறைக் காலங்களிலும், பண்டிகை நாட்களிலும், இளவேனிற் காலங்களிலும், மக்கள் தம் குடும்ப சகிதம் மகிழ்ச்சியுடனிருக்கையில் தனிமையுணர்வில் வாடுபவர்கள் தங்களை அழித்துக் கொள்ள வேண்டும் என்றே எண்ணுவார்கள். அவர்களால் மற்றைய மக்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாதிருப்பதனால் தம்மைத் தாமே அழித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.

ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து வாங்கிப் சாப்பிடுங்கள், நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள் (ஏசா.55:1) என்பதே தேவனுடைய அழைப்பு. இப்போது இதை கவனியுங்கள். நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? (வச.2).

தனிமை உணர்வுக்கான எனது வரைவிலக்கணம் இதோ: தனிமை உணர்வு என்பது பிரதியீடுகளில் வாழ்வதினால் ஆத்துமா போஷிக்கப்படாதிருப்பதே தனிமை உணர்வாகும். ஏசாயா 55ம் அதிகாரம் இதைத்தான் கூறுகிறது. நீங்கள் அப்பமல்லாததற்காக உங்களுடைய பணத்தைச் செலவழிக்கிறீர்கள். உங்களைத் திருப்திப்படுத்தாததற்காக நீங்கள் உழைக்கிறீர்கள். தேவன் உங்களுக்கு பெறுமதியானவைகளைக் கொடுக்கிறார். அவர் பணமுமின்றி விலையுமின்றி திருப்திப்படுத்துபவற்றைக் கொடுக்கிறார். இதுதான் வரையறையற்ற, கட்டுக்கடங்காத தேவ கிருபை.

பணம், தொழில், உணவு போன்றவைகள் இருந்தால் திருப்தியுடன் வாழலாம் என மக்கள் மத்தியில் இன்று தப்பான ஒரு அபிப்பிராயம் காணப்படுகிறது. ஆனாலும் ஏசாயா, நீங்கள் அப்பமில்லாததிற்காகப் பணத்தைச் செல்வழிக்கிறீர்கள், நீங்கள் உழைக்கிறீர்கள், உங்களுக்கு ஒரு தொழில் இருக்கிறது, ஆனாலும் நீங்கள் திருப்தியடையவில்லை, நீங்கள் சாப்பிடுகிறீர்கள் ஆனாலும் அது உங்களுக்கு எவ்வித பயனையும் அளிக்கவில்லை, நீங்கள் பிரதியீடுகளில் வாழ்கிறீர்கள்” எனத் தெரிவிக்கிறார்.

பிரதியீடுகளில் வாழ்வதினால் ஆத்துமா போஷிக்கப்படாமல் இருப்பதே தனிமை உணர்வாகும். ஆனால் இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், நான் சந்தித்த மக்களில் அநேகர் பிரதியீடுகளிலேயே திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். தேவன் மகிழ்வினைக் கொடுக்கையில் அவர்கள் பொழுது போக்குகளில் திருப்தியடைகின்றனர். தேவன் சமாதானத்தைக் கொடுக்கும்போது அவர்கள் தூக்க மாத்திரையில் திருப்தியடைகிறார்கள். தேவன் பரிபூரண வாழ்வை அளிக்கையில் அவர்கள் வேடிக்கை விநோதங்களில் திருப்தியைக் காண்கிறார்கள். தேவன் தன்னுடைய பிள்ளைகளாக்க விரும்பும் போது மக்கள் சமுதாயத்தில் ஒரு பதவியை வகிப்பதில் திருப்தியுறுகின்றனர்.

தனிமை உணர்விற்கான காரணங்கள்

தனிமை உணர்வைப் பற்றி மக்கள் நீண்ட காலமாகக் கற்று வருகின்றனர். சமூகவிய லாளர்களும் உளவியலாளர்களும், மருத்துவ மேதைகளும் இவ்விஷயத்தைப் பற்றி ஆராய்ந்துள்ளனர்.

சமூகவியற் காரணங்கள்

சமூகவியற் காரணங்களும் தனிமை உணர்விற்குப் பங்களிப்பு செய்கின்றன. நவீன வாழ்வின் குடிபெயர்வு அநேக மக்களை வேரற்றவர்களாக்கி உள்ளது. இன்று நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரே உள்ளனர். சந்தித்த நேரத்துக்குப் பின் உறவற்ற நிலையிலேயே மற்றைய நட்புகள் காணப்படுகின்றன. நீங்கள் வாழும் வீதியில் உள்ள எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்? நீங்கள் வாழும் தொடர் மாடிக் கட்டிடத்தில் எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்? அவர்களில் எத்தனைபேரை அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்கள்?.

குடிபெயர்வுகளினிமித்தமும் புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அநேகர் உடனடியாக புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ள மாட்டார்கள். எனவே சில சமயம் குடிபெயர்வு தனிமை உணர்வினை ஏற்படுத்துகிறது.

வாழ்க்கை முறையின் போட்டி மனப் பான்மையும் தனிமை உணர்வைத் தோற்றுவிக்கிறது என நான் கருதுகிறேன். வெற்றியடைவதிலேயே நாம் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளோம். முதலிடத்தைப் பெற்றுக் கொள்வதிலேயே நாம் நம் முழு முயற்சியையும் செலுத்துகிறோம். நாம் நம்மீதே அதிகளவு கவனத்தைச் செலுத்துவதினால் மற்றவர்களைப் பற்றி மறந்து விடுவோம். வாழ்வின் இத்தகு போட்டி மனப்பான்மையானது மக்களை நம்மண்டை கொண்டுவருவதற்குப் பதிலாக அவர்களை நம்மை விட்டுத் துரத்திவிடுகிறது.

சிலர் பயத்தினாலும்கூட தனிமை உணர்வினால் வாடுகின்றனர் என நான் எண்ணுகிறேன். உண்மையான அபாயமானது பெரிய நகரங்களில் மாத்திரமல்ல, சிறிய கிராமங்களிலும் காணப்படுகிறது. முதியவர்கள் தாங்கள் தாக்கப்படுவோம் என அஞ்சுகின்றனர். கட்டிடத்தொகுதிகளில் வாழ்பவர்களின் வாசற் கதவில் இரண்டு மூன்று பூட்டுகள் காணப்படுகின்றன, அவர்கள் அந்நியர்களுடன் பேச அஞ்சுகின்றனர். ஆனால் அவர்களைக் குறை கூறுவதில் எவ்வித பயனும் இல்லை.

நவீன வாழ்வின் குடிபெயர்வையும் போட்டி மனப்பான்மையையும், பயத்தையும் நமது சமுதாய நிலையையும் நாம் ஒன்றாக்கிப் பார்க்கையில் ஏன் சிலர் தனிமை உணர்வினால் வாடுகின்றனர் என்பதை நீங்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். மக்களுக்கு உங்கள் முகத்தைத் தெரியாது. அவர்கள் உங்கள் பெயர்களை நினைவில் வைத்திருப்பதுமில்லை. உண்மையில் தனிமை உணர்வுக்கு சமூகவியல் காரணங்களும் உண்டு.

உளவியல் காரணங்கள்

உளவியல் காரணங்களும் தனிமை உணர்வினை உருவாக்குகின்றன. தனிமை உணர்வினால் வாடுபவர்களின் குணநலன்கள் ஒத்திருப்பதை நான் என்னுடைய போதக ஊழியக் காலத்தில் கண்டிருக்கிறேன்.

முதலாவதாக அவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள். எப்போதாவது அவர்கள் வாழ்வில் ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் ஒரு தொழிலுக்கென நேர்முகப் பரீட்சைக்கு சென்று தோல்வியுற்றிருக்கலாம் அல்லது ஒரு நட்புறவிலிருந்து நிராகரிக்கப் பட்டிருக்கலாம். அல்லது திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த நபரினால் கை விடப்பட்டிருக்கலாம். இத்தகு காரணங்களினால் அவர்களது உள்ளுணர்வு பாதிக்கப்பட்டுள்ளது. மறுபடியும் அத்தகையதோர் பாதிப்பை அவர்கள் விரும்புவதில்லை. அதைப் பற்றிய அச்சம் அவர்களுக்கிருக்கும். அவர்கள் ஆறாத மனக்காயங்களுடனேயே வாழ்பவர்கள். இவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பதனால் நெருங்கிப் பழகமாட்டார்கள். அவர்கள் உங்களைக் காண்கையில் ‘நீ எனக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்; எனவே உன்னுடன் நெருங்கி பழக நான் விரும்பவில்லை’ என்று மனதிற்குள்ளேயே சொல்லிக்கொள்வார்கள்.

தனிமை உணர்வினால் வாடுபவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திமல்ல; அவர்கள் குற்ற உணர்வுள்ளவர்கள். அடிக்கடி அழுக்கான மனச்சாட்சியினால் அவர்கள் அழுவார்கள். இல்லையென்றால் பழைய பாவங்களையும் தவறுகளையும் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

தனிமை உணர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பற்றவர்களாகவும் காணப்படுவார்கள். நீங்கள் எவ்விடத்தில் நிற்கிறீர்கள் என்றும் நீங்கள் யாரென்றும், உங்களால் என்ன செய்ய முடியும் என்பதும், மற்றவர்களிடம் சென்றடைய என்ன செய்ய வேண்டும் என்றும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்கள் உங்களைப் பயமுறுத்தலாம். பாதுகாப்பின்மை ஒருபோதும் உறுதியான உறவினைக் கட்டியெழுப்பாது.

தனிமை உணர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் சுயநலமிக்கவர்களாக காணப்படுவார்கள். சுய அனுதாபத்தினால் அவர்கள் ஆளப்படுவார்கள். தம்மைக் குறித்தே அவர்கள் கவலைப்படுவார்கள். மற்றவர்களுக்குத் தன்னைவிட அதிக காரியங்களைச் செய்ய முடியும் என்றும் வருந்துவார்கள். தம்மிடம் இருப்பவைகளுக்கு நன்றியுடையவர்களாய் இருப்பதைவிட்டு, ஒரு மூலையில் இருந்து தம்மிடம் இல்லாதவைகளுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என திருமறை (நீதி.18:24) கூறுகிறது.

ஆவிக்குரிய காரணங்கள்

தனிமை உணர்விற்கான அடிப்படைக் காரணம் ஆவிக்குரிய காரணம் என்பதே எனது உறுதியான கருத்தாகும். நமது வாழ்வில் ஆவிக்குரிய உறவுகளே மிகவும் முக்கியமான உறவு முறைகளாகும். வாழ்க்கையே உறவுமுறைகளினால் கட்டப்பட்டுள்ளது. (தேவனுக்கும், மற்றவர்களுக்கும், உங்களுக்குமிடையேயான உறவுமுறைகள்) உங்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளுதல், உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளுதல், நீங்கள் நீங்களாகவே இருத்தல் (மற்றவர்களைப் போல மாறாதிருத்தல்) மற்றவர்களுடன் உறவுகளைப் பேணுவதற்கு உதவுகிறது. என்னுடைய உறவுமுறை தேவனுக்கும் மற்றவர்களுக்கும் எனக்கும் இடையே இருக்கவேண்டிய விதமாக இருந்தால், தனிமை உணர்வு என்பது ஒரு பிரச்சனை அல்ல என்பதை நான் எனது வாழ்க்கையில் கண்டுள்ளேன்.

தனிமை உணர்விற்கான தீர்வு

தனிமை உணர்வினைத் தீர்க்க முடியும். நம்மால் சமுதாயத்தை மாற்றியமைக்க முடியாது. மற்றையோரை மாறும்படி வற்புறுத்தவும் முடியாது. தனிமை உணர்வினால் வாடும் சிலருக்கு கிறிஸ்தவ ஆலோசகர்களின் உதவி தேவைப்படுகிறது. உங்களது தனிமை உணர்வு சோர்வினையும் அழிவினையும் கொண்டு வருமாயின் கிறிஸ்தவ ஆலோசகர்களின் உதவி கட்டாயம் தேவை. ஆனாலும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது உள்ளான குணப்படுதலை நாம் அனுபவிக்கக் கூடியதாக இருக்கும். தேவனுக்கும் மற்றவர்களுக்கும் நமக்கும் இடையிலான முறிந்த உறவுகளை மீண்டும் அவரால் சரிப்படுத்தமுடியும். நம்மை நாமே உணர்ந்துகொள்வதற்கும் நம்மை நாம் ஏற்றுக்கொள்வதற்கும் நாம் மற்றவர்களைப் போல மாறாது நாமாகவே இருப்பதற்கும் இயேசுகிறிஸ்துவினால் உதவிடமுடியும். கிறிஸ்துவினால் மாத்திரமே பாவத்தின் அக்கிரமத்தைக் கழுவி சுத்திகரித்து புதிதான ஒரு எதிர்காலத்தைக் கொடுக்கமுடியும். கிறிஸ்துவால் மட்டுமே நம்மைப் புதிய மக்களாக மாற்றி வாழ்வை எதிர்நோக்கவும் அதனைக்கொண்டு செல்லக்கூடிய உள்ளான வல்லமையை நமக்குக் கொடுக்கவும் முடியும்.

தனிமை உணர்வுக்கு சமூகவியற் காரணங்கள் காணப்படலாம். ஆனால் தனிமை உணர்வானது உள்ளானதொரு பிரச்சனையாகும். இருதயத்திற்குள் மாத்திரமே அதனைக் குணப்படுத்தலாம். இதனால்தான் இயேசுவும், ‘இதோ, வாசற்படியில் நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு திறந்தால் நான் அவனோடு போஜனம் பண்ணுவேன்’ (வெளி.3:20) எனக் கூறியுள்ளார். இயேசுகிறிஸ்து நம் வாழ்க்கையில் வந்து உறவு கொள்ள விரும்புகிறார். நம்மைக் கழுவி சுத்திகரித்து புதிய மனுஷனாக நம்மை மாற்ற விரும்புகிறார். அப்போது நம் வாழ்வில் தனிமை உணர்வினால் ஏற்படும் பிரச்சனைகளை இயேசுவுடன் ஒன்றாகச் சேர்ந்து தீர்க்க முடியும்.

தனிமை உணர்வுக்குத் தீர்வு இருக்கிறதா?

நான் அறிந்தவரையில் இயேசுகிறிஸ்து ஒருவரால் மட்டுமே நித்திய வாழ்வையும் பரிபூரண வாழ்வையும் கொடுக்கமுடியும். அதனால்தான் அவர் உலகுக்கு வந்து மரித்தார். இன்று அவர் உலகுக்கு அளிக்கும் வெகுமதியும் அதுவே.

 மொழியாக்கம்: Bro.Johndurai