• Dr.எம்.எஸ்.வசந்தகுமார் •
(மார்ச் – ஏப்ரல் 2026)

பிதாவாகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

தேவனுடைய வார்த்தையைக் கேட்க நமக்கு அநேகச் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. இவையனைத்தும், தேவன் நம்மீது வைத்த கிருபையையே வெளிப்படுத்துகிறது. ஏனெனில் காத்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம் ஏற்படும் காலம் வரவிருப்பதனால் (ஆமோஸ் 8:11) இப்போது பலவிதமான ஊடகங்கள் மூலமாக, தேவவசனத்தை நம்மால் கேட்கக் கூடியதாயிருப்பது உண்மையிலேயே நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். எனினும், எல்லோருமே தேவனுடைய வார்த்தையை கேட்கும்போது கவனமாயிருப்பதில்லை. இதனால், தேவவார்த்தையை கேட்பதனால் கிட்டும் ஆசீர்வாதங்களை அநேகர் அனுபவிக்கத் தவறிவிடுகின்றனர். இதனை இயேசுகிறிஸ்து, விதைப்பவனுடைய உவமையில் சிறப்பான முறையில் சித்தரித்துள்ளார். இவ்வுவமையானது, நாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போது, எவைகளைக் குறித்து கவனமாயிருக்கவேண்டும் என்பதைப் பற்றி அறியத்தருகிறது. இவைகளை இம்முறை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக, தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போது பிசாசைக்குறித்து கவனமாயிருக்க வேண்டும். வழியருகே விழுந்த விதைகளை ஆகாயத்துப் பறவைகள் வந்து பட்சித்துப் போட்டதாக கூறும் இயேசு (லூக்.8:5) “‘வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள், அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப் போடுகிறான் (8:12)” என விளக்குகிறார். எனவே, நாம் பிசாசைக் குறித்து மிகவும் கவனமாயிருக்க வேண்டும். நாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போது அவைகள் நம் வாழ்வில் எவ்விதமான பயனையும் ஏற்படுத்துவதற்கும் முன்பாகவே, பிசாசு அவைகளை நம் மனதில் இருந்து அகற்றிவிடுகிறான். இதனால் தான், ஆராதனை முடிந்து வீட்டுக்கு வந்தவுடனேயே போதகர் எதைப் பற்றி பிரசங்கம் பண்ணினார் என்பது கூட அநேகருக்கு மறந்துவிடுகிறது. பிசாசு எப்போதும் விழிப்புடனிருக்கிறான். நாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறபோதெல்லாம். அதை நாம் கேட்க விடாதபடி தடுக்கிறான். பிரசங்கங்களை கேட்கும்போது நம் மனம் அங்குமிங்கும் அலைவதற்கும் சில சமயங்களில் நித்திரை மயக்கம் ஏற்படுவதற்கும் காரணம் பிசாசே. எனவே தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போது இவனைக் குறித்து நாம் கவனமாயிருக்க வேண்டும்.

இரண்டாவதாக, நாம் நம்முடைய உணர்ச்சி களைக் குறித்து கவனமாயிருக்க வேண்டும். இதனால் தான் இயேசுகிறிஸ்து கற்பாறையின் மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆயினும், தங்களுக்குள்ளே வேர் கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலம் மாத்திரம் விசுவாசித்து, சோதனைக் காலத்தில் பினவாங்கிப் போகிறார்கள்” (8:13) என்றார். இன்று அநேகர் தேவவார்த்தையைக் கேட்கும்போது உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறார்கள். இதனால், பிரசங்கியாரையும் அபாரம், பிரமாதம் அற்புதம் என புகழ்கிறார்கள். ஆனால் வாழ்க்கையின் பிரச்சனைகளை சந்திக்கும்போது இந்த உணர்ச்சிகள் இல்லாமற் போவதனால், தேவனுடைய வார்த்தை வேர்விட்டு வளராமல் போய் விடுகிறது.

மூன்றாவதாக, தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போது நாம் உலகக் கவலைகளைக் குறித்தும், ஐசுவரியத்தைக் குறித்தும் கவனமாயிருக்கவேண்டும். இச்சத்தியத்தை இயேசு கற்பிக்கையில். “சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது. முள் கூட வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (8:7) என்று தெரிவித்து விட்டு, “முள்ளுள்ள இடங்களில் விதைக்கப் பட்டவர்கள், வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள். கேட்டவுடனே போய், பிரபஞ்சத்துக்குரிய கவலைகளினாலும், ஐசுவரியத்தினாலும், சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு பலன் கொடாதிருக்கிறார்கள் என்றார் (8:14). முட்கள் வளரும்போது, பயிர்களுக்கு இடங்கொடாதபடி எவ்வாறு வளர்ந்து அவைகளை நெருக்கிப் போடுகின்றதோ. அதேபோல, உலகக் கவலை, ஐசுவரியம், சிற்றின்பம் என்பனவும், நம் வாழ்வில் தேவனுடைய வார்த்தைக்கு இடமில்லாமல் செய்துவிடுகின்றன. எவ்வளவுதான் பிரசங்கங்களைக் கேட்டாலும் அவை எவ்வித பயனும் கொடாமற் போவதற்கு இதுவே காரணம். இதனால் இவைகளைக் குறித்தும் நாம் கவனமாயிருக்க வேண்டும்.

தேவனுடைய வார்த்தையைக் கேட்கையில் நாம் கவனமாயிராவிட்டால், அதைக் கேட்பதில் எவ்வித பயனுமில்லை. இயேசுவினுடைய உவமையில் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப்போல. நம்முள்ளத்தில் விழும் தேவ வசன விதைகளும் முளைத்து, ஒன்று, நூறாகப் பலன் கொடுக்கவேண்டும் (8:8). “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும், நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்” (8:15) என இயேசு தெரிவிக்கிறார். எனவே, தேவ வசனத்தை கவனமாய்க் கேட்டு அது நம்வாழ்வில் பலன் கொடுப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.

சத்தியவசன வாசகர்கள். இச்சஞ்சிகையை வாசிக்கும் போதும், மற்றைய சமயங்களில் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போதும். கருத்துடன், மேற்சொன்னவைகளைக் குறித்து கவனமாயிருக்க வேண்டும் என்பதே என் வாஞ்சையாகும். தேவன் தாமே இத்தகைய ஜாக்கிரதையை உங்களுக்கு கொடுப்பாராக.