• Dr.உட்ரோ குரோல் •
(மார்ச் – ஏப்ரல் 2026)
15. தேவனுடைய அரியணை

“இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம் போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது” (வெளி. 4:1).
வெளிப்படுத்தல் புத்தகத்தை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டுமெனில் ‘இவைகளுக்குப் பின்பு’, ‘உடனே’ போன்ற காலங்கள் தொடர்பான சிறிய வார்த்தைகளுக்கும் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். ஏனெனில் இவையே இப்புத்தகத்தின் தொடர்ச்சிக்கான சொற்களாகும்.
இப்புத்தகத்தின் அநேக அதிகாரங்கள் கால வரிசைப்படி அமைந்திருக்காது. ஆனால் அவ்வதிகாரத்துக்குள் சில நிகழ்வுகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும்.
அப்பொழுது ‘இவைகளுக்குப் பின்பு’ ‘உடனே’ போன்ற தொடர்களைக் கவனிக்கவேண்டும். ஏழு சபைகளுக்கு எழுதிய செய்திகளுக்குப் பிறகு 2 மற்றும் 3ம் அதிகாரங்களில் எதிர்கால நிகழ்வுகளை நாம் பார்க்க இருக்கிறோம். வசனம் 2 இல் “உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். அவர் பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம் போல் தோன்றிற்று.”
யோவானின் நிலையில் உங்களை கற்பனை செய்து பாருங்கள். இன்றைய துருக்கியின் கடற் கரையிலிருந்து 55 மைல் தொலைவிலுள்ள ஒரு தீவில் நற்செய்தி அறிவித்ததற்காக அவர் ஒரு கைதியாக இருக்கிறார். இங்கு தேவன் அவருக்கு எதிர்காலத்தின் நிகழ்வுகளை வெளிப்படுத்தினார். ஆனால் அதை எவ்வாறு விவரிப்பது என்று யோவானுக்குத் தெரியவில்லை. ஏனெனில் நம்மில் யாரும் இவற்றைப் பார்த்ததில்லை. எனவே நாம் புரிந்துகொள்ளும் வண்ணம் அவர் சில உவமைகளையும் உருவகங்களையும் பயன்படுத்தியுள்ளார். தான் பரலோகத்தில் கண்டதை வாசகர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஏற்ற சொற்களைத் தேடுகிறார்.
சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் “பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்” என்று விவரிக்கிறார். இறைவன் கல்லினால் ஆனவர் அல்லர். ஆனால் அவர் விலையேறப்பெற்ற வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பானவர் என்பதை விளக்குகிறார். நான் ஒரு இரத்தினவியலாளர் அல்ல. ஆனால் இந்த கற்கள் மிகவும் விலையேறப்பெற்றவை என்பதை அறிவேன். எனவே கடவுளின் உருவைப்பற்றியல்ல, அவரது பெறுமதிப்பைக் கூறுகிறார். அவருடைய சிங்காசனத்தைப் பற்றி நாம் பார்க்கும்பொழுது இவை முக்கியம்.
சிங்காசனத்தில் இருப்பவரைப்பற்றி தன்னால் இயன்றவரை யோவான் அடையாளப்படுத்துகிறார். கற்கள் பொதுவாக பிரகாசமானவைகளுக்கு குறிப்பிடப்படும். சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் விலைமதிக்கமுடியாதவராகிய இறைவனாவார். சிங்காசனத்தில் சர்வல்லவர் வீற்றிருந்தார்; அவரைச் சுற்றி வேறு சிலரும் இருந்தனர். அவர்கள் யார்?
அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்து நான்கு சிங்காசனங்கள் இருந்தன; இருபத்து நான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக் கண்டேன். அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன (வெளி.4:4-5). இவைகளை நாம் விரிவாக ஆராய்வோம்.
சர்வவல்லவரின் சிங்காசனத்தைச் சுற்றி 24 சிங்காசனங்கள் இருந்தன. இவைகள் நிச்சயமாக சர்வவல்லவரின் சிங்காசனத்தைவிட குறைவான உயரத்திலும், தாழ்வான இடத்திலும் இருந்திருக்க வேண்டும். அவற்றில் இருபத்துநான்கு மூப்பர்கள் வீற்றிருந்தனர். அவர்கள் வெண்ணாடை அணிந்திருந்தார்கள்;
இவர்கள் யாரென்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால் தேவனுடையவான வில்லாகிய கிருபை மற்றும் இரக்கங்களைப் பெற்ற பிரதிநிதிகள் என்று நான் கருதுகிறேன். இவர்கள் மீட்கப்பட்ட மனிதகுலத்தின் பிரதிநிதிகள் மற்றும் சபையின் மூப்பர்களாகவும் நீங்கள் கருதலாம். இவர்கள் தேவனுடைய சிங்காசனத்தைச் சூழ நிற்கும் தேவனுடைய மக்கள். இவர்கள் ஏற்கனவே அங்கே இருக்கின்றனர்.
வெளி.5:9இல் “தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” என்று புதிய பாட்டைப் பாடினார்கள் (வெளி.5:9-10).
இவர்கள் பாடிய பாடல் இரட்சிக்கப்பட்டவர்கள் பாடுவதைப் போன்றே உள்ளது. இவர்கள் மீட்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என நாம் கருதலாம். வசனம் 5 இல் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிகளும் சத்தங்களும் புறப்பட்டன. இது தேவனுடைய சர்வ வல்லமையின் வெளிப்பாடு ஆகும். அவர் இங்கே ஏழு விளக்குளைப் பற்றிப் பேசுகிறார். அவை தேவனுடைய ஏழு ஆவிகளாகும். இது பல்வேறு வழிகளில் தம்மை வெளிப்படுத்தும் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் என நான் எண்ணுகிறேன். இவை ஏழு குத்துவிளக்குடன் தொடர்புடையவை. அவை வெளிப்படுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு சபைகளாகும்.
தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அவர் சகல அதிகாரமுடையவர். அவருடைய சிங்காசனம் மகிமையுடையது. அதைச் சுற்றிலும் இரட்சிக்கப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்த 24 மூப்பர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்வதற்காக அங்குள்ளனர். தேவன் பயபக்திக்குரியவர் என்பதை வெளிப்படுத்துகின்றனர். இவர்களை முக்கியப்படுத்தி நாம் அடையாளம் காண்பது தவறாகிவிடும். நாம் சிங்காசனத்தையே நோக்கிப் பார்க்கவேண்டும். அவர்கள் தேவனைத் தொழுதுகொள்பவர்கள்.
வசனம் 6 இல் சிங்காசனத்துக்கு முன்பாக இருந்த இருக்கைகளை விவரித்தபின்னர் ‘சிங்காசனத்துக்கு முன்னதாக’ என்று அதைப் பற்றி விளக்குகிறார். ‘சிங்காசனத்திற்கு முன்பாக அங்கு ஒரு கண்ணாடிக்கடல் இருந்தது. சிங்காசனத்தின் நடுவிலும் அதைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன. அவைகளுக்கு முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்கள் நிறைந்திருந்தன.
இந்த கடல் படிகம் போன்றது; ஆனால் அது நீர் நிறைந்தது என்று சொல்லப்படவில்லை. எல்லாம் உருவகமான காரியங்கள். நம்மால் அதனை கற்பனை செய்து பார்க்கமுடியாது. இந்த அரியணையின் மகிமையை விளக்குவதே அவரது நோக்கம். தேவனுடைய கோபம் வெளிப்படும் பூமியில் நாம் இருப்போமா அல்லது பரலோகத்தில் தேவனை வணங்கிக் கொண்டிருப்போமா? அது நமக்கும், இயேசு கிறிஸ்து மூலமாக தேவனுக்கும் இடையேயான உறவைப் பொறுத்து அமையும். நம்முடைய தெரிந்தெடுப்பு என்ன?
இரண்டு காரியங்கள் நிச்சயம். முதலாவது நாம் மற்றவர்களுக்காக தேர்வு செய்யமுடியாது. இரட்சிப்பு தனிப்பட்டவர்களுடைய காரியம். அவர்களை அதைப் புரிந்துகொள்ள வைக்கவும் முடியாது. ஒரு சிலர் தேவனுடைய வார்த்தையின் உண்மையைத் துணிந்து எதிர்ப்பவர்களாக இருக்கின்றனர். அவர்களை நாம் மாற்றமுடியாது. ஆனால் அற்புதமான நற்செய்தியை அடிக்கடி அன்புடன் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
நான்காம் அதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ள நான்கு ஜீவன்களை நாம் கவனிக்கவேண்டும். இவைகளைப் பற்றி 8ம் வசனம் கூறுவது யாதெனில், “ஒவ்வொன்றும் ஆறு சிறகுகளும் இருந்தன. அவைகளுக்கு சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.”
ஏன் அநேக கண்கள்? தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கும்பொழுது அங்குள்ள அநேக காரியங்களைக் காண நமது இரண்டு கண்கள் போதாது. இன்று அநேகர் தேவனைப் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால் தேவனுடைய அரியணைக்கு முன் நாம் இருக்கும்பொழுது அவரைக் காண கண்கோடி வேண்டும்.
மேலும் அவைகளுக்கு சிறகுகளும் இருந்தன. கண்களால் அவைகள் அனைத்தையும் பார்க்க முடியும். பிறகு ஏன் சிறகுகள்? அவற்றின் செயல்பாடுகளுக்கு அவைகள் தேவை.
அவற்றின் செயல்பாடுகள் யாவை? “அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன (வெளி. 4:8).”
இங்கு இந்த மக்களும் ஜீவன்களும் தேவனுக்கு முன்பாகப் பணிந்து, பரிசுத்தம் கர்த்தருக்கு மாத்திரமே என்று குறிப்பிட்டுக் கூறின. வசனம் 9 இல் “சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, இருபத்து நான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்” (வெளி.4:9-11).
பரலோகத்தில் நாமும் இந்த பணியையே செய்யப் போகிறோம்; இங்கு தனிப்பாடல் கிடையாது; குழுப்பாடல் மாத்திரமே. நால்வர் இசைக்குழு. பின்னர் அவர்களுடன் 24 பேர் இணைகின்றனர். சிங்காசனத்துக்கு முன்பாக அவர்கள் தாழ விழுந்து வணங்கினார்கள். வேதாகமத்திலிருந்து நாம் ஆராதனையைப் பற்றிய குறிப்புகளை தேடுவோமென்றால் அங்கு பக்தர்கள் நின்றுகொண்டோ கைகளைத் தட்டிக்கொண்டோ அவரை வணங்கியதாக நாம் பார்க்கமுடியாது. பரலோகத்தில் நடனமாடி நாம் அவரைப் பணிந்து கொள்ளமுடியாது. நீங்கள் முகங்குப்புற விழவேண்டும். இதனை தூதர்களும் 24 மூப்பர்களும் நான்கு ஜீவன்களும் அறிந்து தேவனை மகிமைப்படுத்தினார்கள். இன்று இது அநேக நற்செய்தியாளர்களுக்குத் தெரிவதில்லை.
அவர்கள் எதற்காக கர்த்தரை துதித்தார்கள்? முதலாவது அவர் மகிமையைப் பெற்றுக் கொள்வதற்குப் பாத்திரர். ஏனெனில் அவரது மகிமையே எங்கும் நிறைந்திருக்கிறது. நீங்களும் நானும் அதை பிரதிபலிக்கவேண்டும். உங்களுக்கு என்று மகிமையை வைத்துக் கொள்ளக்கூடாது.
இரண்டாவதாக அவர் கனத்துக்குப் பாத்திரர். அவர் அரியணையில் வீற்றிருப்பதால் கனத்துக்குரியவர். மற்றவர்கள் முகங்குப்புற விழுந்து பணியவேண்டும். இதுவே அவரை கனப்படுத்தும் முறை.
மூன்றாவதாக அவர் வல்லமைக்கு உரியவர். இப்பிரபஞ்சம் முழுவதும் அவருடைய கட்டுப் பாட்டுக்குள் இருக்கிறது. ஏனெனில் அவரே அனைத்தையும் உருவாக்கியவர். நீங்கள் படைப்பை நம்புகிறீர்களா? அது மிக முக்கியம். வேதாகமத்தின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் படைப்பைப்பற்றி குறிப்பிட்டிருப்பதன் காரணம் என்னவெனில் படைத்தவரிடமிருந்தே அனைத்தும் வருகிறது. பரிணாமக் கொள்கையின்படி படைப்பு நடந்தால் பரலோகத்தில் நாம் தாழ விழுந்து பணிந்துகொள்ள ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
இன்று அநேகர் நம்பும் விதத்தில் படைப்பு நிகழ்ந்தால் செய்தி ஊடகங்கள் மூலமாகவும் பல்கலைக்கழக வகுப்புகள் மூலமாகவும் பரப்பப்படும் கருத்துக்களை நாமும் சிறிது நம்பும்படி நேரிடும். அவ்வாறு எனில் உங்களுடைய எதிர்காலம் வெற்றிடமாகவும் சூனியமாகவும் இருக்கும் என வேதாகமம் கூறுகிறது.
இன்றும் அநேகர் தேவன் படைத்தார் என நம்புகிறார்கள். நியூஸ்வீக் சஞ்சிகையின் ஒரு கருத்துக்கணிப்பில் “நீங்கள் இறைவன் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தார் என நம்புகிறீர்களா?” என்று கேள்விக்கு 80 விழுக்காடு ‘ஆம்’ பதிலளித்தனர். ஆனால் இவர்கள் அனைவரும் தேவனுடைய அரியணைக்கு முன்பாக விழுந்து பணிவார்களா? என்பது சந்தேகமே. அதற்கு அவர்கள் ஆயத்தமாயிருக்கவில்லை.
வெளிப்படுத்தலின் 4ம் அதிகாரத்தின் மையக் கருத்தே இதுதான். மகா உபத்திரவகாலத்தின் ஆரம்பத்தை நாம் இங்கே கண்டுகொள்ள முடியும். வச.19 இல் அனைத்தையும் கட்டுப்படுத்துபவர் யார் என்பதை நாம் அறிய வேண்டும். அரியணையில் வீற்றிருக்கும் கடவுளின் காட்சியுடன் உபத்திரவ காலத்தின் காரியங்கள் தொடங்குகின்றன.
மேற்கிந்தியத்தீவுகளில் ஒன்றான ஹெய்தியில் நிகழ்ந்த பயங்கரமான நிலநடுக்கத்தின்பொழுதும், வளைகுடா நாட்டில் எண்ணெய் கிணற்றிலிருந்து எண்ணெய் உமிழ்ந்து வரத்தொடங்கின பொழுதும் தேவன் எங்கிருந்தார் என்று உலகம் கேள்வி எழுப்பியது. தேவன், “நான் இங்குதான் என்னுடைய அரியணையில்தான் வீற்றிருந்தேன்” என்றார். எதிர்காலத்தில் நிகழ விருப்பவை யாவும் தேவனுடைய மாபெரும் திட்டத்தின் செயற்பாடே என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். வளைகுடா கடற்கரையில் நிகழ்ந்த கத்ரீனா சூறாவளியின்போதும், இந்தோனேஷியா, ஸ்ரீலங்கா இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளைப் பாதித்த சுனாமியின் பொழுதும் அவர் தனது சிங்காசனத்திலேயே வீற்றிருந்திருந்தார். அவருடைய திட்டத்தை அவர் கவனித்துக்கொள்ளுவார். ஆனால் நீங்கள் எதைச் செய்யவேண்டும், எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை அறிவதற்கு அவரை நம்ப வேண்டும். இவ்வுலகத்திற்கு வரும் நியாயத் தீர்ப்புகள் அனைத்தும், நீதியும் மகிமையுமான அவருடைய அரியணையிலிருந்தே வரும். அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர். துதி, கனம், மகிமை யாவையும் அவர் ஒருவருக்கே செலுத்துவோம்.
(தொடரும்)
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை