சிறுபிள்ளை யோசேப்பு
தியானம்: 2026 ஜுன் 4 வியாழன் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 37:1-4

யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் (ஆதியாகமம் 37:2).
சிறுபிள்ளைகள் வெளிக்காட்டுகின்ற செயற்பாடுகள், அவர்களின் திறமைகளை வெளிக்காட்டுகின்றன என்பதை மறுக்கமுடியாது. அவர்கள் எதிலே அதிக ஆர்வம் காட்டுகிறார்களோ, வளர்ந்தபின் அதே மாதிரியான வழியிலே தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வதையும் நாம் காண்கிறோம். ஆகவே, பிள்ளைகளுக்கு எது முடியுமோ எது பிடிக்குமோ அந்த வழியிலே அவர்களை நடத்துவது நல்லது அல்லவா!
யோசேப்பு தனது இளவயதிலே, முன்யோசனையின்றி தான் கண்ட கனவுகளைச்சொல்லி தன் சகோதரரின் பகைமையைச் சம்பாதித்தது மாத்திரமல்ல, யாக்கோபின் மறுமனையாட்டிகளின் மகன்களுடன் இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவானாம். யோசேப்பு கோள் சொன்னான் என்று பலர் யோசேப்பைக் குறித்துக் குற்றம் சொல்வதுண்டு. ஒரு விதத்தில் அப்படியே இருந்தாலும், யோசேப்பு தனது சிறிய வயதிலும் துன்மார்க்கமான செயல்களை வெறுத்த ஒருவர் என்பதை நாம் சிந்திக்கவேண்டும். அப்பாவின் பாசத்துக்கும் நேசத்துக்கும் பாத்திரமானவர் யோசேப்பு; ஆகவே, தன் சகோதரர் துன்மார்க்க வழியில் நடப்பதை விரும்பாத பட்சத்தில், அது அப்பாவின் பெயருக்கு இழுக்கு என்று உணர்ந்திருக்கக்கூடும். தான் இளையவன் மாத்திரமல்லாமல், அப்பா தன்னிலே அதிக பாசமாக இருப்பதால் பொறாமை கொண்ட தனது அண்ணன்மார் தனது சொல்லை கேட்க மாட்டார்கள் என்றும் நினைத்து அவர் அப்பாவிடம் வந்து சொல்லியிருக்கலாம். அதேசமயம் இன்னுமொரு காரியத்தையும் நாம் கவனிக்கலாம். அந்த வயதிலும் யோசேப்பு தன்மீது நேசமற்ற தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்தும் வந்தார். ஆம், தான் சிறுவன் என்றோ, அப்பாவின் செல்லப்பிள்ளை என்றோ, தன் அண்ணன்மார் தன்னை வேதனைப்படுத்தி வருத்துவார்கள் என்றோ யோசிக்கவில்லை. வேலை செய்யாமல் யோசேப்பு சும்மா இருக்கவில்லை.
இந்த சிறுவயது குணாதிசயங்கள் யோசேப்பின் வாழ்விலே பிரதிபலித்ததை மறுக்கமுடியாது. தேடி வந்த பாவத்தில் அவர் சிக்கவுமில்லை; கொடூரம் இளைத்த சகோதரர்களை அவர் வெறுக்கவுமில்லை. சிறுவயதில் ஆடுகளை மேய்ப்பதில் ஆர்வம் காட்டிய யோசேப்பு, பின்னர் எகிப்தின் ராஜ்யத்தைப் பஞ்சத்தில் காக்கும் காவலனாகவும், தன் குடும்பத்தாரையும் அவர்களுடைய சந்ததிகளையும் பராமரிக்கும் மேய்ப்பனாகவும் உயர்த்தப்பட்டார். நமது பிள்ளைகளை சிறுவயதிலேயே கவனிக்கவேண்டும். நாம் விரும்புகிறபடி அவர்கள் வளரவேண்டும் என்று எதையும் திணிக்காமல், அவர்களிடமிருக்கும் திறமைகளைக் கண்டறிந்து அந்த வழியில் அவர்களை நடத்த முயலுவோமாக.
ஜெபம்: “அன்பின் பிதாவே, சிறுவயதிலிருந்து பிள்ளைகளது ஆர்வம், திறமைகளை அறிந்துகொண்டு அவற்றிலே முன்னேறி சிறந்தவர்களாக விளங்குவதற்கு நாங்கள் உதவிகரமாய் இருக்க வேண்டிய ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.”