யோசேப்பின் விடாமுயற்சி

தியானம்: 2026 ஜுன் 5 வெள்ளி | வேத வாசிப்பு: ஆதியாகமம் 37:12-17

YouTube video

அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான் (ஆதி.37:17).

ஒரு காரியத்தில் இறங்கும்போது அது தடைப்பட்டால், அல்லது கண்டடைய முடியாமற்போனால், ஒன்றில் பின்வாங்கி விடுகிறோம்; அல்லது அதை விட்டே விலகி விடுகிறோம், இல்லையா! இங்கே யோசேப்பு பதினேழு வயதிலேயே கடந்துசென்ற சூழ்நிலைகளைக் கவனித்தால், இன்று நம்மில் சிலரும் இப்படிப்பட்ட கடின சூழ்நிலைகளுக்குள் தள்ளப்பட்டிருப்பதை உணரலாம். ஆனால், யோசேப்பின் கடின பாதையினூடாக வெளிப்பட்ட அவருடைய சில குணாதிசயங்களைக் கவனிக்கும்போது, இன்று நமது கடின பாதையில் நாம் எதை வெளிப்படுத்துகிறோம் என்பதைக் கண்டுகொள்ளலாம்.

இளைஞரான யோசேப்பின் மீது அவனுடைய சகோதரருக்கு மிகுந்த பொறாமையும் வெறுப்பும் இருந்த சூழ்நிலை அது. போதாததற்கு தான் கண்ட சொப்பனத்தையும் பெருமையாகச் சொல்லிவிட்டார் யோசேப்பு. பின்னர் கேட்கவும் வேண்டுமா? அப்படியிருந்தும் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார் யோசேப்பு (37:2). இப்போது சகோதரர்கள் இவரைத் தவிர்த்து விட்டுவிட்டு, தமது ஆடுகளை ஓட்டிக்கொண்டு எப்ரோனிலிருந்து வெகுதூரத்திலிருந்த சீகேமுக்குப் போய்விட்டார்கள். எல்லாம் அறிந்திருந்த அப்பா, ஆடுகளை மேய்க்கச்சென்ற தன் மகன்களையும் ஆடுகளையும் பார்த்து வரும்படி யோசேப்பை அனுப்புகிறார். யோசேப்பும் எவ்வித தயக்கமும் காட்டாமல் “போகிறேன்” என்கிறார். ஆனால் சீகேமிலே அவர்களைத் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதுதான் நல்ல தருணம் என்று யோசேப்பு வீட்டுக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால் யோசேப்போ, தகவல் அறிந்துகொண்டு இன்னும் பல மைல்கள் தூரம் நடந்துசென்று தோத்தானிலே அவர்களைக் கண்டு பிடித்தார். தனக்கு நேரிடப்போவது இன்னதென்பதை உணராமலேயே, அப்பாவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்த யோசேப்புவின் விடாமுயற்சியை என்ன சொல்வது!

யோசேப்பை வெறுக்கின்ற சகோதரர்கள் ஒருபுறம்; பாசமான அப்பா மறுபுறம். தெரிவு என்ன? அப்பாவின் சொற்படியே தேடிவிட்டோம் என்று எண்ணி சீகேமிலேயே திரும்பியிருக்கவேண்டிய யோசேப்பு, அப்பாவின் சொல்லுக்குக் கட்டுபட்டவனாக தோத்தான் மட்டும் பொறுமையோடு தளராத உள்ளத்துடன் தொடர்ந்து சென்றார். இன்று நமது நிலை என்ன? என்னதான் நேரிட்டாலும், உலகமே எதிர்த்தாலும் நமது பரம தகப்பனுடைய வார்த்தையை நமது முழு மூச்சாக எண்ணி நாம் அதற்குக் கீழ்ப்படிகிறோமா? வெறுப்புமிக்க சகோதரர்கள் என்று தெரிந்தும் யாக்கோபு, தனது மகன் யோசேப்பை அவர்களிடம் அனுப்பியதுபோலவே இன்று நம்மையும் ஆண்டவர் இந்த உலகத்திற்குள் அனுப்பியிருக்கிறார். எதிர்ப்புகளைக் கண்டு பின்வாங்குவோமா?

ஜெபம்: நல்ல ஆண்டவரே, வார்த்தைக்குக் கீழ்ப்படிவதினாலே இழப்புகள் வெறுப்புகள் வருமாயின் நாங்கள் பின்வாங்கிப் போகிறோம். எங்களை மன்னியும். எதிர்ப்புகள் வந்தாலும் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதிலே உறுதியோடிருக்க எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.