குழியில் ஆரம்பித்த உபத்திரவம்
தியானம்: 2026 ஜுன் 8 திங்கள் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 37:26-28

அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து …. (ஆதியாகமம் 37:28).
துன்பங்களுக்கூடாகக் கடந்துசெல்வதை யார்தான் விரும்புவார்கள்? அதிலும் பெருந்துன்பம் நேரிடும்போது அதற்கு முகங்கொடுக்கவே முடியாத நிலையில் நம்மில் பலர் பின்வாங்கிப் போவதுமுண்டு. அந்நேரங்களில் தேவனுடைய அன்பையே சந்தேகிக்கும் விதத்தில் பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன. ஆனால், வெற்றிகள் சந்தோஷங்களைப் பார்க்கிலும், துன்பங்களும் உபத்திரவங்களும்தான் நம்மை தேவனுக்கேற்ற பாத்திரங்களாக உருவாக்கும் அக்கினிச் சூளைகள் என்பதை நாம் மறந்திடக்கூடாது. ஆனாலும், அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது கடினமான காரியம்தான். என்றாலும், சகல சூழ்நிலைகளுக்கும் பரிசுத்த வேதாகமம் நமக்குப் பதிலும், பெலனும் தைரியமும் தருகிறது.
ஒரு கற்பனையில், இந்து மகா சமுத்திரத்தின் பெரும் அலை ஒன்றில் நாம் அகப்பட்டுவிட்டோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த அலை நம்மைத் தாலாட்டுமா, இல்லை! அது நம்மை விழத்தள்ளி சமுத்திரத்தின் உள்ளே இழுத்துச்சென்று, அதன் ஆழங்களுக்குள் அமிழ்த்திப்போடும். செத்து விட்டேனோ என்று எண்ணுகின்ற வேளையிலே சமுத்திரத்தின் ஆழத்தை நமது கண்கள் காண்கின்றன. அதின் அழகு நம்மை திகைக்க வைக்கும். அந்த ஆழத்திலுள்ள பவளப் பாறைகளின் பளபளப்பும், மேற்பரப்பில் காணவே முடியாத விதவிதமான நிறங்களாலான அழகழகான மீன்களும், நமது ஆண்டவரின் அன்பின் அதிசய கரத்தின் கிரியையை நமக்குக் காண்பிக்கும். பின் அந்த அலை நம்மைத் திரும்ப மேலே தள்ளும்போது, நமது தேவன் எத்தனை பெரியவர், எவ்வளவு இரக்கத்துடன் தமது மக்களை நேசிக்கிறார், விடுவிக்கிறார் என்று நாம் சொல்ல மாட்டோமா!
குழியிலே போடப்பட்டபோது இளைஞனான யோசேப்பு எவ்வளவாக வேதனைப்பட்டிருப்பான். அந்தக் குழியிலே தண்ணீர் இல்லை. பூச்சி புழுக்கள் இருந்திருக்குமோ என்னமோ! வெளியே தன் அண்ணன்மார் உணவு அருந்திக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை வேதனை! தன் வாழ்வின் முடிவு இதுவல்ல; பெரியதொரு வெளிச்சம் உண்டு என்று அந்த இளைஞன் அன்று உணர்ந்திருக்க முடியாது. ஆனால் கர்த்தர் யோசேப்போடே இருந்தார். இந்தக் குழி யோசேப்பின் வாழ்வில் அனுமதிக்கப்பட்ட முதலாவது துன்பம், தேவனுடைய கரத்தை அனுபவிப்பதன் ஆரம்பம். இப்படியிருக்க, குழிக்குள் தள்ளப்பட்டது போன்ற வேதனைகள் சூழும்போது நாம் கலங்குவது ஏன்? குழியின் அடியிலேதான் தேவனுடைய கரம் நம்மைத் தாங்குவதை அதிகமாக உணர முடியும். ஆகவே, குழிக்குள் இருந்தாலும் அங்கேயும் கர்த்தர் நம்முடன் இருக்கிறார் என்று அவருடைய கிருபையை எண்ணி அவரைத் துதிப்போமாக!
ஜெபம்: கர்த்தாவே, உபத்திரவங்கள் எங்களை தேவனுக்கேற்ற பாத்திரங்களாக உருவாக்கப்பட அனுமதிக்கப்பட்டவை என்று அறிந்திருந்தபோதிலும் சிலநேரங்களில் நாங்கள் மனமடிவாகி விடுகிறோம். எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும். ஆமென்.