நிறைவேறும் அநாதி திட்டம்
தியானம்: 2026 ஜுன் 11 வியாழன் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 15:12-14; அப்.7:9-10

அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே ….. விற்றுப்போட்டார்கள் (ஆதியாகமம் 37:36).
ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஏதோவொன்று நன்மையாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்வது அந்தந்த சந்தர்ப்பங்களில் கடினமாவே இருக்கும். அதற்கு முக்கியக்காரணம் நம்முடைய குறுகிய பார்வையே என்றால் மிகையாகாது. அவ்வப்போது நாம் சந்திக்கும் சூழ்நிலைகளுக்குள் நாம் சிறைப்பிடிக்கப்படுவதால், அதற்கு மேலே நம்மால் சிந்திக்க முடிவதில்லை. தூரப்பார்வையில்கூட நமது கண்களால் ஓரளவு தூரத்தைத்தான் பார்க்க முடியும். அதற்கு அப்பாலும் ஆச்சரியங்கள் உண்டு என்பதை மாம்ச கண்கள் காணமுடியாது; அதைப் பார்க்க நமக்கு விசுவாசக் கண்கள் தேவை. ஆனால் தேவன் தூரப்பார்வையுடையவர் மட்டுமல்ல, அவர் முடிவையும் தமது கரங்களில் கொண்டிருக்கிறவர். ஆக, அவருடைய கண் பார்வையுடன் நமது பார்வை இணையும் வரையிலும் நமக்கு யாவும் குழப்பமாகவே தெரியும்.
யோசேப்புக்கு நடந்தது மிகுந்த அநியாயமே. சொந்த சகோதரர்களே எதிரிகளாக மாறினார்கள். அவரைக் குழிக்குள்போட்டு, காப்பாற்றி எப்படியாவது தகப்பனிடம் தம்பியைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்று நினைத்த மூத்தவன் ரூபனைக்கூட சகோதரர்கள் ஏமாற்றிவிட்டார்கள். தங்களுக்கு எரிச்சலூட்டிய யோசேப்பின் பலவர்ண அங்கியை ஆட்டு இரத்தத்திலே தோய்த்து, தகப்பனிடம் அனுப்பி அவரையும் ஏமாற்றிவிட்டார்கள். யோசேப்பும் அவர்கள் கண்களுக்கு மறைந்துவிட்டான். ஆனால் கர்த்தரோ யோசேப்பின் வாழ்வில் ஒரு பெரிய திட்டத்தை வைத்திருந்தார் என்பதை யார் அறிந்திருப்பார்? யோசேப்பு எகிப்துக்குப் போகவேண்டியது தேவனுடைய அநாதி திட்டத்தின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது. யோசேப்பு எகிப்துக்குச் சென்றவிதம் தனிப்பட்ட விதத்தில் யோசேப்புக்கு சோதனையின் பாதையாக இருந்தாலும், கர்த்தர் ஆபிராமுடன் செய்த உடன்படிக்கையின் ஆரம்பப் புள்ளியே யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டதன் இரகசியம் என்பதை இன்று நாம் அறியக்கூடும்.
ஆபிராமுக்கு ஒரு பிள்ளைகூட இல்லாதபோதும், அவருடைய சந்ததியைப் பெருகப்பண்ணுவதாக வாக்களித்த கர்த்தர், “உன் சந்ததியார் அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, …நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள். பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்” என்று வாக்களித்தார். ஆக, இஸ்ரவேல் சந்ததி அந்நிய தேசத்துக்குப் போகவேண்டியதும், திரும்பவும் கொண்டுவரப்படுவதும், கர்த்தர் மனுக்குலத்துக்கு ஏற்படுத்திய இரட்சிப்பின் நிழலாட்டமான செயற்பாடாக அன்று செயலாற்றப்பட்டது. அதற்கு ஆரம்பமாக யோசேப்பு அந்நிய தேசமாகிய எகிப்துக்குக் கொண்டுசெல்லப்பட்டார் என்பதை இன்று நாம் புரிந்துகொள்ளமுடியும். “ஆ! தேவனுடைய ஐசுவரியம் ஞானம் அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது” என்று பவுலுடன் சேர்ந்து நாமும் தேவனை ஸ்தோத்தரிப்போமா!
ஜெபம்: தகப்பனே, எங்களது வாழ்வில் நீர் கொண்டுள்ள அநாதிதிட்டம் நிறைவேற எங்களை முற்றிலுமாய் அர்ப்பணிக்கிறோம். ஆமென்.