பார்வையில் கவனம் தேவை
தியானம்: 2026 ஜுன் 14 ஞாயிறு | வேத வாசிப்பு: ஆதியாகமம் 39:5-7

யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான் (ஆதி.39:6).
ஒரு கடற்கரை; “வானமும் கடலும் சந்திக்கின்ற அழகே தனிதான்” என்றான் ஒருவன். “ஆளை விழுங்குகிறதுபோல விரைந்து வருகிற அலைகளைப் பார்” என்றான் மற்றவன். “வந்தாலும் என்ன அடக்கமாக பின்வாங்கிப்போகிறது” இது இன்னொருவன். அடுத்தவனோ, “இந்த நண்டுகளைப் பிடித்தால் ஒரு விருந்து போடலாம்” என்றான். மற்றவனோ, அங்கே வந்திருந்த இளம் பெண்களைப் பார்த்து ரசித்தான். கடற்கரை காட்சி ஒன்றுதான். ஆனால் பார்வை வேறு. ஒவ்வொரு பார்வையிலும் அவரவர் குணாதிசயத்தைக் கணக்கிடலாம் அல்லவா!
இங்கே பொறுப்புள்ள அதிபதி போத்திபாரும் அவனுடைய மனைவியும், அநேக வேலைக்காரர்கள் அடிமைகள் மத்தியில் யோசேப்பும் வாலிபனாக இருக்கிறான். போத்திபாரின் கண்கள் யோசேப்பின் காரியசித்தியையும், உண்மைத்துவத்தையும், யோசேப்புடன் கூடவே கர்த்தர் இருந்ததையுமே கண்டன. ஆனால் போத்திபாரின் மனைவியின் கண்களோ யோசேப்பின் அழகின்மேலும் சௌந்தரியத்தின்மீதும் கவனமாயிருந்தன. அதையும் அவள் சுத்த மனதுடன் அல்ல, இச்சை நிறைந்ததாகவே பார்த்தாள். யோசேப்பு ஒருவன்; ஆனால் கணவன் மனைவி இருவரினதும் கண்களின் பார்வையோ வேறுபட்டதாயிருந்தது. மாத்திரமல்ல, அவர்களின் பார்வை அவர்களுடைய குணாதிசயத்தையும் வெளிப்படுத்தியது. தனது பொறுப்புகள் யாவையும் ஒரு பொறுப்புள்ளவனிடம் ஒப்புக்கொடுக்கும்படி யோசேப்பில் வைத்திருந்த நம்பிக்கையானது, போத்திபார் ஒரு பொறுப்புள்ள அதிகாரி என்பதை வெளிப்படுத்தியது. ஆனால் அவனது மனைவியின் கண்கள் யோசேப்பின் அழகான தோற்றமே நிறைத்து, அவனை அடையவேண்டும் என்று திட்டமிடும் அளவுக்கு அவளைப் பைத்தியமாக்கியது. அப்படித்தான் இருந்தாலும், தன் கணவனுக்கு உண்மையுள்ளவள் என்றால் அவள் தன்னைக் கட்டுப்படுத்தியிருப்பாள். ஆனால் நடந்த சங்கதியோ அவளுக்குள் தேங்கியிருந்த இச்சையான குணாதிசயத்தை வெளிப்படுத்தியது. காட்சி ஒன்று, கவனம் வேறு வேறு.
மாசு நிறைந்த உலகில்தான் நாமும் வாழுகிறோம். அன்றாடம் பல காரியங்களைக் காண்கிறோம். அப்பொழுதெல்லாம் நமது மனதிலே எழுகின்ற எண்ணங்கள் எப்படிப்பட்டவை? நமது எண்ணங்கள்தான் செயலிலே வெளிப்படுகின்றன. வெளிப்படும் செயல்கள்தான் நமது குணாதிசயத்தையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. நம்மை, நமது கவனத்தை, நமது எண்ணங்களை சீர்தூக்கிப் பார்த்து, எல்லா சந்தர்ப்பத்திலும் தேவனுடைய பார்வையுடன் நமது பார்வையை நேராக்கி விடுவோமானால் நமது பார்வையும் சிந்தனைகளும் சீராகிவிடுமல்லவா!
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நீர் காண்கிறதுபோல நாங்களும் காண எங்கள் பார்வையை சிந்தனையை சரிசெய்யும்படியாக ஒப்புவிக்கிறோம். ஆமென்.