விட்டுவிட்டு ஓடு!
தியானம்: 2026 ஜுன் 16 செவ்வாய் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 39:10-12

அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான் (ஆதி. 39: 12).
எதிர்த்து நிற்பது, விலகி நிற்பது, விட்டு ஓடுவது என்று நாம் எதிர்கொள்ளும் சோதனைகளுக்கு பலவிதங்களில் பதில் செய்ய நேரிடுகிறது. எப்போது எதிர்ப்பது, விலகுவது, எந்த சந்தர்ப்பத்தில் திடமான தீர்மானத்துடன் ஓடிவிடுவது என்பதையெல்லாம் நொடிப் பொழுதில் தீர்மானிப்பதற்கு பகுத்தறிவு மிக அவசியம். இந்தக் கிருபை வரத்தை இன்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளியிருந்தும் நாம் பலவேளைகளிலும் தடுமாறுகிறோமா!
அன்று கர்த்தர் யோசேப்புடனே கூடவே இருந்தார் என்று வாசிக்கிறோம். கூடவே இருந்தாலும், கர்த்தருக்குக் கீழ்ப்படிந்திருக்காவிட்டால் கர்த்தர் அவருக்குத் துணை செய்திருக்க முடியாது. போத்திபாரின் மனைவியின் வற்புறுத்தலுக்கு யோசேப்பு சம்மதிக்காததால் தருணம் பார்த்துக் காத்திருந்தவள் போல, வீட்டு மனிதரில் எவரும் இல்லாத சமயம் பார்த்து, யோசேப்பு தன் வேலைக்குப் போனபோது அவனுடைய வஸ்திரத்தைப் பிடித்து இழுத்து கட்டாயப்படுத்தினாள். யாரும் இல்லாததால் யோசேப்பும் இது நல்ல தருணம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் யோசேப்போ அவள் இழுத்த தனது வஸ்திரத்தைக் காப்பாற்றப் போராடிக்கொண்டிராமல், அதை அவள் கையில் விட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டே ஓடிப்போய்விட்டார். அந்த வஸ்திரத்தால் என்ன ஆபத்து வந்தாலும் பரவாயில்லை, தேவனுக்கு விரோதமான இந்தப் பாவத்துக்கு மாத்திரம் இணங்கக்கூடாது என்பதில் யோசேப்பு உறுதியாய் இருந்தார். கர்த்தர் யோசேப்பைக் கைவிட்டாரா?
தருணம் பார்த்திருந்து தாக்குகிறவனே நமது சத்துரு. ஆனாலும், “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் ஓடிப்போவான்” (யாக்.4:7) என்கிறார் யாக்கோபு. ஆனால் தாழ்மையுள்ள சிந்தையுடன் “தேவனுக்குக் கீழ்படிந்திருங்கள்” என்றும் எழுதப்பட்டுள்ளது. அப்போது கர்த்தர் நம்மைக் கைவிட மாட்டார். பலவேளைகளிலும் சோதனைகளை விட்டு நாமே ஓடிப்போக வேண்டியிருக்கும். சோதனைகள் நம்மை மிகவும் குழப்பமடையச் செய்யும்போது, நமது பலவீனம் தாக்கப்படும்போது, முக்கியமாக பாலியல் ரீதியான சோதனைகள் நம்மைத் துரத்தும்போது, அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவதே உசிதமானது. விளைவுகள் பாதகமாக இருந்தாலும், அந்தக் கொடூர பாவத்திலிருந்து தப்பித்துக்கொள்வதே சிறந்தது. யோசேப்பு தப்பி ஓடினாலும், அவருடைய வஸ்திரத்தைக் கொண்டே அவர் சிறைக்குள் தள்ளப்பட்டார். ஆனால் கர்த்தர் அங்கும் யோசேப்புக்கென்று பெரிய திட்டத்தை வைத்திருந்தார் அல்லவா! அவர் நம்மைக் கைவிடுவாரா!
ஜெபம்: பரிசுத்தமுள்ள ஆண்டவரே, சத்துருவானவன் சலனப்படுத்தும் சோதனைகளைக் கொண்டுவந்தாலும் கல்வாரி இரத்தத்தால் கழுவப்பட்ட நாங்கள் சோதனைகளில் ஜெயமெடுக்க தூயஆவியானவர் எங்களுக்கு உதவி செய்ய ஜெபிக்கிறோம். ஆமென்.