சிறையிலும் கிருபை

தியானம்: 2026 ஜுன் 17 புதன் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 39:13-23

YouTube video

சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார் (ஆதி. 39:21).

சங்கிலித் தொடராக சோதனைகளோ இடர்களோ நேரிடும்போது அநேகமாக நாம் சோர்ந்தே போகிறோம். கர்த்தரிடத்தில் கேள்வி கேட்கிறோம், விசுவாசத்தில் தளர்ந்தும் போகிறோம். ஆனால், “உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா.26:3) என்ற வேதவாக்கியம் பொய் கூறுமா? கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் எந்த சூழ்நிலையிலும் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் என்று ஏராளமான வாக்குறுதிகளைக் கர்த்தர் தந்தும் இருக்கிறார். பல சாட்சிகளும் உண்டு. என்றாலும் நாம் தள்ளாடிப்போவதும் ஏன்?

செல்லப்பிள்ளையாக தகப்பனின் அன்பின் அரவணைப்பில் வளர்ந்த இளம் வாலிபன் யோசேப்புக்கு அவருடைய பதினேழு வயதில் ஆரம்பித்த சங்கடங்கள் அவரை விடாமல் துரத்தியபடியே இருந்தன. சகோதரரின் வஞ்சகம், பணத்துக்கு விற்கப்பட்டது, ஒரு புதிய இடத்துக்குக் கடத்தப்பட்டது, அடிமை வாழ்வுக்குள் தள்ளப்பட்டது என்று சோதனை தொடர்ந்தது. ஆனாலும் யோசேப்பு கேள்வி கேட்டதாகவோ, முறுமுறுத்ததாகவோ எங்கும் எழுதப்படவில்லை. இப்போது செய்யாத குற்றத்துக்கு சிறைத்தண்டனை. அன்று அந்த சிறைகள் மிகவும் இழிவான நிலையில் இடுக்கம் நிறைந்த இடமாக இருந்தன. சிறைக்குள் போடப் படுகிறவர்கள் விசாரணை இன்றியே பல காலமாக சிறைக்குள்ளே இருப்பதுண்டு. யோசேப்பின் எஜமான் அவரை ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்களிருந்த சிறையிலே அடைத்தான். யோசேப்பில் எஜமானுக்கு நம்பிக்கை இருந்தாலும், அவன் மனைவியின் கையிலிருந்த யோசேப்பின் வஸ்திரம் அவனுக்கு எதிரான சாட்சியாக இருந்ததால் யோசேப்பைச் சிறை வைப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. கர்த்தரோ சிறை அதிகாரியின் கண்களில் யோசேப்புக்குத் தயை கிடைக்கச் செய்தார். சிறை அதிகாரியோ சிறைச்சாலைக் காரியங்கள் அனைத்தையும் யோசேப்பிடம் பொறுப்புக் கொடுக்குமளவுக்கு யோசேப்பு அந்த சிறைவாசத்திலும் பொறுமையுடனும் உண்மையுடனும் வேலை செய்தார் என்றால், யோசேப்பின் அந்த நற்குணம் நம்மிடம் உண்டா?

தனக்கு நேரிட்ட எல்லா கேடுகளிலும் பொறுமையுடனும் உண்மையுடனும் இருந்ததுமன்றி, தேவனுக்கு விரோதமான பாவத்திற்கு விலகி நடந்தும்கூட கடுமையான தண்டனைக்குட்பட்ட போதும், முறுமுறுப்பின்றி சகித்துக்கொண்ட யோசேப்பைத் தேவன் உயர்த்தினார். யோசேப்பு சந்தித்த இடர்கள் யாவும், ஒரு பெரிய காரியத்துக்காகத் தான் உருவாக்கப்படுவதற்காகவே என்பதை அன்று யோசேப்பு அறிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும் அவர் தனது உண்மைத்துவத்தில் சறுக்கிவிடவில்லை.

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, சோதனைகளிலும் யோசேப்பைப்போல ஆவியின் கனியாகிய நற்குணத்தை வெளிப்படுத்துகிறவர்களாக காணப்பட எங்களுக்கு பெலன் தாரும். ஆமென்.