அடையாளம்
தியானம்: 2026 ஜுன் 22 திங்கள் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 41: 15-38

தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான் (ஆதியாகமம் 41:38).
நம்மைக்குறித்து பிறர் கூறக்கூடிய அடையாளம்தான் என்ன? மெலிந்தவர், உயரமானவர், கறுப்பு, சிவப்பு, கண்ணாடி அணிபவர் என்று பலவிதமான அடையாளங்களைக் கூறக்கூடும். ஆனால் உலக கண்களுக்கு அடுத்தவையான இவைகள் நாளை மாற்றமடையலாம். இந்த அடையாளங்கள் எதுவும் பிற மனிதரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியவை அல்ல.
“தேவ ஆவியைப் பெற்ற மனுஷன்” யோசேப்பின் வாழ்வில் அவரது அடையாளம் இதுவே. இதை அறிக்கை பண்ணியது எகிப்திய ராஜா. பதின்மூன்று ஆண்டுகளாகப் புடமிடப்பட்ட மனுஷன் இந்த யோசேப்பு. இந்த அடையாளம் அவருக்கு எப்படிக் கிடைத்தது? பார்வோன் ஒரு சொப்பனம் கண்டு, அதைக் குறித்து கலக்கமடைந்தான். அதன் அர்த்தத்தை எவராலும் கூறமுடியாதிருந்தது. அப்போது பானபாத்திரக்காரனுக்கு யோசேப்பின் நினைவுவரவும், யோசேப்பு ராஜாவின் முன்னிலையில் கொண்டு வரப்படவும், “நீ சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுவாய் என்று கேள்விப்பட்டேன்” என ராஜா சொல்லவும், யோசேப்பு, “நான் அல்ல; தேவனே பார்வோனுக்கு உத்தரவு அருளுவார்” என்று அன்று சிறையில் அந்த பானபாத்திரக்காரனுக்குச் சொன்ன அதே சாட்சியை யோசேப்பு இங்கேயும் கூறி தேவனை மகிமைப்படுத்தினான். அர்த்தத்தைக் கூறுவதற்கு முன்னர் யோசேப்பு, “தேவன் தாம் செய்யப்போகிறதை பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார்” என்று தேவனுக்கே மகிமை செலுத்தியதைக் காண்கிறோம். மேலும், அர்த்தத்தைச் சொன்னதுமன்றி, வரப்போகும் பஞ்சத்திற்கு எப்படித் தப்பித்துக்கொள்வது என்பதற்கான ஆலோசனையையும் யோசேப்பு வழங்கினார். இந்தக் காரியம் பார்வோனின் மனதைக் கவர்ந்தது. மெய்யாகவே சிறையிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த மனிதன் ஒரு விசேஷித்தவன், இவனில் தேவ ஆவி இருக்கிறது என்று பார்வோனே அறிந்துணர்ந்து சாட்சி சொல்வதை வாசிக்கிறோம்.
யோசேப்பு சொன்ன அர்த்தம் ஒருபுறம் இருக்க, எல்லா நிலையிலும் தேவனுக்கே மகிமை செலுத்தி, அவராலேயே எல்லாம் ஆகும் என்பதை உறுதிப்படுத்திய யோசேப்பு தேவனையே சாட்சியாய் அறிவிக்கிறதை நாம் கவனிக்க வேண்டும். நாம் சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லப்போவதில்லை என்றாலும், பிறர் நம்மில் தேவனைக் காணக்கூடியதாக நமது வாழ்வு இருக்கிறதா? நமது வாழ்வுமுறை, செயல்கள், பேசும் வார்த்தைகள், நமது வாழ்வில் யாருக்கு நாம் முதலிடம் கொடுக்கிறோம், இவை யாவுமே நமக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கக்கூடியன. இன்று நம்மில் தேவனுடைய ஆவியானவர் இருக்கிறார் என்பதை நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் அடையாளமாகக் கூறமுடியுமா?
ஜெபம்: எங்களை நேசிக்கும் நல்லஆண்டவரே, எங்களது சாட்சியின் ஜீவியத்தினாலே புறஇனமக்கள் மத்தியிலே கிறிஸ்துவின் அடையாளங்களாக வாழ்ந்து உம்மை மகிமைப் படுத்த எங்களுக்குதவும். ஆமென்.