கர்த்தருடைய வேளை வந்தது

தியானம்: 2026 ஜுன் 23 செவ்வாய் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 41:39-46

YouTube video

…. பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொன்னான்; (ஆதி. 41:41).

இனி நம்பிக்கையே இல்லை என்றிருக்கும்போது, எதிர்பார்த்திராத மாற்றங்கள் நேரிடுமானால் அது நிச்சயம் நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்கும். ஆனால் கர்த்தர் ஒருவன் வாழ்வில் உயர்வைக் கொடுக்கும் வேளை வந்துவிட்டால், அவன் வாழ்வில் அவரது திட்டம் உருப்பெறும் நேரம் வந்துவிட்டால், அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. ஆனால், அது எந்த வேளை என்று நமக்குத் தெரியாதிருந்தாலும், அந்த வேளை வரைக்கும் நாம் அவருடைய கரத்துக்குள் அடங்கி இருப்பதே முக்கியம்.

யோசேப்பின் வாழ்வின் சம்பவங்கள் ஒவ்வொன்றும் நமக்கு நல்ல பாடமாகவும் சவாலாகவும் மாத்திரமல்ல, நமக்கு நம்பிக்கை ஊட்டுபவையாகவுமே இருக்கின்றன. சிறைக்கூடமே தஞ்சமென நான்கு சுவருக்குள் முடங்கியிருந்தவன் திடீரென ஆயத்தப்படுத்தப்பட்டு ராஜா முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டபோது அவன் மனம் என்ன பாடுபட்டிருக்குமோ! தனக்கு விடுதலையா அல்லது தண்டனை நீடிக்குமா என்றெல்லாம் யோசேப்பு தடுமாறியிருந்தாலும், இப்படியொரு ஆச்சரியமான திடீர்மாற்றம் நிகழும் என்று அவர் நினைத்திருக்கவே மாட்டார். யோசேப்பு அர்த்தம் சொன்ன விதம், அதிலிருந்த உறுதி, அதற்கான தீர்க்கமான மாற்றுத் தீர்வு எல்லாமே பார்வோனைக் கவர்ந்தது. தேவனே யாவையும் யோசேப்புக்கு வெளிப்படுத்தினார் என்று ராஜா முழுமையாக நம்பியதுடன், யோசேப்பு விவேகமும் ஞானமும் உள்ளவன் என்று சாட்சி சொல்லுமளவுக்கு யோசேப்பின் காரியங்கள் இருந்தன. சிறைக்கூடத்துக்குள் இருந்தவன் அரண்மனையில் நிறுத்தப்படுகிறான். அடிமையாயிருந்தவன் தேசத்தின் அதிகாரியாக ராஜாவுக்கு அடுத்தவனாக உயர்த்தப்படுகிறான். இந்த நிலைக்கு உயர்த்தப்படுமளவும் யோசேப்பு ஒரு பெரிய பயிற்சிக்களத்தினூடாகக் கடந்துவர வேண்டியிருந்தது. ஒரு அடிமையாய், சிறைக்கைதியாய் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனுக்கும் பிறருக்கும் சேவை செய்யும் சேவகனாகவே யோசேப்பு காணப்பட்டார். ஏற்றவேளை வந்தபோது கர்த்தர் யோசேப்பை உயர்த்தவேண்டிய ஸ்தானத்திலே உயர்த்தி வைத்தார்.

சூழ்நிலைகள் எதுவாகவும் இருக்கலாம்; மாற்றமடையலாம். ஆனால், எந்த சூழலிலும் நாம் தேவனுக்கும், அவரது பயிற்சிக்களத்தில் நேர்மையாயிருக்கும் மற்றவர்களுக்கும் சேவை செய்கிறோமா என்பதே காரியம். எந்த நிலையிலும் பொறுமையுடனும், முறுமுறுப்பில்லாமலும் கர்த்தருடைய வேளை ஒன்று உண்டு என்ற நம்பிக்கையுடன் நம்மால் இயன்ற சேவையை ஆற்றுவோம். யாவையும் கர்த்தர் கணக்கில் வைப்பார். ஒரு சிறைக்கைதி ராஜமரியாதையுடன் வீதியில் வலம் வந்தானே, இது நடக்குமா? நடந்ததே! நமது வாழ்விலும் நாம் எதிர்பாராத அதிசயங்களைக் கர்த்தர் நடத்துவார்.

ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, நாங்கள் துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்குவீர். முறுமுறுப்பில்லாமல் பொறுமையோடு காத்திருக்க உமதருள் தாரும். ஆமென்.”