கர்த்தர் இடைபடாவிட்டால்…

தியானம்: 2026 ஜுன் 24 புதன் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 41:46-57

YouTube video

சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று ஆனாலும் எகிப்து தேசமெங்கும் ஆகாரம் இருந்தது (ஆதி. 41:54).

“தேவனால் ஆகாத காரியம் ஒன்றுண்டோ” என்று கூறுகின்ற நாம் மெய்யாகவே அதை விசுவாசிக்கிறோமா? “ஆம்” என்றால் வாழ்வில் சிக்கல்கள் வரும்போது தடுமாறுவது ஏன்? இந்த முழு பிரபஞ்சத்துக்கும் ராஜாதி ராஜா, கர்த்தர் ஒருவர்தான். அவர் முழு உலகத்தையும் முழு மக்களையும் ஒன்று போலவே நேசிக்கிறவர். அவர் பாரபட்சம் பாராதவர். தனிப்பட்டவர் வாழ்விலோ, குடும்பங்களிலோ, தேசங்களிலோ கர்த்தர் இடைபடாவிட்டால் எதுவும் ஆகாது. அவருக்கு எகிப்தியன் என்றுமில்லை, இஸ்ரவேலன் என்றும் இல்லை; நம் எல்லோரையும் ஒன்றுபோலவே நேசிக்கிறவர். என்றாலும் தமது திட்டத்தை முன்னெடுப்பதற்கு அவர் சிலரைத் தெரிந்தெடுக்கிறார்; அது அவருடைய கிருபை.

இப்படியே அன்று ஆபிரகாமைத் தெரிந்தெடுத்து, அவர் மகன் யாக்கோபுவின் குடும்பத்தைத் தெரிந்தெடுத்து, அவர்களுக்குள் யோசேப்பைத் தெரிந்தெடுத்து, எகிப்து தேசத்தையும் தெரிந்தெடுத்து, யோசேப்பை அந்த தேசத்துக்கு அனுப்பி, பார்வோனுக்கு சொப்பனத்தைக் கொடுத்து, யோசேப்பை எகிப்தின் இரண்டாம் அதிபதியாக உயர்த்தி, இப்போது பஞ்சத்தில் எகிப்தியரைக் காப்பாற்றுகின்ற செயலாக்கத்தைக் கர்த்தர் நடத்துகிறார். அன்றைய நாட்களில் மக்கள் தங்கள் உணவுக்காக தங்கள் விளைச்சலையே நம்பியிருந்தனர். இன்றுபோல விவசாயத்துக்குரிய ஏதுக்கள் எதுவும் அன்று இல்லாததால் அவர்கள் காலநிலையையே நம்பியிருந்தனர். அதற்கு ஒரு விக்கினம் நேரிட்டால் அவர்களுக்கு உணவு கிடைக்காது. யோசேப்பின் ஆலோசனைப்படியே நல்ல விளைச்சல் பெற்ற ஏழு வருடங்களும் தானியத்தை ஏராளமாகச் சேர்த்து வைத்ததால், அடுத்து வந்த ஏழு வருஷப் பஞ்சத்திலும் எகிப்தியருக்கு உணவுப் பஞ்சம் இருக்கவில்லை. மாத்திரமல்லாமல் சுற்றுமுற்றும் இருந்த சகல தேசத்து மக்களும் கூட உணவுக்குரிய தானியத்துக்காக எகிப்தை நோக்கியே வந்தனர். கர்த்தருடைய திட்டம் செயலாற்ற ஆரம்பித்துவிட்டதை இந்த இடத்தில் நம்மால் உணரக்கூடுமா?

பின்னால் தம் பெயர் சொல்லும் பெரிய ஜாதியை அடக்கி ஒடுக்கி அடிமையாக்கப்போகிற எகிப்தியரைப் பஞ்சத்தில் காப்பாற்ற, கர்த்தர் இஸ்ரவேலனாகிய ஒரு பிள்ளையைப் பாவித்தார் என்றால் தேவனால் ஆகாத காரியம் எதுவும் உண்டோ? அவரது திட்டங்களை யார் வகுத்துப்பார்க்க முடியும்? யோசேப்பு ஒரு எபிரெயன் என்று தெரிந்தும் எகிப்துக்கு அதிகாரியாக அவர் உயர்த்தப்பட்டார் என்றால், இன்று நமது வாழ்வின் காரியங்களைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போமாக. தேவனுடைய இடைப்படுதல் இருந்திராவிட்டால் எகிப்திய மக்கள் இந்த ஏழு வருஷக் கடும் பஞ்சத்தில் அழிந்திருக்க மாட்டார்களா!

ஜெபம்: “எங்களை உள்ளங்கையில் வரைந்து வைத்திருப்பவரே, எங்களுக்கு நேரிடும் எல்லாவற்றிலும் உமது தெய்வீகத்திட்டம் உண்டு என்பதை அறிந்துகொள்ளச் செய்தீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.”