எந்த நிலைமையிலும்

தியானம்: 2026 ஜுன் 26 வெள்ளி | வேத வாசிப்பு: பிலிப்பியர் 4:11-13

YouTube video

ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன் (பிலி. 4:11).

வியாதியோ, உபத்திரவமோ, அன்றாட போராட்டமோ, எந்த சூழலிலும் மனரம்மியமாய் இருக்க உள்ள தடைகள் என்ன? தனக்கு நேரிட்ட சகல உபத்திரவங்கள் மத்தியிலும் பவுல் மனரம்மியமாய் இருந்தது எப்படி? பவுலினால் முடியுமானால் நம்மால் ஏன் முடியாது?

கயான் அம்மையார் என்பவர் சிறையில் அடைபட்டிருந்தபோது, “ஆண்டவரே, கூட்டில் அடைத்து வைத்துள்ள ஒரு சிறு பறவையைப்போல நான் என்னை நினைத்துக்கொள்கிறேன். எனக்கு இப்போது பாடுவதைத் தவிர வேறு வேலை ஏதுமில்லை” என்றாராம். “மோட்சப் பிரயாணம்” என்ற பிரசித்திபெற்ற புத்தகத்தின் ஆக்கியோன் ஜான் பனியன் அவர்கள் பெட்போர்ட் சிறைச்சாலையில் அடைபட்டுக் கிடந்தபொழுது, “இப்பொழுது போல எக்காலத்திலும் நான் ஆண்டவருடைய வார்த்தையை ஊன்றிப் படித்தறிந்ததில்லை. இப்பொழுது நான் இருக்கும் இந்த இடத்திலும், முன்பு நான் படித்த வேத பாகங்கள், நான் முன்பு ஒன்றையும் காணாதிருந்தாலும், இப்போது என்மீது ஒளிவீசச் செய்கின்றன. முன்பைவிட இயேசு கிறிஸ்து எனக்கு உண்மையானவராகவும் வெளிப்படையானவராகவும் இருக்கிறார். இங்கே அவரை நான் கண்டும் உணர்ந்தும் இருக்கிறேன்” என்று எழுதி வைத்திருந்தாராம்.

யோசேப்பு சோதனைகளுக்கு இடமளிக்காதவராக, அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டபோதும், தன் துயர் மறந்து பிறர் துக்கத்தைக் கவனித்து சேவை செய்கிறவராகவும் இருந்தார் என்றால், அவரால் அது எப்படி முடிந்தது? ஆம். அவர் கர்த்தருக்கு உண்மையுள்ளவராக இருந்தார்; கர்த்தரும் யோசேப்புடன் கூடவே இருந்தார். பானபாத்திரக்காரன் ஏமாற்றியபோதும் அவர் முறுமுறுத்ததாகவோ, அவனைக் குற்றப்படுத்தியதாகவோ சொல்லப்படவேயில்லை. எல்லா நிலையிலும் யோசேப்பு கர்த்தருக்குள் திடமாகவும் மனரம்மியமாகவும் இருந்தார். கிறிஸ்துவினிமித்தம் பவுல் அடைந்த துயரங்களோ சொல்லி முடியாதன. சிறையில் அடைபட்ட நிலையிலிருந்தே, “எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்” என்று எழுதியதும் எப்படி? அதிலும் தாம் இக்காரியத்தைக் கற்றுக்கொண்டதாகவே எழுதியுள்ளார். ஆம், ஒவ்வொரு நிலையிலும் அவர் கர்த்தருக்குள் மனரம்மியமாய் இருக்க கற்றுத்தேறி வந்தார். இன்று உலகம் என்ற சிறைக்கூடத்துக்குள் நாம் அடைபட்டிருக்கிறோம். யோசேப்புக்கு, பவுலுக்கு ஏற்பட்ட நிலைமை நமக்கு நேரிடாவிட்டாலும், வாழ்வின் சாதாரண இடர்களில் நம்மால் கர்த்தருக்குள் மனரம்மியமாக இருக்க முடிகிறதா? உங்களுக்குக் கர்த்தர் கிருபை செய்வாராக.

ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து நாங்கள் தியானித்த சத்தியங்களை அனுதின வாழ்க்கையில் பயிற்சித்து எந்த நிலைமையிலும் கர்த்தருக்குள் மன ரம்மியமாய் வாழ்ந்து உம்மை மகிமைப்படுத்த எங்களுக்கு உதவிச்செய்யும். ஆமென்.”