தேவனருளிய பாத்திரம்

தியானம்: 2026 ஜுன் 27 சனி | வேத வாசிப்பு: யோவான்; 18:7-13

YouTube video

உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ (யோவான் 18:11)

பிறர் மூலமாக கஷ்டதுன்பம் நேரிடும்போது நாம் என்ன சொல்லுவோம்? அவர்கள்மீது மனஸ்தாபப்படுகிறோம்; ஆத்திரப்படுகிறோம். அவர்களுக்கு விரோதமாக என்னவெல்லாம் பேசுகிறோம். முடிந்தால் நாம் அவர்களுக்குச் செய்த நன்மைகளை யோசித்து யோசித்து பட்டியல் போட்டே காட்டிவிடுவோம் அல்லவா? ஆனால், ஆண்டவருடைய வாழ்வு வித்தியாசமானது. தமக்கு நேரிட்ட எந்தப் பாடுகளும் தற்செயலாகவோ மனிதர் மூலமாகவோ வந்ததாக இயேசு கருதவேயில்லை. கெத்செமனே தோட்டத்திலே இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன் யூதாஸ். பேதுரு வெட்டியதோ வேறொருவனின் காதை. விட்டிருந்தால் யூதாசையே வெட்டியிருப்பார் பேதுரு. ஆனால், ஆண்டவரோ வித்தியாசமாகச் செயற்பட்டார். பேதுருவைக் கடிந்துகொண்டு, இது பிதா எனக்குக் கொடுத்த பாத்திரம், இதில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ என்றார். பாத்திரத்தைக் கொடுத்தது யூதாஸ். ஆனால், இயேசுவோ இது பிதா தந்தது என்றார். அன்று இதை அறியாதிருந்த பேதுரு, பரிசுத்த ஆவியைப் பெற்றபின்பு, …. தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசுவை… (அப்.2:23) என்று முழங்கியதைக் காண்கிறோம்.

தேவபிள்ளையே, பிறர்மூலமாக அது யாராயிருந்தாலும், நமக்கு வரும் துன்பமோ ஏமாற்றமோ, எதுவானாலும், அவை, நாம் ஆவிக்குரிய வளர்ச்சியும் தேர்ச்சியும் அடையும்படி தேவனே நமக்கு அனுமதித்திருக்கும் பாத்திரங்கள் என்று நாம் அறியவேண்டும். நண்பன் ஏமாற்றலாம்; அந்த ஏமாற்றத்திலும் நாம் அவனை நேசிக்கக் கற்றுக்கொள்ளலாம். சகோதரர் நம்மைப் புரியாமல் நடக்கலாம்; நாம் பொறுமையைக் கற்றுக்கொள்ள அதுவே நல்ல தருணம். நமக்கு விரோதமாக யாராவது வெளிப்படையாகவே அநியாயம் செய்யலாம்; மன்னிக்கும் மனதை வளர்த்துக்கொள்ள இதுவே நல்ல தருணம். தேவன் அனுமதிக்காமல் ஒரு தலைமயிரேனும் விழாமல் இருக்கும்போது, இவர்களாக நினைத்து நம்மை வேதனைப்படுத்தமுடியுமா? ஆகவே இப்படிப்பட்ட ஒவ்வொன்றும், நாம் ஆண்டவருக்குள் வளரவும் இயேசுவைப்போல் மாறவும் நமக்கு அருளப்பட்ட அருமையான தருணங்கள் என்று ஏற்றுக்கொள்வோம்.

அன்பானவர்களே, ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பின்னே தேவனுடைய கரத்தைக் காணப் பழகிக்கொள்ளுவோமானால் நமக்கு விரோதிகளே இருக்கமுடியாது. இயேசு யூதாஸையும் சிநேகிதனே என்று அழைத்தார் (மத்.26:50). இந்த மனப்பான்மை நமக்கும் வருமா? வரவேண்டும். அவன்தான் இயேசுவின் மெய்சீஷன்.

ஜெபம்: “ஆண்டவரே, சத்துருக்களை சிநேகிக்கவும், நன்மை செய்யவும் எங்களுக்குப் போதித்திருக்கிறீர். அதின்படி நடக்க உமதாவியால் எங்களை நிரப்பும். ஆமென்.