மகா பிரதான ஆசாரியர்!
தியானம்: 2026 ஜூலை 3 வெள்ளி | வேத வாசிப்பு: எபிரெயர் 4:13-16; 9:11-14

வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால் … (எபி. 4:14).
“என்னைப் புரிந்துகொள்வார் இல்லை”, “ஆலோசனை கேட்க நம்பிக்கையுள்ளவர்கள் யாரும் இல்லை” என்றெல்லாம் நம்மில் எத்தனைபேர் எத்தனை தடவை துயரப்பட்டிருப்போம். உண்மைதான், நாம் நம்பியிருக்கிறவர்களே நம்மை ஏமாற்றுகிற சந்தர்ப்பங்கள் ஏராளம். ஆனால், தேவ ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் மீட்கப்பட்ட தேவபிள்ளைகள் ஏன் கலங்கவேண்டும்? எல்லாவற்றையும் அறிந்திருக்கிறவர், நமக்கு முன்னோடியான ஒருவர் நமக்கு இருக்கிறார். ஆகையால் நாம் தைரியமாக அவரிடம் செல்லலாமே!
அன்று ஆலயத்தில் பணி செய்யவும், தூபங்காட்டவும், பலிகளைச் செலுத்தவும் ஆசாரியர்கள் இருந்தார்கள். இவர்கள் கர்த்தருக்கும் மக்களுக்கும் இடையே நின்று, மக்களுக்காகக் கர்த்தரிடம் பரிந்துபேசுகிறவர்களாக இருந்தார்கள். இவர்களுக்குள் பிரதான ஆசாரியர் முக்கியமானவர். இவர் ஒருவரே ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் போக அனுமதிக்கப்பட்டவர்; ஆனால், இவரும் வருடத்தில் ஒருதடவை மாத்திரமே பலி இரத்தத்தைக் கொண்டு மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவார். அதற்கும் பல முன்னெச்சரிக்கைகள் உண்டு. அத்துடன், பிரதான ஆசாரியர் தனக்காகவும் பலிசெலுத்த வேண்டியவர். “இரண்டாங் கூடாரத்திலே பிரதான ஆசாரியன் மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்” (எபிரெயர் 9:7).
ஆனால், இன்று நமக்கு ஒரு பிரதான ஆசாரியர் இருக்கிறார். இவர் தமக்காகப் பலிசெலுத்த தேவையற்ற பரிசுத்தர். நமது பாவங்களைத் தம்மேல் ஏற்று, ஏகபலியாகி, சிந்திய இரத்தத்தை ஏந்தி, தமது மாம்சமாகிய திரையைக் கிழித்து, பிதாவினண்டையில் நமக்காகச் சென்றவர். ஆம், “பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலது பாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய், கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு” (எபி.8:1-2). இவர், உலகில் வாழ்ந்தபோது எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டும் பாவமில்லா தவராக இருந்தார். எல்லாவகையிலும் என்னும்போது, நமது சோதனைகளில் நாம் தடுமாறும்போது நமது தடுமாற்றத்தை அறிந்த ஒருவர் நமக்கிருக்கிறார் என்ற தைரியம் நமக்குண்டாகிறது. பின்னர் ஏன் தடுமாற்றம்? நமது வாழ்க்கையில் பாரங்கள் அழுத்துகையில், தாங்கொண்ணாத துயரங்கள் நம்மை வேதனையில் ஆழ்த்துகையில், எங்கே போவது யாரிடம் போவது என்று இனி தடுமாற வேண்டியதில்லை. இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார். ஆமென்.
ஜெபம்: தேவனே, போகும் வழிதெரியாது தடுமாறி திகைத்துப் போயிருந்த வேளைகளிளெல்லாம் உதவி செய்கிற பிரதான ஆசாரியராக நீர் இருக்கிறீர். ஸ்தோத்திரம் ஆமென்.”