தைரியமாய் கிருபாசனத்தண்டையில்…
தியானம்: 2026 ஜூலை 5 ஞாயிறு | வேத வாசிப்பு: மத்.27:50-54; எபி.4:13-16

அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது (மத். 27:51).
மனமுடைந்திருக்கிறீர்களா? “எவ்வளவு பணம் கொடுத்தும் எனது வக்கீல் என்னை ஏமாற்றி விட்டார்” என்று ஒரு சகோதரி வேதனைப்பட்டார். மெய்தான், நம்மில் பலர் மாத்திரமல்ல, நம்மைச் சுற்றிலும் இருக்கிற ஏறத்தாழ அனைவருமே ஏமாற்றங்களினால் மனதளவிலே உடைந்துபோய்த்தான் இருக்கிறார்கள். அதே இந்த உலகில் போராட்டங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதை நாம் மறுக்க முடியாது. ஆனால் “நேற்றும் இன்றும் என்றும் மாறாத” கர்த்தர் ஒருவர் நமக்கிருக்கிறார் என்பதை நாம் மறந்து, மனிதரை நாடி ஓடுவது ஏன்?
ஒரு அருமையான பழைய, ஆனால் இன்னமும் மங்காத, என் இதயத்தை அசைத்த ஒரு ஆங்கில ஞானப்பாட்டின் சில வரிகளைத் தமிழிலே தருகிறேன்:
சிலுவையிலே இயேசு மரித்தபோது, தேவகோபம் நிவர்த்தியானது;
ஒவ்வொரு பாவமும் அவர்மேல் (இயேசுவின்மேல்) சுமத்தப்பட்டது
இன்று அவருடைய மரணத்தினாலே நான் வாழுகிறேன்.
இருளைக் கிழித்துக்கொண்டு ஒளி உலகில் வந்தது,
அந்த மகிமையின் நாளிலே அவர் கல்லறையைவிட்டு எழுந்தார்.
அவர் ஜெயவீரனாக நின்றபோது, என்னைச் சுற்றி இறுக்கிப் பிடித்திருந்த
பாவத்தின் சாபத்தின் பிடி தனது பிடியை இழந்தது.
நான் அவருடையவன், அவர் என்னுடையவர், இந்த உறவை
கிறிஸ்துவின் விலைமதிப்பில்லா இரத்தத்தாலே பெற்றுக்கொண்டேன்.
பாடல் பழையதாயினும், பாடும்போது இன்றும் நமது இதயம் துள்ளுகிறது. இத்தனை பெரிய விடுதலையைப் பெற்ற நாம், அதனைப் பிறருக்கு பறைசாற்றவேண்டியிருக்க, ஒன்றுமில்லாத பிரச்சனைகளால் மனம் சோரலாமா? அன்று கிருபாசனத்தின் வாசலை அடைத்துத் தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலையானது, பிதாவின் சித்தத்தைப் பூரணமாக முடித்து, தமது ஆவியை இயேசு ஒப்புக்கொடுத்தபோது, அந்தத் திரைச்சீலை மேலிருந்து கீழாகக் கிழிந்துவிட்டது. ஏதேனிலே அடைக்கப்பட்ட அந்த வாசலை, திரைச்சீலையால் தடுக்கப்பட்டிருந்த அந்த வாசலை கிறிஸ்துவின் மரணம் தகர்த்தெறிந்துவிட்டது. அவருடைய உயிர்த்தெழுதல் நமக்கு நித்திய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இத்தனை பெரிய மேன்மையைப் பெற்றிருக்கிற நாம் இவ்வுலகில் முகங்கொடுக்கிற சில்லறைத்தனமான பிரச்சனைகளில் மூழ்கிவிடலாமா? சிலிர்த்துக்கொண்டு எழும்புவோம். தைரியமாகவே கிருபாசனத்தண்டைக்குச் செல்லுவோம். கர்த்தர் யாவையும் பார்த்துக்கொள்வார்.
ஜெபம்: “நல்ல ஆண்டவரே, உமது விலையேறப் பெற்ற இரத்தத்தால் நாங்கள் பெற்ற இரட்சிப்பை, நித்திய நம்பிக்கையை மற்றவர்களுக்கும் நாங்கள் அறிவிக்க கிருபை செய்யும். ஆமென்.”