நம்மைப்போல ஒருவர்!
தியானம்: 2026 ஜூலை 6 திங்கள் | வேத வாசிப்பு: எபிரெயர் 4:15-16

எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் (எபிரெயர் 4:15).
“எல்லாவிதத்திலும் நம்மைப்போல” இந்த வார்த்தை நம்மை இன்று திடப்படுத்தட்டும். “நம்மைப் புரிந்துகொள்வார் எவருமில்லை” “என் கஷ்டத்தை யாரிடம் எடுத்துச்சொல்வேன்” என்றெல்லாம் தங்களுக்குள்ளே புழுங்கித் தவிக்கிற பலர், நம்மைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன், நம்மிலும் எத்தனைபேர் வெளியிலே காட்டிக்கொள்ள வெட்கப்பட்டவர்களாய் இப்படிப்பட்ட துயரத்தினால் உள்ளத்தில் உடைந்துபோயிருக்கிறோம். இதனால்தான் இன்று தற்கொலைகளும் அதிகரித்துவிட்டது. ஆனால் நமக்கு ஒருவர் இருக்கிறார்; அவர் நம்மை முற்றிலும் அறிந்தவர் மாத்திரமல்ல, நம்மைப் போலவே சோதிக்கப்பட்ட அவர் ஒருவரே நமது நம்பிக்கைக்கும் பாத்திரர்.
இயேசுவானவர் எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டவர்; மாத்திரமல்ல; எந்த சோதனையிலும் அகப்படாமல் விழுந்துவிடாமல் சோதனைகளை ஜெயித்தவர் அவர் ஒருவரே. இயேசு ஞானஸ்நானம் பெற்று, “இவர் என்னுடைய நேசகுமாரன்” என்று வானத்திலிருந்து சாட்சி பெற்ற மறுகணமே, சோதிக்கப்படுவதற்கென்றே அவர் வனாந்தரத்திற்கு, அதிலும் ஆவியானவராலேயே கொண்டுபோகப்பட்டார். தமது ஊழியத்தை ஆரம்பிக்கும் முன்னரே அவருடைய மனிதத்துவம் சோதிக்கப்பட்டது. ஏதேனிலே முதல் மனுஷன் மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை என்று மூன்று கோணங்களிலும் சோதனையிலே விழுந்தான்; அதே மூன்று கோணங்களையும் இயேசு இங்கே வனாந்தரத்திலே முறியடித்தார், சாத்தான் அவரைவிட்டுப் போனான்; அதிலும் சிலகாலத்திற்கு என்றுதான் எழுதப்பட்டுள்ளது. மேற்கண்ட மூன்றுக்குள்ளும் மனிதன் சந்திக்கின்ற அனைத்து சோதனைகளையும் நாம் அடக்கிக் காணலாம். ஆக, முழு மனிதனாய் உலகில் வந்து வாழ்ந்த இயேசு, சகல சோதனைகளையும் முறியடித்து, இன்று நமக்காகப் பரிந்து பேசுகிறவராய் பிதாவின் சந்நிதானத்தில் நிற்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப்பெறவும் ஏற்ற காலத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும் தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் (எபி.4:16).
இப்படியான அன்புள்ள ஒருவர் நமக்கு இருக்கும்போது சோதனைகள் வேதனைகளில் நாம் தடுமாறுவது ஏன்? உள்ளம் உடைந்துபோகும் வரைக்கும் நாம் ஏன் தாமதிக்கவேண்டும். எதுவானாலும் தைரியமாக அவரண்டை செல்லலாம். மனிதர் நம்மை ஏமாற்றுவார்கள்; ஆனால் ஆண்டவர் ஒருபோதும் நம்மைத் தள்ளவேமாட்டார். ஆகையால் அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் பெற்றுக்கொள்ள தைரியமாய் அவரிடம் செல்லுவோமாக.
ஜெபம்: அன்பின் நேசகர்த்தாவே, எங்கள் உள்ளத்தின் உடைவுகளை அறிந்திருக்கிறீர். எல்லா விதத்திலும் எங்களைப்போல பாடுகளை சகித்து வெற்றி சிறந்த பிரதான ஆசாரியராக நீர் எங்களுக்கிருக்கிறபடியால் நாங்கள் கலங்கமாட்டோம். ஆமென்.