இதற்கும் ஒரு தகுதியா?

தியானம்: 2026 ஜூலை 8 புதன் | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 9:10-16

YouTube video

அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபட வேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார் (அப்போஸ்தலர் 9:16).

ஒவ்வொன்றுக்கும் ஒரு தகுதி வேண்டும். ஒரு தொழிலுக்கு அதற்கேற்ற தராதரம் வேண்டும். திருமணத்தில், இந்தக் குடும்பம் நமக்குத் தகுதியானதா என்றும் மனுஷர் தகுதி பார்ப்பார்கள். அதற்கேற்ற தகுதி இல்லாவிட்டால், நம்மால் அந்த நிலைமைக்கு ஒத்துப்போவது கடினம் என்பது இயல்பு நியதி. இவை ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள்தான். அதற்காக சோதிக்கப்படுவதற்கும் ஒரு தகுதி வேண்டுமா? ஆம், வேண்டும். நமது திராணிக்கு மேலாக நாம் சோதிக்கப்படுவதற்கு இடங்கொடாத தேவன் (1கொரி.10:13) சோதனையை அனுமதிக்கும்போது நமது தகுதியைப்பார்க்க மாட்டாரா? ஒரு அம்மையாரின் கவிதையின் ஒரு சில வரிகள் இதோ:

“என் வழியை அடைத்துக் கோணலாக்கி,
நான் தாழ்மையும் பொறுமையும் உடையவனாகி,
உலக நேசத்தைவிட்டு உம்மை நேசிக்குமாறு செய்தீர்;
புரியாத இப் புதிருக்காக உம்மைத் துதிப்பேன்.
என்னைச் சோதிக்கப் பாத்திரனாக எண்ணியதால் மகிழுவேன்;
நடத்தும் உம் கரத்தையே என்றும் பற்றிக்கொள்வேன்.”

அன்று சாத்தான் யோபுவை சோதிக்கப் புறப்படவில்லை. யோபுவை சாத்தானுக்குச் சுட்டிக் காட்டியவரே கர்த்தர்தான் (யோபு 1:8). பின்னர் இரண்டாந்தரமும் கர்த்தர்தான் சுட்டிக் காட்டினார் (யோபு 2:3). எப்படி இது? யாவையும் இழக்கத்தக்கதான சோதனை மிகுதியாய் வந்தாலும் தமது பிள்ளை யோபு தமக்கு உண்மையாய் இருப்பான் என்பதில் கர்த்தர் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார் என்பது, ஆரம்பத்திலும் இறுதியிலும், “என் தாசனாகிய யோபு” (1:8, 42:7,8) என்று கர்த்தர் யோபுவை அழைத்ததிலிருந்து விளங்குகிறது. ஆம், சோதிக்கப்படுவதற்கு யோபுவுக்கு எல்லா தகுதியும் உண்டு என்று கர்த்தர் கண்டார். சவுல், மக்களால் மதிக்கப்பட்டவன், உயர்பதவி வகித்த யூதமத வைராக்கியம் கொண்டவன். ஆனால் கர்த்தர் அவனைத்தான் கண்டார், எதற்காக? தம்முடைய நாமத்தினிமித்தம் பாடுபட அவனே தகுதியுள்ளவன் என்று கண்டார். பாடுபடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். அந்தத் தகுதி நம்மிடம் உண்டா? சோதனைகள் துன்பங்கள் வியாதிகள் தாக்கும்போது, “ஐயோ ஆண்டவரே” என்று புலம்புவோமா? அல்லது, “இந்த சோதனைக்கு நான் தகுதியுள்ளவன் என்று நீர் நம்பியதால் நான் உம்மைத் துதிப்பேன்” என்று சொல்லுவேனா? அவன் … என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான் (அப்.9:15).

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, எங்கள் வாழ்வின் கஷ்டங்கள் சோதனை நெருக்கும்போது, இதிலும் நீர் என்னை நம்ப நான் தகுதியுள்ளவன் என்று கண்டீரே. உமக்கு ஸ்தோத்திரம் ஐயா. ஆமென்.