நன்மைகளின் பிதா

தியானம்: 2026 ஜூலை 10 வெள்ளி | வேத வாசிப்பு: ரோமர் 8: 26-29; யாக்கோபு 1:17-18

YouTube video

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் (2கொரிந்தியர் 9:15).

இருக்கின்ற நன்மைகளை நினைத்து மகிழுகிறவர்கள் சிலர், இருக்கிறதை மறந்து இல்லாததைக் குறித்து முறுமுறுக்கிறவர்கள் சிலர்; நன்மைகள் நிகழும்போது துள்ளிக் குதிக்கிறவர்கள் பலர்; துக்கம் நேரிட்டால் சோர்ந்து போய் தவிக்கிறவர்களும் பலர். இவர்களில் நீங்கள் யார்? இவர்களைவிட மனுஷரில் இன்னுமொரு ரகம் இருக்கிறார்கள். இவர்கள் யார்?

உலகரீதியாக “நன்மை” என்று நாம் எதைக் கருதுகிறோம்? வியாதி வந்தால், அது நன்மையா? இல்லை. ஆனால் அதே வியாதி குணமடைந்தால் அது நன்மையா? ஆம். அதற்காக நாம் மகிழ்ந்து, கொண்டாடவும் செய்கிறோம். இது இயல்பு. ஆனால் அதேசமயம், நமக்கு நன்மை அல்ல என்று நாம் கருதுகின்ற சந்தர்ப்பங்களில், “இதுவும் தேவன் எனக்கு அருளிய சொல்லி முடியாத மிகச் சிறந்த ஈவு” என்று ஏற்றுக்கொண்டு, அந்த நிலையிலும் கர்த்தருக்குத் துதி ஸ்தோத்திரம் செலுத்தமுடியுமா? “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோம. 8:28). இந்த நன்மை என்ன? “நன்மையான எந்த ஈவும் …ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து வருகிறது” (யாக்.1:17). இந்த ஈவு தான் என்ன? கர்த்தர் தீமை தருவாரா? இல்லை. சிலநேரம் அனுமதிப்பார், அதுவும் நமது திராணிக்குத்தக்க அளவுதான் (1கொரி.10:13). அதிலும் அவர் நம்மைத் தனித்து விடுகிறவர் அல்ல. ஆண்டவராகிய இயேசுவை நமக்கான ஏகபலியாகத் தந்து, நித்திய நரகத்திலிருந்து நம்மைக் காத்து, அந்த “கிருபை” வரத்தைத் தந்தவர் நமக்குத் தீமைகளைத் தருவாரா? ஆக, ரோமர் 8:28 ன் நன்மை எதுவென்று 29ம் வசனத்தில் இருக்கிறது. அதுவே, “இயேசுவின் சாயல்”. யாக்கோபில் குறிப்பிடப்பட்ட ஈவு, அடுத்த வசனத்தின்படி “இரட்சிப்பு”. ஆக, நமக்கு நேரிடுகின்ற ஒவ்வொன்றிலும், தேவன் நித்தியத்திற்குரிய ஒரு காரணத்தை வைத்திருக்கிறார், அவர் நம்மை உருவாக்குகிற தேவன் என்பதை விசுவாசிக்கும்போது, துன்ப துயரத்திலும் நமக்குள்ளாக இன்ப ஊற்று நிச்சயம் பாய்ந்தோட வேண்டுமே!

ஆண்டவரின் பிள்ளைகள் நாம் என்றால், ஆண்டவர் அறியாமல் நமக்கு எதுவும் நேரிடாது என்ற உறுதியான விசுவாசம் உண்டென்றால், நமக்கு நன்மை என்று நாம் நினைக்கிறவைகளில் மாத்திரமல்ல, நமக்கு நன்மை இல்லையென்று நாம் நினைக்கிறவைகளைக் குறித்தும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்போம். அவை நன்மை இல்லை என்று நமது மனுஷீகத்தில் நாம் கருதலாம்; ஆனால், அவையே நம்மை உடைத்து உருவாக்கி இயேசுவைப்போல மாற்றுகின்ற படிமுறையின் முக்கியபடிகளாகக் கர்த்தர் உபயோகிக்கிறார். அப்போது, என்ன நேரிட்டாலும் கர்த்தருக்குள்ளான மனமகிழ்ச்சியை யாராலும் எதனாலும் பறித்துவிட முடியாது.

ஜெபம்: அன்பின் தகப்பனே, நீர் அறியாமல் எதுவும் எங்களுக்கு நேரிடவில்லை. எங்கள் பார்வைக்கு தீமைபோன்று தோன்றினாலும் உமதுகரம் அவற்றிலும் இருப்பதற்காக நன்றி. ஆமென்.