துன்பத்திலும் பாடுவேன்
தியானம்: 2026 ஜூலை 13 திங்கள் | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 16:16-25

துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும் … எங்களை விளங்கப்பண்ணுகிறோம் (2கொரி.6:10).
நம்முடைய வாழ்வைக் கட்டுப்படுத்துவது யார், அல்லது எது? அடுத்தவர் என்ன சொல்லுவார், உலகம் என்ன சொல்லும் என்று சூழ்நிலைகளின் கட்டுப்பாட்டுக்குள் நாம் வாழுகிறோமா? இதுவே நமது வாழ்வில் அதிகமாக துயரத்தை விளைவிக்கிறது. ஆனால் பவுலின் வாழ்வில், அவர்தான் “எப்பொழுதும்” சந்தோஷமாய் இருப்பதாக எழுதினாரே, அது எப்படி?
கர்த்தருடைய பணிதான் பவுலின் ஒரே நோக்கம். இருந்தும் கர்த்தர் அவருடைய திட்டத்தை மாற்றி, வேறு திசையில் அனுப்புகிறார். அப்படியே பவுலும் சீலாவும், பிலிப்பு பட்டணத்தில் வந்திறங்கினார்கள். கர்த்தரே நடத்தினார் என்பதற்காக காரியங்கள் இலகுவாக இருந்தனவா? இல்லை. குறி சொல்லி தன் எஜமான்களுக்கு ஆதாயம் தேடிக்கொடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் இவர்களைச் சந்திக்க, பவுல் அவளைப்பிடித்திருந்த ஆவியைத் துரத்த, தங்கள் ஆதாயம் கெட்டுவிட்டதே என்று கோபங்கொண்ட அந்த மனிதர் பவுலையும் சீலாவையும் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்புவித்தனர். அவர்கள் இவர்களை அடித்து வதைத்து, சிறையில் பத்திரமாக அடைக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டனர். அவனும் உட்காவலறையில் இவர்களது கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவிட்டான். சுவிசேஷம் அறிவிக்க, ஆவியானவராலே நடத்தப்பட்டு இங்கே வந்தவர்களுக்கு இப்படி ஆக வேண்டுமா? ஆயிற்றே! அதற்காக அவர்கள் கர்த்தரை நொந்துகொண்டனரா? இல்லை; பதிலுக்கு நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம் பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள், மற்ற கைதிகளும் இதைக் கேட்டார்கள். சிறைச் சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படி பூமி அதிர்ந்தது. சிறைக்கதவுகள் திறந்தன. கட்டுகளும் கழன்றன. என்ன அதிசயம்!
“துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்” என்று பவுலினால் எப்படி எழுத முடிந்தது என்று இப்போது விளங்கும். தன்னை அழைத்தவர் யார் என்பதை பவுல் நன்கு அறிந்திருந்தார். தேவன் நடத்துகின்ற வழி ஒருபோதும் பிசகாது என்பது பவுலுக்குத் தெரியும். உட்காவலறையில் தொழுமரத்தில் கால்கள் மாட்டப்பட்டு அசைய முடியாதிருந்த ஒருவரால், நடுராத்திரியில் தேவனைத் துதித்துப் பாடமுடியுமானால், நாளை மாறிப்போகின்ற அற்பத்தனமான துயரங்கள் நேரிடும்போது நாம் ஏன் துக்கப்பட்டு புலம்பவேண்டும்? நாம் கர்த்தரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது மெய்யானால், எத் துன்பம் நேரிட்டாலும் அவர் அந்த இடத்திலும் நம்முடன் இருக்கிறார் என்ற விசுவாசம் நமக்கு அவசியம். அப்பொழுது தானாகவே துதி கீதம் நமது இருதயத்திலிருந்து நிச்சயம் எழும்பும்.
ஜெபம்: “கர்த்தாவே, சகலமும் நன்றாயிருக்கும்போது மட்டுமல்ல, பாதகமான சூழ்நிலையிலும், வியாதியின் நேரத்திலும், துக்கநேரத்திலும் கர்த்தரின் துதி எங்கள் வாயில் எப்போதும் காணப்பட எங்களை உமதாவியால் நிரப்பும். ஆமென்”.