என் ஒருவனுக்காகவா!

தியானம்: 2026 ஜூலை 14 செவ்வாய் | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 16:25-34

YouTube video

தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான் (அப்;.16:34).

சிலசமயங்களில் கர்த்தருடைய வழிநடத்துதல்கள் நமக்கு ஆச்சரியமாகவும், நம்பமுடியாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. ஆனால் சகலவற்றையும் அறிந்திருக்கிற கர்த்தர் சகலத்தையும் அந்தந்தக் காலத்தில் நேர்த்தியாகவே செய்வார், செய்கிறார், இதுவரையும் அப்படித்தான் செய்தார்! பெரிய காரியங்களை எதிர்நோக்கும்போது, நாம் ஏமாறும்வண்ணம் வேறொன்று நடக்கும். ஆனால் அமர்ந்திருந்து சிந்தித்தால் கர்த்தர் ஒரு நோக்கமின்றி எதுவும் செய்யமாட்டார் என்பது விளங்கும். ஒரு சுவிசேஷக் கூட்டம் ஒழுங்குசெய்யும்போது அநேகர் மனந்திரும்பவேண்டும் என்று நாம் எதிர் பார்க்கிறோம். ஆனால் ஒரு சிலர், அல்லது ஒரு தனி மனிதனின் மனந்திரும்புதலுக்காகவும் கர்த்தர் ஒரு பெரிய கூட்டத்தையே நடத்த அனுமதிப்பார் என்பதையும் நாம் மறுக்கமுடியாது.

ஒரு பெண்ணுக்காக இயேசு, யூதர் வெறுக்கின்ற சமாரியா நாட்டுக்குள் நடந்துசென்றாரே! ஒரு சகேயுவுக்காக எரிகோவின் வழியாக நடந்தாரல்லவா! இப்படி எத்தனை! ஏன், நம் ஒருவருக்காக இயேசு செய்த பெரிய காரியங்களை எண்ணிப்பார்ப்போமா! இங்கே, பவுலின் ஊழியப் பாதையையே ஆவியானவர் தடைபண்ணி பிலிப்பி பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார். அங்கே ஒரு லீதியாள்; அவளும் அவள் வீட்டாரும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்கள். மேலும், ஒரு சிறைச்சாலைக்காரனும் அவன் வீட்டாரும் இரட்சிக்கப்படும்படிக்கு பவுலையும் சீலாவையும் கர்த்தர் சிறைக்காவலுக்கே அனுமதித்தார் என்பது எத்தனை பெரிய ஆச்சரியம்! பவுலும் சீலாவும் கர்த்தருடைய அன்பை உணர்ந்தவர்களாய் சிறைக்காவலிலும் பாடி தேவனைத் துதித்தார்கள். அந்தத் துதிப்பாடல் மகாபெரிய விடுதலையை அந்தச் சிறைக்காவலனுக்கும் அவன் வீட்டாருக்கும் கொடுத்தது! பவுலும் சீலாவும் தேவனைத்துதிக்க, சிறைக் கதவுகள் திறக்க, கட்டுகளெல்லாம் அவிழ, கைதிகள் தப்பித்து விட்டார்களோ என்று சிறைக்காவலன் தன்னை மாய்த்துக்கொள்ளப்போக, பவுல் அதைத் தடுக்க, எல்லாமே தேவதிட்டப்படி நடந்தேறியது. சிறைக்காவலன் அந்த இராத்திரியிலேயே அந்த நேரத்திலேயே தன் வீட்டாருடன் வசனத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றான்.

என் ஒருவனுடைய, என் ஒருத்தியுடைய இரட்சிப்புக்காக நமது இரட்சகர் என்ன செய்தார் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்போம். ஏராளமான பக்தர்களும் இரத்தசாட்சிகளும் அவருக்காக இருக்கும்போது, நம்மை ஒரு பொருட்டாக எண்ணி கர்த்தர் நம்மையும் தேடிவந்து இரட்சித்தாரே. என் ஒருவனுக்காகவா! என் ஒருத்திக்காகவா! சிந்திப்போம்.

ஜெபம்: “தகப்பனே, எவ்வளவேனும் தகுதியில்லாத என்னைத் தேடிவந்து இரட்சித்தீரே. என்னில் இவ்வளவாய் அன்புகூர நான் எம்மாத்திரம்? இந்த அன்பிற்கு உண்மையாய் சாட்சியாய் நான் வாழ என்னை அர்ப்பணிக்கிறேன். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.