இருட்டிலும் கர்த்தரோடு

தியானம்: 2026 ஜூலை 19 ஞாயிறு | வேத வாசிப்பு: ஏசாயா 50:9-11

YouTube video

உங்களில் எவன் … தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்து கொள்ளக்கடவன் (ஏசா. 50:10).

இருளை யார்தான் விரும்புவோம்? மின்சாரம் தடைபட்டால், உடனே ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்திவிடுவோம். இருள் ஒருவித பயத்தை உண்டு பண்ணும். வாழ்வின் பலவித சூழ்நிலைகள் நம்மை இருளுக்குள் தள்ளி விடலாம். நாமாகவும் இருளான சந்தர்ப்பங்களை உண்டாக்கவும் கூடும். எதுவாயினும் இருள் இருள்தான். இருளில் திரும்பும் திசை தெரியாது. முன்னே என்ன இருக்கிறது என்பதுவும் விளங்காது. ஒரு சிறிய சத்தமும் பயத்தைப் பிறப்பிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் செய்வது என்ன? எப்படியோ தப்பித்துக்கொண்டு, வெளிச்சத்தை நாடியே மனம் பரிதவிக்கும்! பலவேளைகளிலும் நாமே நமக்கு வெளிச்சம் தரும் நெருப்பைக் கொளுத்தியாவது வெளிச்சத்தை உண்டாக்குவோம். பிறருடைய ஆலோசனையை நாடுவோம். பணஉதவியை நாடுவோம். எதுவும் செய்வோம். நமக்குத் தேவை, இருளி லிருந்து நாம் தப்பித்து வெளிச்சத்துக்குள் வரவேண்டும், அவ்வளவுதான்? ஆனால், “இதோ, நெருப்பைக் கொளுத்தி, அக்கினிப் பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் அக்கினி தீபத்திலும், நீங்கள் மூட்டின அக்கினி ஜூவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்” என்கிறார் கர்த்தர். இவை கடினமான வார்த்தைகளாக இருந்தாலும், இது யதார்த்தம். அப்போது என்ன செய்வது, இருளுக்குள்ளேயே மாய்ந்துபோவதா?

ஒரு சகோதரர் பெரும் இருளுக்குள் தள்ளப்பட்டதுபோன்ற ஒரு சூழ்நிலைக்குள் அகப்பட்டு, அதை மாற்றவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவித்தார். வேறு இடம் தேடும்படி, அதாவது வெளிச்த்தைத் தேடும்படி அவருடைய நண்பர்கள் ஆலோசனை கூறினர். அவரும் உறவுகளை முறித்துக்கொண்டு வெளியேறுவது என்று முடிவெடுத்தார். அந்த நாளிலே, அவர் வாசிக்கவேண்டியது ஏசாயா 50ம் அதிகாரம், வாசித்து இறுதிக்கு வந்தபோது, தலையில் இடிவிழுந்ததுபோல இருந்தது. கர்த்தர் தன்னுடன் தெளிவாகப் பேசுவதை உணர்ந்தார். “கர்த்தர் என்னுடன் இருப்பதால் நான் அவருடன் இந்த இருளுக்குள் இருப்பேன்” என்று முடிவு எடுத்தார். அதற்காக அவரது இருள் நீங்கவில்லை. ஆறு ஆண்டுகளின் பின்னர் கர்த்தர் அருமையானதொரு விடுதலையை, யாருக்கும் பாதகம் இல்லாதபடி வழங்கினார். சுயமாக செயற்பட்டால் கர்த்தர் நம்மை அவ்வழியே விட்டுவிடுவார். அது பாதகத்தில்தான் முடியும். “இதோ கர்த்தராகிய ஆண்டவர் துணை செய்கிறார்” என்று வார்த்தை சொல்லுகிறது. ஆகவே ஆண்டவர் இல்லாமல் ஒளியில் நடப்பதைவிட, இருட்டு என்றாலும் அவருடைய பிரசன்னத்தில் நடக்க நாம் ஆயத்தமா? நிச்சயம் கர்த்தர் ஏற்றவேளையில் கிரியை செய்வார்.

ஜெபம்: “ஆண்டவரே, உம்மை உறுதியாய் பற்றிக்கொள்கிறோம். திருவசனமாகிய வேதத்தின் வெளிச்சத்தில் இருளை கடந்திட எங்களுக்கு துணையாயிரும். ஆமென்.”