என்னை எங்கே காண்பார்?
தியானம்: 2026 ஜூலை 20 திங்கள் | வேத வாசிப்பு: யோவான் 1:45-50

… நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார் (யோவான் 1:48).
வனாந்தரத்திலே ஆதரவற்று நின்றிருந்த ஆகாரைக் கர்த்தர் கண்டார். தன்னைக் கண்டவரை அவள் கண்டாளா? தன்னுடைய விண்ணப்பத்துக்குப் பதில் கிடைத்தபோதே, “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று கர்த்தருக்கு ஒரு நாமத்தைச்சூட்டினாள். தகப்பனின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீதைக் கர்த்தர் கண்டார். தன்னைக் கண்டவரை தாவீது கண்டானா? ஆனால் பின்னர், தனது உட்காருதல், எழுந்திருக்குதல், நடத்தல், படுத்திருத்தல் என்று எல்லா நிலையிலும் கர்த்தர் தன்னை அறிந்திருக்கிறார் (சங்.139) என்று பாடி வைத்திருக்கிறார். எப்பொழுதும் ஜெபிக்கின்ற நூற்றுக்கு அதிபதி கொர்நேலியுவைக் கர்த்தர் கண்டார். தன்னை கண்டவரை கொர்நேலியு கண்டாரா? “கொர்நேலியுவே” என்று தேவதூதன் அழைத்ததைக் கேட்டபோதே கொர்நேலியு பயந்து, “ஆண்டவரே என்ன” என்றார்.
பிலிப்பு, நாத்தான்வேலைக் கண்டு, தாங்கள் ஒருவரைக் கண்டதாகவும், மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதி அறிவித்தவர் அவரே, வந்து பார் என்றும் கூறி அழைத்து வருகிறான். நாத்தான்வேல் தம்மிடம் வருவதைக் கண்ட இயேசு, “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். இது ஒன்று. நாத்தான்வேலோ, இயேசு தன்னை எப்படி அறிந்தார் என்று கேட்டான். அதற்கு இயேசு, “பிலிப்பு உன்னை அழைத்து வருகிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்” என்றார். இது அடுத்தது. அத்திமரம் என்று இயேசு குறிப்பிட்டுக் கூறியது என்ன? அந்நாட்களில் அத்திமரத்தின் கீழ் இருந்துதான் வேதத்தை ஆராய்ந்து படிப்பார்களாம். நாத்தான்வேல் மோசேயின் நியாயப் பிரமாணங்கள், தீர்க்கதரிசனங்களைப் படித்துக்கொண்டிருந்ததைக் கர்த்தர் கண்டார். தன்னைக் கண்டவரை நாத்தான்வேல் கண்டானா? இல்லை. கர்த்தரே அவனைக் கண்டார். அவனை முன்னறிந்த கர்த்தர், “கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என சாட்சி சொன்னார். ஆம், ஆவலோடு வேதத்தை படித்து ஆராய்ந்து அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவனாக கர்த்தர் அவனைக் கண்டார். இதைக் கேட்டதும் நாத்தான்வேல் பெருமைப்படுவதற்குப் பதில், “நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்று அறிக்கை பண்ணுகிறான்.
ஒன்று, கர்த்தர் இன்று நம்மை எங்கே, எந்த நிலையில் காண்கிறார், நம்மைக் காண்கிறவரை நாம் உணருகிறோமா? அடுத்தது, ஆண்டவர் நம்மைக் குறித்து என்ன சாட்சி கூறுவார்? இன்று அத்திமரம் தேவையில்லை; எங்கி ருந்தாலும் என்ன நிலையிலிருந்தாலும் கர்த்தருடைய வார்த்தையை வாசித்துத் தியானிக்க முடியும். ஆனால் அதன்படி நடக்க நம்மைத் தந்திருக்கிறோமா? கர்த்தர் நம்மைக் காண்கிறார்!
ஜெபம்: கர்த்தாவே, உமது ஆவிக்கு மறைவாக நான் எங்கே ஓடுவேன்? கர்த்தருடைய கண்களுக்குள் நான் இருக்கிறேன் என்ற தேவபயத்தோடே வாழ உமதருள் தாரும். ஆமென்.