சோதனை நன்மையா? தீமையா?

தியானம்: 2026 ஜூலை 21 செவ்வாய் | வேத வாசிப்பு: யோபு 23:1-12; 42:7-10

YouTube video

அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்; (யோபு 23:10).

விழுந்துபோன இந்த உலகம் உள்ளவரை, மாம்சத்தில் நாம் வாழும்வரை எல்லோருக்குமே சோதனைகள் வரத்தான் செய்யும். சோதனையில் ஜெயம் பெறுகிறவர்கள் சிலர்; விழுந்து போகிறவர்களோ பலர். இது ஏன்? சோதனை வரும் என்று தெரிந்துகொண்டால், ஒன்றில் அதற்கு விலகி நடக்கலாம்; அல்லது அதை எதிர்த்துப் போராடலாம். ஆனால் அதற்கு முக்கியமான ஒன்று நமக்கு அவசியம்: “நான் போகும் வழியை அறிவார் என்ற நம்பிக்கை.”

யோபுவுக்கு தான் எதற்காக யாராலே சோதிக்கப்படுகிறார் என்றுகூட தெரிந்திருக்கவில்லை. மிகுந்த துயரம்; வேதனை; சரீர உபாதை. தேவனைக் கண்டால் அவர் முன்பாக தன் நியாயத்தை எடுத்துச் சொல்வதாக யோபு புலம்புகிறார். முன்னும் பின்னும் இடது புறத்திலும் வலது புறத்திலும் எங்கே திரும்பினாலும் தேவ பிரசன்னத்தைக் காணவில்லையே என்று கதறுகிறார். ஆனால் பின்னர், தான் அவரைக் காணாவிட்டாலும், “நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” என்று உறுதியான ஒரு அறிக்கையை விடுக்கிறார். சோதனைக்குப் பின்னர் பொன்னாக விளங்குவது என்றால், சோதனைகள் நன்மைக்கா தீமைக்கா என்பதை நாம் சற்று சிந்திக்கவேண்டும்.

யோபு 42:7-10 வரையான வசனங்களில், கர்த்தர் யோபுவைக் குறித்து, “என் தாசனாகிய யோபு” என்று மூன்று தடவைகள் கூறுவதைக் காண்கிறோம். இதைத் தவிர ஒரு ஆசீர்வாதம் ஒரு நன்மை என்ன இருக்கிறது? யோபு தனக்கு நேரிட்ட சோதனையின் காரணத்தை அறியாவிட்டாலும், முடிவில் கர்த்தரிடமிருந்து இப்படிப்பட்டதொரு சாட்சியைப் பெற்றுக்கொண்டதுமன்றி, ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களுக்காக ஜெபிக்கும் பொறுப்பையும் கர்த்தர் யோபுவினிடமே கொடுத்தார். அப்போது யோபு மறுக்கவில்லை. அவர்களுக்காக யோபு வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் யோபுவின் சிறையிருப்பை மாற்றிவிட்டார். சகலத்தையும் யோபு இரண்டத்தனையாகவும் பெற்றுக்கொண்டார். சோதனைகளுக்கூடாகக் கடந்துசெல்லுவது மெய்யாகவே மிகவும் கடினம்தான். அதிலும் சோதிக்கப்படுகிறோம் என்று தெரியாமலேயே சோதனையின் வலைக்குள் அகப்படும் நிலைமை மிகக் கடினம். ஆனால் ஒரு காரியத்தை நாம் மறக்கக்கூடாது. சோதிக்கப்படாத எதுவும் தேவனுடைய உபயோகத்துக்கு உதவாது. அதிலும் அக்கினியில் சோதிக்கப்படும்போது, கர்த்தர் அருகில் இருந்து, தமது முகம் நம்மில் பிரதிபலிக்கும் வரையிலும் சோதிக்கப்பட அனுமதிப்பார். ஆனால் வெளியே வரும்போது ஆண்டவருடைய முகச் சாயலைப் பிரதிபலிக்கின்ற பாக்கியம் சொல்லி முடியாது! இப்போ என்ன சொல்லுவோம். சோதனைகள் நன்மைக்கா? தீமைக்கா?

ஜெபம்: பிதாவே, எங்களுக்கு வரும் சோதனைகளாலே நாங்கள் புடமிடப்பட்டு பொன்னாக விளங்கவும், உமது சாயலால் திருப்தியாகவும் கிருபை செய்யும். ஆமென்.