லாமேக்கின் மனபாரம்

தியானம்: 2026 ஜூலை 23 வியாழன் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 5:3-5; 21-31

YouTube video

…. இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான் (ஆதி. 5:29).

வேதாகமத்திலே வம்சவரலாறுகள் மிகவும் முக்கியம்; ஆனால் நாம் அவற்றைப் படிப்பதைத் தவிர்த்து விடுவதுண்டு. வேதாகமத்தில் ஒரு சொல்லோ ஒரு வார்த்தையோ தவிர்க்கப்பட முடியாதது. ஏனெனில் இது தேவனுடைய வார்த்தை. ஆதி.5ம் அதிகாரத்திலுள்ள ஆதாமின் வம்சவரலாற்றில் மகன் சேத்தின் வம்சத்தில் வந்த ஏனோக்கு என்பவரை 21ம் வசனத்தில் காண்கிறோம். இவர் தேவனோடு சஞ்சரித்து காணாமலே போய்விட்டவர். இவருடைய பூட்டனான நோவாவைக் குறித்தும், “தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தார்” என்றும் அறிகிறோம். பூமியிலே அக்கிரமம் நிறைந்திருந்த காலத்திலேயே இவர்கள் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட காலத்திலும் இந்த இருவர் தேவனோடு தங்கள் வாழ்வைக் கழித்தனர் என்றால், இன்று தேவனுடைய வார்த்தை, இயேசுவின் இரத்தம் என்று ஏராளமான ஆசிகளைக் கொண்டிருக்கிற நமக்கு தேவனோடு சஞ்சரிப்பதில் என்னதான் பிரச்சனை?

ஏனோக்கின் மகன் மெத்தூசலா ஒரு முக்கியமான பாத்திரம். இவர் வாழ்ந்த காலம் 969 வருடங்கள். இவர் ஆதாமின் காலத்திலும் வாழ்ந்திருந்தார் என்பது வயதைக் கணித்துப் பார்த்தால் தெரியும். இவர்தான் வேதாகமத்திலும் இந்த உலகத்திலும் அதிக காலம் வாழ்ந்தவர். ஆகவே நிச்சயமாக ஆதாமிடமிருந்து, எப்படி பூமி சபிக்கப்பட்டது, எப்படி பாவம் வந்தது என்று எல்லாவற்றையும் அறிந்திருக்க முடியும். “மெத்தூசலா” என்ற பெயருக்கு “இவன் மரித்தபின்பு இது நிகழும்” என்ற ஒரு அர்த்தமுண்டு. இவருடைய மகன் லாமேக்கு. இந்த லாமேக்கைப் பற்றிய முக்கிய குறிப்பில், “கர்த்தர் சபித்த பூமியிலே.., இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி” இந்த நம்பிக்கையுடனேயே தன் மகனுக்கு நோவா என்று பேரிட்டார் இந்த லாமேக்கு. ஆக, மக்கள் அக்கிரமத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதைக் குறித்து இந்த லாமேக்கு எவ்வளவாகப் பாரப்பட்டிருப்பார் என்பது விளங்குகிறதல்லவா! தன் மகன்மூலம் கர்த்தர் ஒரு காரியம் செய்வார் என்று இவர் நம்பினார். அப்படியே அக்கிரமம் நிறைந்த மக்கள் மத்தியில் நோவா உண்மையுள்ளவனாக நீதிமானாக வாழ்ந்து, கர்த்தருடைய சித்தத்தைச் செய்துமுடித்தார். (ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும். மெத்தூசலா, நோவா பிறக்கும்வரைக்கும் வாழ்ந்த ஒருவர்; ஆனால் ஜலப்பிரளயம் வருவதற்கு முன்னர் அவர் இறந்துவிட்டார். அதாவது அவர் மரித்த பின்னர்தான் இது நிகழ்ந்தது.)

இன்று அழிவை நோக்கி வேகமாக நகருகின்ற இந்த உலகைக் குறித்து, அன்று லாமேக்குவிற்கு இருந்த மனவேதனை இன்று நமக்கு உண்டா? அந்த ஆத்தும பாரம் நமக்குண்டா?

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, அன்றாடம் உம்மைக் குறித்து அறியாதோர் சடுதியான மரணத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அழிவைநோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஆத்துமாக்களைக் குறித்த பாரத்தை எங்களுக்குத்தாரும். ஆமென்.