அற்புதமான மனுஷன் மோசே
தியானம்: 2026 ஜூலை 25 சனி | வேத வாசிப்பு: உபாகமம் 34:1-12

அவர்(கர்த்தர்) அவனை … அடக்கம் பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான் (உபாகமம் 34:6).
பெரிய எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறப்போகிற தருணம் கிட்டிவரும்போது, அது உடைந்து போகுமானால் நமது மனநிலை எப்படி இருக்கும்? ஆனால் சிலசமயங்களில் இப்படிப்பட்ட அனுபவங்களுக்கூடாகக் கடந்துசெல்ல நேரிடலாம்; நேரிட்டாலும் அந்த சமயத்திலும் கர்த்தர் கூட இருந்து, ஏமாற்றத்திலும் ஒரு பெரிய காரியம் செய்வார் என்று நம்மால் ஏற்கமுடியுமா?
இஸ்ரவேலை எகிப்திலிருந்து விடுதலையாக்குவதற்கு, மீதியானிலிருந்த மோசேயிடம், கர்த்தர், “என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா” (யாத்.3:10) என்று அழைத்தார். அப்படியே அவர்கள் விடுதலையாகி பல தடைகளைக் கடந்து, சீன் வனாந்தரத்திலே காதேஸில் இருந்தபோது, நடந்ததையும், கானான் பிரவேசம் மோசேக்கு மறுக்கப்பட்டதையும் கவனித்தோம். மோசே எவ்வளவாய் மனம் உடைந்திருப்பார்! கானானுக்குக் கிட்ட வந்த பிற்பாடு இப்படி ஆகிவிட்டது. தனது இறுதிப் பிரசங்கத்தில், “உங்கள் நிமித்தம் கர்த்தர் என்மேலும் கோபங்கொண்டு, நீயும் அதில் பிரவேசிப்பதில்லை என்றார்” என்று சொன்னதில் அவரின் காயப்பட்ட மனம் தெரிகிறது (உபா.1:37). மோசேயின் பொறுப்பு யோசுவாவுக்குக் கைமாறியபோதும் சாந்தமும் உண்மையுமுள்ள மோசே யோசுவாவின்மீது பொறாமை கொண்டாரா? இல்லை. தன் தலைமைத்துவத்தை மனப்பூர்வமாக யோசுவாவிடம் கொடுத்தார். இறுதியில் கானானுக்கு அருகே எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலுள்ள பிஸ்காவின் கொடுமுடியில் மோசே ஏற, கர்த்தர் அவருக்கு வாக்குப்பண்ணப்பட்ட தேசமனைத்தையும் காண்பித்தார். அதன் பின்னர் மோசே அங்கே மரித்தார். அத்துடன் கதை முடியவில்லை. தனது தாசனாகிய மோசேயைக் கர்த்தர் கைவிடவில்லை. கர்த்தரே மோசேயை அடக்கம் பண்ணினார் என்று காண்கிறோம். இந்த உலக வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத பாக்கியத்தை கர்த்தர் மோசேக்கு அருளினார்.
தமது ஊழியனின் உத்தமத்தில் உறுதியாயிருந்த கர்த்தர், கானான் பிரவேசத்தை மறுத்தும், அவரைக் கைவிடவேயில்லை; யாருக்கும் கிடைக்காத பாக்கியத்தை அருளினார். கர்த்தர் மோசேயை அழைத்தபோது, “எகிப்திலிருந்த தமது ஜனத்தை அழைத்து வரும்படி” என்று கூறியதை நாம் கவனிக்க வேண்டும். பின்னர் நடப்பது என்னவென்பதை அறிந்த கர்த்தர் இப்படிச் சொன்னாரா? என்றாலும் பின்னர் இஸ்ரவேல் தேசத்திலுள்ள மறுரூப மலையிலே மோசேயும் காணப்பட கர்த்தர் அருள் செய்ததையும் நாம் சிந்திக்க வேண்டும். கர்த்தர் ஒருபோதும் தமது பிள்ளைகளுக்கு அநீதி செய்வதில்லை. எல்லாவற்றுக்குள்ளும் நிச்சயம் ஒரு மேன்மையான காரியத்தை வைத்திருப்பார். அதை நாம் விசுவாசிக்கிறோமா!
ஜெபம்: எங்களை அழைத்த தேவனே, நீர் உண்மையுள்ளவர்; உமது கிருபை வரங்கள் மாறாதது. கைவிடாத உமது நேசகரங்களுக்குள் நாங்கள் அடங்கியிருப்போம். ஆமென்.