இயேசுவையே நினைத்திருங்கள்

தியானம்: 2026 ஜூலை 26 ஞாயிறு | வேத வாசிப்பு: எபிரெயர் 12:1-3

YouTube video

ஆகையால் நீஙகள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு … அவரையே நினைத்துக்கொள்ளுங்கள் (எபி. 12:3).

மனதில் இளைத்து, களைத்து, தவிப்பவர்கள் நம்மில் எத்தனைபேர்? ஏன் இந்தத் தவிப்பு? கிறிஸ்தவ வாழ்வு இலகுவானதும் அல்ல, சொகுசானதும் அல்ல. ஏனெனில் கர்த்தருடைய வார்த்தையில் வாழுவதை இந்த உலகம் அனுமதிக்காது. மாத்திரமல்ல, நமது கிறிஸ்தவ வாழ்வு, தேவனுடனான நம்முடைய உறவுக்கு ஆபத்தாய் இருக்கக்கூடிய அனைத்தையும் விட்டுவிட, பொறுமையுடனும் உறுதியுடனும் தேவனை நோக்கி ஓட, பாவத்தை எதிர்த்துப் போராட நம்மை அழைக்கிறது. இதில் நம்மால் வெற்றிபெற முடியுமா? முடியும்! எப்படி?

இதற்கு, நாமே நம்மிடம் கேட்கவேண்டிய கேள்வி ஒன்றுண்டு. “நான் யாரை நினைத்திருக்கிறேன்? என் கண்கள் யாரை நோக்கியிருக்கிறது? ஒரு காரியத்தை நாம் மறக்கக்கூடாது. நாம் இன்று அனுபவிக்கும் பாடுகளைப்பார்க்கிலும், அநேக துன்ப துயரங்களை பொறுமையோடு ஓடி முடித்த அநேக சாட்சிகள் நமக்கு முன்பாக இருக்கிறார்கள். எபி.11ன் விசுவாச வீரரின் சாட்சிகள் ஒருபுறம் இருக்க, நமக்கு முன்னே வாழ்ந்த மிஷனரிகள், இரத்தசாட்சிகள் அடைந்த பாடுகளை நாம் மறக்க முடியுமா? இவர்கள் எப்படி ஓடி முடித்தார்கள்? இவர்கள் தங்கள் பார்வையை இயேசுவையே நோக்கி வைத்திருந்தார்கள். இதுதான் வெற்றிக்கான இரகசியம்.

இயேசு அடைந்த அவமானங்கள், சிலுவையின் கொடூரம், இவற்றை ஏன் அவர் சகிக்கவேண்டும்? தமக்கு முன்னே வைத்திருக்கிற சந்தோஷம், அதாவது தமது பிள்ளைகளுடன் நித்தியத்தில் வாழுகின்ற மகிழ்ச்சியான வாழ்வு- இதற்காகத்தானே இயேசு உலகிற்கு வந்து, பரிசுத்தராயிருந்தும் அத்தனை பாடுகளையும் சகித்தார். சகித்ததால் அவர் தோற்றுப்போனாரா? இல்லை, இன்று அவர் உயிருள்ள ஆண்டவராய், வெற்றி வேந்தனாக பிதாவின் வலதுபாரி சத்தில் வீற்றிருந்து, தமது இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கிறார்.

நமக்கு சோதனைகள், இடுக்கண்கள் வரும்போது, கண்களை யாரை நோக்கித் திருப்புகிறோம்? உலகை நோக்கித் திருப்புவோமானால் எதையும் பொறுமையாகச் சகிக்கமுடியாது. மாறாக, தமக்கு விரோதமாக பாவிகளால் செய்யப்பட்ட அனைத்து அநியாயங்களையும் சகித்த ஆண்டவரை நோக்கித் திருப்புவோமாக. நமது மீட்புக்காக நமக்காக சகலத்தையும் சகித்தவரை நினைத்திருப்போமானால், நமக்கு நேரிடுகிற சோதனைகள் துன்ப துயரங்களுக்காக கர்த்தரைத் துதிக்காமல் இருக்கமுடியாது.

என் இயேசு எனக்காகச் சகித்தார்; நான் மீட்கப்பட்டேன். இப்போது இயேசுவினிமித்தம் நான் பிறருக்காக சகிக்கிறேன், இப்போது அவர்கள் இயேசுவைக் கண்டு அவரைச் சேருவார்கள். இது எத்தனை மகிமை!

ஜெபம்: தகப்பனே, எங்களை நேசித்ததினிமித்தமாய் சகலபாடுகளையும் பொறுமையாய் சகித்தீர். அவ்வித சகிப்புத்தன்மையோடு நாங்கள் நடந்து உமதன்பை பிறருக்கு காட்ட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.