கர்த்தரின் தீர்மானம்
தியானம்: 2026 ஆகஸ்டு 2 ஞாயிறு | வேத வாசிப்பு: உபாகமம் 34:1-12

கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும் (உபா. 34:12).
மோசேயின் பிறப்பின் சம்பவம் அற்புதமானது. பிறக்கின்ற எல்லா ஆண் பிள்ளைகளும் கொல்லப்படும் ஒரு காலகட்டத்தில் மோசே பிறந்தும், அவர் காப்பாற்றப்பட்டார். பின்னர் எந்த அரசன் பிள்ளைகளைக் கொல்லும்படிக்கு கட்டளை கொடுத்தானோ, அதே அரசனின் மாளிகையில் மோசே வளர்க்கப்பட்டார். எகிப்தியனைக் கொன்றுபோட்டு. தப்பியோடிய மோசேயை மீண்டும் தேவன் அதே எகிப்திலிருந்து தமது மக்களை விடுவிக்கும்படி அனுப்பினார். மோசேயும் அதற்குக் கட்டுப்பட்டு, தேவன் சொன்னபடியெல்லாம் செய்து, அற்புத அடையாளங்களைக் காண்பித்து, மக்களையும் விடுவித்து அழைத்துக் கொண்டு எகிப்தை விட்டுப் புறப்பட்டார்.
இவ்வளவாய் தேவபணியைச் செய்தவர், தேவனோடு முகமுகமாய் உறவாடி பத்து கற்பனைகளையும் மக்களுக்காகப் பெற்றுக் கொடுத்த ஒருவரான இவரது வாழ்வு முழுவதுமே ஆசீர்வாதமாகவும், வெற்றிகரமாகவுமே இருந்ததா? அப்படியல்ல; தேவனின் தீர்மானத்தின்படியே நடந்தது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இடத்திற்கு மக்களை வழிநடத்தி வந்த மோசேயை தேவன் அந்த இடத்திற்குள் காலடி எடுத்துவைக்க விடவில்லை. அந்த இடத்தைச் சுற்றிக் காண்பிக்கிறார். ஆணையிட்ட தேசம் இதுதான்; இதை உன் கண்கள் காணும் என்கிறார். ஆனால் நீயோ அதில் பிரவேசிப்பதில்லை என்கிறார். அவர் சொன்னபடியே மோசே அந்த எல்லையில் மரித்தும் போனார்.
பல பாடுகளுக்கூடாக இஸ்ரவேலரை நடத்திவந்த மோசேக்கு, அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் தானும் காலடியெடுத்து வைக்கவேண்டுமென்ற விருப்பம் இருந்திருக்காதா? தேவன் ஆரம்பத்தில், “நான் என் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டேன். அவர்களை அங்கிருந்து விடுவித்து வாக்குப்பண்ணிய பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுவரத் தீர்மானித்தேன். அதற்காக உன்னைப் பார்வோனிடத்தில் அனுப்ப எண்ணினேன்” என்று சொன்னபோது, அதற்குக் கீழ்ப்படிந்து புறப்பட்ட மோசே, தானே அதைச் செய்துமுடித்து, மக்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றுதானே நினைத்திருப்பார். ஆனால் முடிவோ அப்படி அமையவில்லை. கர்த்தர் தலைமைப் பதவியை மாற்றியபோதும், தேவன் சொன்னதைக் கேட்டு, தனது பொறுப்புக்கள் எல்லாவற்றையும் யோசுவாவிடம் ஒப்படைத்து, தனது வாழ்க்கையை அங்கேயே தேவன் சொன்னபடியே முடித்துக் கொண்டார் மோசே. நமது வாழ்வில் அவ்விதமாக தேவனின் திட்டம் அவரது சித்தம் நிறைவேற நாம் விட்டுக்கொடுக்க முடியுமா? நாம் நினைத்ததுபோல வாழ்வில் நடக்காதபோதும், அதை ஏற்றுக்கொள்ளப் பக்குவப்பட்டுள்ளோமா? மோசேயைப் போன்றதான ஒரு தீர்க்கதரிசி அப்புறம் எழும்பினதில்லையென்று வாசிக்கிறோம். அப்படியானால் நாம் எப்படி?
ஜெபம்: அன்பின் பிதாவே, எங்களது வாழ்வில் பலகாரியங்களைக் குறித்து நாங்கள் திட்டமிட்டிருந்தாலும் அவற்றில் உமது சித்தம் மாத்திரம் நிறைவேறும்படி ஜெபிக்கிறோம். ஆமென்.