யோர்தானையும் கடந்திடலாம்
தியானம்: 2026 ஆகஸ்டு 4 செவ்வாய் | வேத வாசிப்பு: யோசுவா 3:1-17

இதோ, சர்வபூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன் படிக்கைப் பெட்டி உங்களுக்குமுன்னே யோர்தானிலே போகிறது (யோசுவா 3:11).
செங்கடலைக் கடந்து வந்தவர்கள், இப்போது யோர்தானுக்கு முன்பாக நிற்கிறார்கள். யோசுவா ஜனங்களைப் பார்த்து, “நீங்கள் உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். தேவன் நாளை பெரிய காரியங்களைச் செய்யப் போகிறார்” என்றார். கர்த்தர் யோசுவாவை நோக்கி, “பயப்படாதே, நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேல ரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்” என்கிறார். செங்கடலைக் கடந்தபோது, கர்த்தர் மோசேயை நோக்கி, “நீ உன் கோலை ஓங்கி, சமுத்திரத்தை நோக்கி உன் கையை நீட்டி அதைப் பிளந்துவிடு” என்கிறார். அப்பொழுது சமுத்திரம் இரண்டாகப் பிளந்து இருபக்கங்களிலும் மதில்போல் நின்றது. ஜனங்கள் வெட்டாந்தரையில் நடப்பதுபோல நடந்து கடலைக் கடந்தார்கள். தேவன் சொன்ன வார்த்தையின்படியே மோசே செய்தார். அவர்கள் வெற்றியாகக் கடந்தார்கள்.
அப்பொழுது நியாயப்பிரமாணம் கொடுக்கப்படவில்லை. ஆனால் இப்பொழுதோ தேவனுடைய பிரமாணம் கொடுக்கப்பட்டாயிற்று. அதைக் கொண்டுள்ள உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு ஆசாரியர்கள் முதலாவது யோர்தானுக்குள் கால்களை வைக்கிறார்கள். “அவர்களுடைய கால்கள் தண்ணீரிலே பட்ட மாத்திரத்தில், மேலிருந்து புரண்டு வரும் யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும்” என்று கர்த்தர் சொன்னார். யோர்தானின் நடுவிலே ஆசாரியர்கள் நின்றுகொண்டிருந்தபோது, மக்கள் உலர்ந்த நிலத்தில் நடப்பதுபோல யோர்தானைக் கடந்துசென்றார்கள். தேவனுடைய வார்த்தைக்கு அவ்வளவு வல்லமையுள்ளது. அதை அவ்வளவு மேன்மையானதாகக் கனம்பண்ணி, ஆசாரியர்கள் பொறுப்போடு சுமந்து செல்லும்படிக்குக் கர்த்தர் சொன்னார். இன்றும் கர்த்தருடைய வார்த்தை மாறாததே; அதே வல்லமையுடையதாகவே இருக்கிறது. ஆனால் அது உடன்படிக்கைப் பெட்டிக்குள் அல்ல, கர்த்தருடைய உடன்படிக்கைக்கு உட்பட்டவர்களாகிய நமது இருதயத்தில் இருக்கிறது. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், தேவ வார்த்தை என்றைக்கும் மாறாததாயும், அழியாததாயும் உள்ளது. அதற்கு நாம் என்ன கனத்தைக் கொடுக்கிறோம்? கர்த்தருடைய வார்த்தையைப் பற்றிப்பிடித்து நடந்தால், வாழ்வில் தடையாய் வருகிற எந்த யோர்தானையும் வார்த்தையின் வல்லமையால் கடந்திடலாம். “உமது வேதம் என் மன மகிழ்ச்சியாய் இராதிருந்தால் என் துக்கத்திலே அமிழ்ந்து போயிருப்பேன்” என்கிறார் சங்கீதக்காரர். ஆம், துக்கத்திலே தாங்குவதும், வழிதெரியாத வேளையில் பாதைக்கு வெளிச்சமாய் அமைவதும் தேவனுடைய வார்த்தையே. அதை என்றென்றைக்கும் பற்றிக்கொள்வோமாக.
ஜெபம்: கர்த்தாவே, உமது வசனம் என் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்ச முமாயிருந்து நீர் காட்டும் வழியில் நான் நடந்திட உதவி செய்யும். ஆமென்.