தோல்வி கண்டனர்
தியானம்: 2026 ஆகஸ்டு 6 வியாழன் | வேத வாசிப்பு: யோசுவா 7:1-15

அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ….கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து… (யோசுவா 7:6).
தொடர்ந்து வெற்றியையே கண்டுகொண்டு, தேவனைத் துதித்துக்கொண்டு சந்தோஷமாக முன்னேறிச் சென்ற யோசுவாவும், இஸ்ரவேலர்களும், திடீர் தோல்வியைக் கண்டதும் காரணம் புரியாது திகைத்தனர். அப்பொழுது யோசுவாவும், மூப்பர்களும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக் கொண்டு சாயங்காலம் வரைக்கும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கிடந்தார்கள். ஆயி பட்டணம் சிறியது, அதைக் கைப்பற்றுவதற்கு அதிகமானோர் தேவையில்லை என்று சொல்லி ஒரு 3000 பேர் மாத்திரம் புறப்பட்டு, அந்தப் பட்டணத்தை முறியடிக்கலாம் என்ற நம்பிக்கையில் போகிறார்கள். ஆனால் நடந்தது என்ன? ஆயி பட்டணத்தார், இவர்களை முறியடித்து துரத்திவந்து, முப்பத்தாறு பேரையும் கொன்றுபோட்டார்கள். இப்பொழுது இஸ்ரவேலர் கலங்கிப் போய், எதுவும் புரியாமல் திகைத்து நிற்கிறார்கள். அப்பொழுது கர்த்தர் யோசுவாவுடன் பேசினார்: “இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள். நான் அவர்களுக்கு கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள். சாபத்தீடானதில் எடுத்து வைத்திருக்கிறார்கள். அதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம் பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன்” என்றார் (வச.10-12).
பாவம் உள்நுழைந்ததும் தேவனுடைய வழிநடத்துதலும், அவரது ஆசீர்வாதமும் நின்றுபோனது; தோல்வி மாத்திரமே அவர்களுக்கு மிஞ்சியது. தேவன் கிரியை செய்ய முடியாதபடிக்கு அங்கே பாவம் தடையாக நின்றது. “பாவத்தைக் கண்டுபிடித்து அதை விலக்குங்கள்; உங்களைப் பரிசுத்தம் பண்ணுங்கள்” என்று தேவன் யோசுவாவை நோக்கிச் சொல்லுகிறார்.
இன்று கிருபையின் காலத்தில் வாழும் நாம், கிருபை உண்டென்பதால் பாவத்தைத் துணிந்து செய்யலாமா? பாவத்தையும் செய்துகொண்டு தேவநீதியையும் நிலைநாட்டலாமா? பவுல் ரோமருக்கு எழுதியபோது, “பாவம் பெருகின இடத்தில் கிருபையும் அதிகமாக பெருகிற்று” என்கிறார். ஆனால், கிருபை பெருகுகிறதே என்று சொல்லி நாம் இன்னமும் பாவம் செய்யலாமா? கூடாதே. தேவன் பாவத்தை முற்றிலும் வெறுக்கிறார். நாம் பாவம் செய்கிறவர்களானால் நாம் தேவனுக்குப் பிரியமாய் வாழவோ, எதையும் செய்யவோ முடியாது. நியாயப்பிரமாணக் காலத்தில் பாவத்துக்கான தண்டனை உடனே கொடுக்கப்பட்டது. அதனால் ஜனங்கள் மத்தியில் தேவபயம் காணப்பட்டது. ஆனால் இன்று நாம் தேவனுக்குப் பயப்படும் பயத்தை நம்மைவிட்டுப் புறம்பே தள்ளிவிட்டுத் துணிகரமாய்ப் பாவம் செய்ய முனைகிறோம். தேவனுடைய கிருபையை அற்பமாய் எண்ணாதிருப்போமாக. நாம் இன்றே தேவசமுகத்திற்கு முன்பாக மனந்திரும்புவோம்.
ஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக் காத்தருளும்;. தேவகிருபையை அற்பமாய் எண்ணிவிடாதிருக்க உதவி செய்யும். ஆமென்.